Published : 12 Dec 2023 08:32 PM
Last Updated : 12 Dec 2023 08:32 PM

‘மனித உடல் அமைப்பை கொண்ட மீனாட்சி அம்மன் கோயில்’ - 6 நூல்கள் வெளியிட்ட ஆன்மிக மருத்துவர்

மதுரை: மனித உடல் மற்றும் உள் உறுப்புகள்போல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது என 25 ஆண்டுகள் ஆய்வு செய்து இதுவரை 6 நூல்கள் வெளியிட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த மருத்துவரும், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலருமான டாக்டர் எம்.சீனிவாசன். ‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என சித்தர்கள் சொன்னார்கள். ஆனால், ‘காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா’ என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வரிகள் மூலம் உடல் நலம் காப்பதன் அவசியத்தை உலகுக்கு உணர்த்தினார். அதற்கு முன்னரே திருமூலர் தனது திருமந்திரத்தில், மனித உடலை நடமாடும் கோயில் என்றும், உடலின் உள்ளே உறையும் உறுப்புகளே மெய்யான தெய்வங்கள் என்றும் கூறினார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் / வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல் / தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் / கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே (திருமந்திரம் 1,823). இப்பாடலின் மூலம் ஆன்மிகத்தில் மருத்துவத்தை தேட வைத்து மனித உடலில் உள்ளவைகளே கோயிலுக்குள்ளும் உள்ளன எனக் கற்பித்தார் திருமூலர். அதன்படி உடலின் உள்ளே உள்ள உறுப்புகளைப்போலவே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ளது என கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வு செய்து ஆகாய தாமரை, பொற்றாமரையும் உயிரின்பயணமும், பொற்றாமரையும் திருவாசகமும், பொற்றாமரை-உடம்பே ஆலயம் உட்பட 6 நூல்கள் வெளியிட்டுள்ளார் மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ஏஆர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலருமான டாக்டர் எம்.சீனிவாசன்.

உள் உறுப்புகளும் இறைவனே: இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆன்மிகத்தில் இறைவனைக் கண்ணால் கண்ட அடியவர்கள் பலரும், தாங்கள் இறைவனைக் கண்ட அனுபவத்தை ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் மாணிக்கவாசகர் தான் இறைவனைக் கண்ட பேரின்பத்தை பிறரும் பெற்று மகிழ வேண்டும் என்று நினைத்தாலும் அவரால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் மாணிக்கவாசகரின் விருப்பத்தை அறிந்த இறைவன் மாணிக்கவாசகரின் உள்ளத்து உணர்வுகளை எழுத்துக்களாக்கி ‘திருவாசகம்’ என்ற பெயரில் சேர்த்துள்ளார்.

ஞானிகள் தவிர்த்து மற்றவர்களால் இறைவனை உணரத்தான் முடியுமேயன்றி காண இயலாது. கண்ணில் காணாத, ஆனால் உணர முடிந்த இயற்கையின் சக்தியை இறைவன் என்று ஏற்று கொண்டாடும் நாம், கண்ணில் காணாத உள் உறுப்புகளையும் இறைவனுக்குச் சமமாக ஏற்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க உள் உறுப்புகள் சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு உறுப்பு தன் நிலையை இழந்தாலும் உடலின் ஆரோக்கியம் சமநிலையை இழந்து விடும். சமநிலையை இழந்த உடம்பு அடுத்ததாக சமாதி நிலையை நோக்கி பயணிக்கும். இதைத் தடுக்க, விஞ்ஞானத்தில் ஏராளமான உபாயங்கள் கையாளப்பட்டு வருகின்றன.

நடமாடும் கோயில்: அவற்றில் ஒன்றுதான், ‘மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை’. இச்சிகிச்சையின் மூலமாக மற்றவரின் உறுப்புகளை தானமாகப் பெற்று தன்னுள் பொருத்தி மீண்டும் சமநிலையை அடையச் செய்ய முடியும். தானமாக பெற்று தன்னுயிரை காக்கும் அந்த உறுப்பை தெய்வமாகப் பாவிக்கிறோம். திருமூலரும் மனிதனை, நடமாடும் கோயில் என்று குறிப்பிட்டார். ஞானத்தின் வாயிலாக உடலின் உள்உறுப்புகளின் உருவத்துக்கேற்ப பல்வேறு தெய்வங்களை உருவகித்துக் காட்சிப்படுத்தியிருக்கும் இடம்தான் கோயில்கள். மனித உடலில் பாதம், கணுக்கால், முன்கால், தொடை, இடை, வயிறு, மார்பு, கைகள், கழுத்து, முகம், தலை, உச்சி என உடலின் பாகங்கள் அமைந்துள்ளதுபோல், உடலின் பாகங்களுக்கு இணையாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மண்டபங்கள் எழுப்பி உள்ளனர்.

எம்.சீனிவாசன்

இம்மண்டபங்களுக்கு முறையே அஷ்ட சக்தி மண்டபம், வேட மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப்பிள்ளை மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குளம், கிளிக்கூண்டு மண்டபம், மகா மண்டபம், கம்பத்தடி மண்டபம், வெள்ளியம்பலம், சிவன் சந்நிதி, நூறுகால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளன. அதில் தலை சிவன் சந்நிதியாகவும், மார்பு சக்தி பீடமாகவும், பொற்றாமரையான வயிறு வைணவமாகவும் உள்ளன.

கோயிலுக்குள் உள்ள தெய்வங்களை வழிபடச்செல்வதும், கோயிலுக்குள் செல்லாத நாட்களில் நமது உடலையே நடமாடும் கோயிலாகவும் கருதி வழிபடுவதோடு, அதனை ஆரோக்கியமாக பேணிக் காக்க வேண்டும். அதோடு உடல் உறுப்புகளை தானம் செய்யவும் முன்வர வேண்டும். அதற்காகத்தான் தமிழக அரசும் உடல் உறுப்புகள் தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்குகிறது. இதுகுறித்து 25 ஆண்டுகள் ஆய்வு செய்து அறிவியல் காரணங்களோடு ஒப்பிட்டு 6 நூல்களை வெளியிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x