Published : 23 Dec 2017 10:43 AM
Last Updated : 23 Dec 2017 10:43 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 8

கீழ்வானம் வெள்ளென்றூ எருமைச்சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்ப் பாடிப் பறைகொண்டு

மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதிதேவனை சென்று நாம் ஸேவித்தால்

ஆவாவென்றாராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!

அதாவது, விடியற்காலைப் பொழுதில், எருமைகளூம் பசுக்களும் சிறுமேய்ச்சலுக்குச் சென்றுவிட்டன. அதாவது, காலைப்பொழுதில் பால் கறப்பதற்கு முன்னர், மாடுகளை தங்கள் விளைநிலங்களில் வைத்து, கொஞ்சம் பால் கறப்பது வழக்கம்.

அப்படிச் செய்யும்போது மாடுகளும் உற்சாகத்துடன் அதிகமான பால் சுரக்கும் என்பதால்தான், வள்ளல் பெரும்பசுக்கள் என்று சொல்லிச் சிலாகிக்கிறாள் ஆண்டாள்.

அவ்வாறான மாடுகள், மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டன. கிழக்கே வானம் வெளுத்துவிட்டது. சூர்யோதயம் ஆகிவிட்டது. எனவே ஆயர்குலப் பெண்கள் ஏற்கெனவே நோன்பு நோற்கக் கிளம்பிச் செல்கின்றனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்தி, உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். குதூகலத்துடன் எழுந்து வா.

பறவையின் உருவில் வந்த அசுரனையும் சானூரன், முஷ்டிகன் எனும் மல்லர்களையும் வதம் செய்த கண்ணனின் நாமத்தைப் பாடி, நாம் அவனை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தும் தர, அவன் காத்துக் கொண்டிருக்கிறான். எனவே, உடனே எழுந்து வருவாய் என உருகி உருகி அழைக்கிறாள் ஆண்டாள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x