Published : 21 Jan 2024 09:53 AM
Last Updated : 21 Jan 2024 09:53 AM

தை கிருத்திகை சிறப்பு விழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளை போற்றும் விழா

திருப்போரூர்: தை கிருத்திகை சிறப்பு விழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விழா திருப்போரூரில் தொடங்கியது. இதில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் கிருத்திகை விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தை கிருத்திகை சிறப்பு விழாவை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விழாவாக நடத்த முடிவுசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை இதற்கான விழா தொடங்கியது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று கோயில் திருமண மண்டப வளாகத்தில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விதமாக அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சியை பார்வையிட்டார்.

தொடர்ந்து, ஒரு நாள் முழுவதும் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். கோயிலின் 16 கால்மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கியதை தொடர்ந்து மூலவர் கந்தபெருமானை தரிசனம் செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: தை மாதத்தில் கிருத்திகை மற்றும் தை பூசம் நாட்களில் முருகன் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்போரூர் முருகன் கோயிலில் ஏற்கெனவே கட்டப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்த திருமண மண்டபம் இந்த ஆட்சியில் திறந்துவைக்கப்பட்டது. ரூ.94லட்சம் செலவில் கோயில்அலுவலகம் கட்டும் பணிகள் முடிவுபெறும் நிலையில் உள்ளது. புதியதிருமணம் மண்டபம் கட்டும் பணிக்கு ரூ.6.65 கோடி செலவில் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. சிதம்பர சுவாமிகள் மடம் புதுப்பிக்கும் பணி ரூ.47 லட்சம் செலவில் நடந்துக் கொண்டிருக்கிறது.

தை கிருத்திகையை முன்னிட்டு நாள்தோறும் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி தொடங்கி இரவு வரை அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அன்னதான திட்டத்தை தொடங்கியுள்ளோம். அறுபடை வீடுகளுக்கு உண்டான அனைத்து மூலவரையும் பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் அன்னபிரசாதம் சர்க்கரை, வெண் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளோம். இதேபோல் தைப்பூசத்துக்கும் நாள்முழுவதும் அன்னதானம், அன்னபிரசாதம் வழங்கப்படும். முழுநேர அன்னதான திட்டம் எட்டு கோயில்களில் செயல்பாட்டில் உள்ளது. 2023-24 ஆண்டுக்கான மானியக்கோரிக்கையில் மேலும் மூன்று கோயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, ஒரு வேலை அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோயில்கள் இணைக்கப்பட்டன. இந்தாண்டு மேலும் ஏழு கோயில்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு, சராசரியாக 92 ஆயிரம் பக்தர்கள் ஒரு வேளைஉணவு அருந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதற்கு ஓர் ஆண்டுக்கு ரூ.105 கோடி செலவாகிறது. அன்னதானத்தை காண்காணிக்க உணவு பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகள் என்று போற்றப்படும் திருச்செந்தூர், பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய 6 கோயில்களுக்கு, 60 வயது கடந்து 70 வயதுள்ள 1,000நபர்களை, சுமார் ஓராண்டுக்குள் கட்டணமில்லாமல் இலவச சிறப்புதரிசனம், 2 நாட்கள் உணவு, தங்கும்வசதியோடு அழைத்துச் செல்வதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x