Published : 02 Nov 2023 05:21 AM
Last Updated : 02 Nov 2023 05:21 AM

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று கும்பாபிேஷகம் செய்த பட்டாச்சாரியார்கள்.

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று (நவ. 1) கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1996, 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின்னர்நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, அக்.30-ம் தேதியாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அக். 31-ம்தேதி காலை, மாலையில் வேள்விகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று காலை யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, திருவாராதனம், சக்தி சங்கரஹணம், யாத்ரா தானம், கும்ப பிரயாணம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோயில் பட்டாச்சாரியார்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன்,ராஜாபட்டர் ஆகியோர் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் மலர்கள் தூவி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, மகா தீபாராதனை, சர்வ தரிசனம் நடைபெற்றது.

இந்த விழாவில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி, நாமக்கல் நகரம் முழுவதும் வாகனப் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. தனி கட்டுப்பட்டு அறை அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கோயில் அருகில் பக்தர்களுக்குப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, எஸ்.பி. ச.ராஜேஸ்கண்ணன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் மல்லிகா, ஸ்ரீனிவாசன், செல்வசீராளன், அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் இளையராஜா பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x