Published : 27 Dec 2017 10:00 AM
Last Updated : 27 Dec 2017 10:00 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி

நினைத்து முலைவழியே நின்று பால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழ நின்வாசல் கடை பற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்தில்லத்தாளும் அறிந்தேலோ ரெம்பாவாய்!

அதாவது, பசுமாடுகள் தங்களது கன்றுக்குட்டிகளை அவற்றின் பசியாற்றுவதற்காக இரக்கப்பட்டு அழைக்கும். பசு தனது குட்டிகளை அழைக்கும் ஓசை, இரக்கத்துடன் அழைப்பது போல், சுரந்த பால் அவர்களின் இல்லத்தை நனைத்து சேறாக்கும்.

அவ்வாறு மிகுந்த வள்ளல் தன்மை உடைய செழிப்பான பசுக்களைக் கொண்ட செல்வந்தனின் தங்கையே! இலங்கை வேந்தன் கொடியவன் ராவணனைக் கொன்ற ராமபிரானின் வீரத்தையும் புகழையும் பாடியபடி உனது வீட்டு வாசலில், மார்கழி மாத பனி எங்களது தலை மீது பொழிந்து, நடுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதைப் பொருட்படுத்தாது நோன்பு நோற்க உன்னை அழைத்துக் காத்திருக்கிறோமே!

நீ மறுமொழி கூறாமல், வாய் மூடி, கண் வளர்த்தபடியே பேசாதிருக்கிறாயே. நாங்கள் உன்னைக் கூவி அழைக்கும் குரல் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளோரெல்லாம் உறக்கம் கலைந்துவிட்டனர்.

ஆனால் நீயோ, வாளாவிருக்கிறாயே. உடனே எழுந்து திருமாலின் புகழ்பாடி எங்களுடன் சேர்ந்து பாவைநோன்பு நோற்க வா என்று ஆண்டாள், அன்பொழுக அழைக்கிறாள்.

இந்தத் திருப்பாவைப் பாடலை திருமாலை நினைத்து மனமுருகப் பாடுங்கள். மங்கல காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x