Last Updated : 07 Dec, 2017 10:18 AM

 

Published : 07 Dec 2017 10:18 AM
Last Updated : 07 Dec 2017 10:18 AM

சுவாமி சரணம் 21: ஐயப்பன் அருளிய பிறவி விடுதலை!

‘உனக்காக செய்றேன்’ என்று யாரேனும் நம்மிடம் சொல்லியிருப்பார்கள். செய்வார்கள். நாமும் ‘உனக்காகத்தான் செய்றேன்’ என்று சொல்லியிருப்போம். செய்திருப்போம். ஆனால் இந்த உலகத்துக்காக, உலகத்தின் நன்மைக்காக, உலகின் மேன்மைக்காக, உலக மக்களின் சந்தோஷத்திற்காக... அனவரதமும் தவம் செய்துகொண்டிருக்கிறார் சபரிமலை சாஸ்தா, ஐயன் ஐயப்ப சுவாமி.

‘இதோ... இந்த சபரிமலையில் இருந்துகொண்டு எல்லோரையும் காத்தருள வேண்டும்’ என்று வைத்த கோரிக்கையை ஏற்று, இன்றளவும் நமக்காக, தவமிருந்து கொண்டிருக்கிறார் சபரிகிரிவாசன். இவர் செய்து வரும் தவத்தால் கிடைக்கும் பலனை, நாமெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தவமிருந்தபடியே இந்த பந்தளராஜகுமாரன், நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளிக் கொண்டிருக்கிறார். பரம்பரை பரம்பரையாக நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறார் இந்த வள்ளல் பெருந்தகை!

‘‘இன்றைக்கும் உலகின் எந்த மூலைக்கோ... ஐயப்ப பூஜைக்கோ, உபந்யாஸத்துக்கோ செல்லும் போதெல்லாம்... அங்கே குறைந்தபட்சம் சாமி அண்ணாவின் நான்கைந்து சிஷ்யர்களையாவதுப் பார்த்துடுறேன். இன்றைக்கு நம்மூர்ல மிகப்பெரிய குருசுவாமின்னு யாரெல்லாம் இருக்காங்களோ... அவங்கள்லாம் ‘சாமி அண்ணாவை நான் பாத்துருக்கேன். அவர்கிட்ட விபூதி பிரசாதம் வாங்கியிருக்கேன். அவரோட உக்கார்ந்து சாப்பிடுற பாக்கியம் கிடைச்சிருக்குன்னெல்லாம் சொல்லிச் சொல்லி பூரிச்சுப் போறாங்க. ‘நீங்க அவரோட கொள்ளுப்பேரனாமே... அவரைப் போலவே ஐயப்ப சாமியோட பக்தனா நீங்களும் இருக்கீங்க. நல்லாருங்க தம்பி... நல்லாருப்பீங்க’ன்னு சொல்லி, கன்னம் தடவி, நெத்தி வளிச்ச பெரியவங்களைப் பாத்து, நெகிழ்ந்து போயிருக்கேன்’’ என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார் அரவிந்த் சுப்ரமண்யம்.

சபரிமலை யாத்திரையின் தத்துவம் - மிக நுட்பமானது. நம்

வீட்டிலிருந்து மலைக்கு போகும் யாத்திரை அல்ல அது. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஜீவாத்மாவான நாம் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கும் யாத்திரைதான் சபரிமலை யாத்திரை.

அது 1988ம் வருடம். பங்குனி உத்திர உத்ஸவத்தை முடித்துக் கொண்டு பம்பைக்கு வந்தர் சாமி அண்ணா. பம்பா கணபதி ஆலயத்தின் முன்னே நின்று கொண்டு பிள்ளையாரை வணங்கினார். சிஷ்யர்கள் சிலரை அழைத்தார்.

“சபரிமலை யாத்திரைங்கறது வெறும் வேண்டுதல் இல்ல. சும்மா ஜாலியா வந்துட்டுப் போற மாதிரியான பயணமில்ல. நமக்குள்ளே இருக்கற ஐயப்பனை நாமளே உணரும் அற்புதமான யாத்திரை இது. அதற்கான முயற்சிதான் தொடர்ந்துகிட்டே இருக்கிற இந்த யாத்திரை. அதை அடையற வரைக்கும் ஐயப்பனோட பேரொளியை உணர்ற வரைக்கும் யாத்திரையைத் தொடரணும். தொடர்ந்துகிட்டே இருக்கணும்.

அடுத்த வருஷம் பங்குனி உத்திரத்துக்கு நீங்க யாரும் பாலக்காட்டுக்கு வர வேண்டாம். நீங்கள் எல்லோரும் அவரவர் சக்திக்கு உட்பட்டு ஐயப்பனுக்கு என்னவிதமாலாம் கைங்கர்யம் செய்ய முடியுமோ, அப்படிச் செய்யுங்க. செஞ்சிகிட்டே இருங்க. தொடர்ந்து மலைக்குப் போறதையும் மலைக்கு வர்ற பக்தர்களுக்கு அன்னதானம் பண்றதையும் விட்டுடாதீங்க’ என்று சாமி அண்ணா சொல்லிவிட்டு, எல்லோருக்கும் விடை கொடுத்தார்.

சாமி அண்ணாவின் இந்தப் பேச்சு பலருக்கும் பலவித எண்ணங்களை உள்ளுக்குள் உண்டுபண்ணியது. ஒருவேளை, சாமி அண்ணாவுக்கு நம்ம மேல எதுனா கோபமோ? என்று யோசித்தார்கள். அவர் கோபப்படும்படி ஏதேனும் செய்துவிட்டோமோ என்று பதறினார்கள். குழம்பினார்கள். தவித்தார்கள். ஒன்றும்புரியாமல் மலங்க விழித்தார்கள்.

ஓயாமல் சேவை செய்த அவரை, கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவை, பூலோகத்திலிருந்து தன்னுடைய லோகத்தில் சேவை செய்ய ஐயன் அழைத்துக் கொள்ள திருவுளம் கொண்டுவிட்டான். இதை உணர்ந்தார் சாமி அண்ணா.

அவர் உணர்ந்துவிட்டார் என்பதை பக்தர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. பின்னாளில் அவர் எழுதிய டைரியில், இதுகுறித்து அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, அடுத்த பங்குனி உத்திரத்தில் பகவானுடன் கலந்து விடப்போகிறேன் என்று எழுதிவைத்திருப்பதைப் படித்துவிட்டு, படித்ததை பலரும் பலரிடமும் பகிர்ந்து கொண்டதை, நினைக்கவே சிலிர்ப்புதான் மேலிடுகிறது.

உடலை உகுக்க ஒரு காரணம் வேண்டாமா. உடல் வேறு உயிர் வேறு என்று பிரிவதற்கு ஏதேனும் காரியம் நடந்தாகவேண்டாமா. சாமி அண்ணா, ஒரு வாரமாக உடல் நலம் குன்றி இருந்தார். அந்த வருட பங்குனி உத்திர உத்ஸவ விழா, சபரிமலையில் தொடங்கியது.

சாமி அண்ணா கோவையில் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

திடீரென எழுந்தார். “சபரிமலையில் பங்குனி உத்திர பூஜைகள்

தொடங்கிருச்சு. தீபாராதனைக்கு நேரமாகிருச்சு. என்னைத் தேடுறாங்க. என்னைக் கூப்பிடுறாங்க. நான் போகணும்’ என்று படுக்கையை விட்டு சட்டென்று எழுந்தார். அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். கண்களை மூடிக் கொண்டார். மனதில் ஐயன் ஐயப்ப சுவாமியை நினைத்துக் கொண்டார். ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கைகூப்பிச் சொன்னார். மூச்சை நன்றாக உள்ளிழுத்தார்.

கடைசிநிமிடம் வரை இறை நினைப்பிலேயே லயித்திருப்பது வரம். யோகிகளும் மகான்களும் இதைத் தேடித்தான், இதை அடையவேண்டும் என்றுதான் தபஸ் செய்தார்கள். யோகீனாமபி துர்லபம் என்கிறது சாஸ்திரம்.

“சுவாமியே சரணம் ஐயப்பா!’’ என்று சொல்லிக் கொண்டிருந்த நிமிஷத்தில்... தன் ஜீவஜோதியை ஐயப்பனின் அந்த ஆனந்த ஜோதியுடன் இணைத்து இரண்டறக் கலந்தார் சாமி அண்ணா. பங்குனி உத்திர உதஸ்வ வேளையில்... ஐயப்பனுடன் ஒன்றிப்போனார் சாமி அண்ணா.

பிறப்பு நிஜம். அது ஐயப்பன் அருள். வாழ்க்கை நிஜம். அது ஐயப்பனின் பேரருள். மரணமும் நிஜம். அது ஐயப்பன் அருளும் பிறவிவிடுதலை.

நல்ல ஆத்மாவுக்கு, உண்மையான சேவகனுக்கு ஒருபோதும் அழிவில்லை. சாமிஅண்ணாக்கள் ஏதோவொரு ரூபத்தில் இருந்து கொண்டு, ஐயப்பனுக்கும் ஐயப்பசாமிமார்களுக்கும் இன்றைக்கும் சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆழ்ந்த பக்திக்கு மட்டுமில்லை... ஆத்மார்த்தமான பக்தர்களுக்கும் ஒருபோதும் அழிவில்லை.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x