Published : 09 Jan 2018 10:14 AM
Last Updated : 09 Jan 2018 10:14 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தை பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைகருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

அதாவது , கம்சனால் சிறைவைக்கப்பட்ட தேவகி வசுதேவருக்கு, தேவகி வயிற்றில் கண்ணபிரான் வரமாக வந்து பிறந்தான். அப்போது இரவு நேரம். கண்ணன் பிறந்ததும் கேட்ட அசரீரியின்படி, கண்ணனைக் காப்பாற்ற அந்த நள்ளிரவில், வசுதேவர் பிறந்த சிசுவை எடுத்துக் கொண்டு, யமுனையைக் கடந்து கோகுலத்தில் நந்தகோபன் - யசோதா வீட்டில் யசோதையின் அருகில் கிடத்திவிட்டு, அங்கிருந்து பெண் சிசுவைக் கொண்டு வந்து தேவகியிடம் வைத்தார். அதுமுதல் கண்ணன், யசோதா-நந்தகோபரின் மகனாக வளர்ந்துவந்தார்.

வசுதேவரும் தேவகியும், நந்தகோபனும் யசோதையும் என நால்வரும் செய்த தவப்பலனாய் இந்த நால்வருக்கும் ஒரே மகனாக, ஒருத்தியிடம் பிறந்து ஒருத்தியிடம் வளர்ந்தார் கண்ண பரமாத்மா!

தன்னைக் கொல்வதற்காகப் பிறந்த சிறுவன் எங்கிருக்கிறான் என்பதை அறியாமல் பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த கம்சனுக்கு, கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வரும் உண்மை தெரிந்ததும் பய உணர்வு, அடிவயிற்றில் தீக்கொழுந்தாகி, உடம்பெல்லாம் பரவி கொதித்துத் தகித்துக் கொண்டிருந்தது. அதையே தான் கொல்ல நினைத்தவன் , தன்னையே கொல்ல நினைத்ததை தன் வயிற்றில் நெருப்பாகப் பற்றியெரியக் காரணமாக இருந்த நெடுமால் கண்ணன். கண்ணனான உன்னை த் தொழுதுவந்தோம். பல்வேறு நாமங்கள் கூறி, அர்ச்சித்து வந்தோம்.

எமது நோன்புக்கு வேண்டிய பொருளான பறையை, தருவாயென்றால், திருவாகிய மகாலக்ஷ்மி விரும்பும் உன்னிடம் உள்ள திருவுக்குத் தக்க செல்வத்தையும் உன்னுடைய வீரபராக்கிரமங்களையும் நாங்கள் பாடி, உன்னைப் பிரிந்து வாழும் துன்பமும் மறந்து, குளிரிலே வந்த வருத்தமும் தவிர்த்து, மகிழ்வெய்துவோம் என்று ஆண்டாள் தெரிவிக்கிறாள்.

பகவானின் பெருமைகளைப் பாடுவதிலேயே பக்தர்கள் இன்பம் அடைகின்றனர். அவனை உணர்ந்து, அவன் பெருமைகளைப் பாடி அதுவே தங்களுக்கு வீடாக அவன் திருவடியை அடைவர் என்பது சத்தியம்!

இந்த திருப்பாவைப் பாடலை மனமுருகிப் பாடுங்கள். மங்கல காரியங்கள் யாவும் வீட்டில் நடந்தேறும். மகாவிஷ்ணுவும் மகாலக்ஷ்மியும் ஒருசேர, நம் வீட்டை சுபிட்சமாக்கி அருள்வார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x