Published : 05 Jan 2018 10:10 AM
Last Updated : 05 Jan 2018 10:10 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 21

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்

ஆற்றாது வந்து உன்னடி படியுமாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

அதாவது, நந்தகோபன் (கண்ணன்) வீட்டில் உள்ள பசுக்கள் எல்லாம் கண்ணன் தொட்டுப் பார்த்தாலே பூரிப்படைந்து ஊற்றமடைந்து , பெருத்து ந்மிர்ந்து நிற்கின்றன. பால் சுரப்பதற்காகக் கொண்டு வந்த பானைகளையெல்லாம் நிறைத்து வழிந்து ஓடும்படியாக பால் சுரக்கின்றன.

தமக்கென சிறிது பால் கூட மடியில் தேக்கி வைத்துக் கொள்ளாமல், தம்மிடம் வந்தவர்களுக்கு ஏற்றத் தாழ்வில்லாமல் பால் சுரக்கின்றன. எனவே அவை வள்ளல்கள் போல் திகழ்கின்றன.

அவ்வாறான வள்ளல் பெரும்பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே! நாங்கள் வந்திருப்பதை அறியமாட்டாயா? பக்தர்களுக்கு அருள்வதில் உறுதியுடையவனன்றோ நீ? வேதங்களாலும் ஞானிகளாலும் அளவிட்டு அறிய முடியாத பெரியவனே! த்ரிவிக்ரம அவதாரம் எடுத்து உலகளந்தவன், விஸ்வரூபமெடுத்து அனைத்தும் தன்னுள் வைத்துக் காட்டியவன், யசோதா பிராட்டிக்கு தனது பிஞ்சு வாயில் உலகம் முழுவதும் காட்டியவன் அல்லவா!

இந்த உலகுக்கே பேரொளியாய்த் திகழ்பவனே! துயில் எழுவாயாக! உனது பகைவர்கள் உன்னிடம் தோற்றுப்போய் தனது வலிமை இழந்து, வேறு வழியின்றி உனது வாசலுக்கு வந்து உனது பாதங்களில் அடிபணிவார்கள் அல்லவா! அதேபோல், நாங்கள் வேறு வழியின்றி, உனது பொன்னடி போற்றி உன் வாசல் வந்துள்ளோம். உன்னைப் புகழ்ந்து பாடுகிறோம். என ஆண்டாள் அருளுகிறாள்.

இந்தத் திருப்பாவைப் பாடல், சரணாகதித் தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ‘புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்பது போல், வேறு சரணம் இல்லாத நாங்கள் உன்னைச் சரண் புகுந்தோம். என்கிறார் ஆண்டாள்.

இந்தப் பாடலை தினந்தோறும் பாடி வருவோருக்கு எதிரிகள் பயம் அறவே இல்லாமல் போய்விடும். இறைவன் மீது மாறா பக்தி உண்டாகும். நம்மை இன்னும் பக்குவப்படுத்திவிடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x