Published : 20 Dec 2017 09:11 AM
Last Updated : 20 Dec 2017 09:11 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூயபெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர்த்தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போயப் பிழையும் புகுதருவான் நின்றளவும்

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!

பாவமன்னிப்பு நோன்பு இது! அதாவது, மாயச் செயல்கள் பல புரிபவன். வட இந்தியாவில் உள்ள மதுராபுரியில் பிறந்தவன். பாரதத்தின் ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றான யமுனைக் கரையிலே வாழ்பவன். இருளைப் போக்கவல்ல ஒளிவிளக்கைப் போல் ஆயர் குலத்தில் தோன்றி, ஆயர்குலத்தையே பிரகாசிக்கச் செய்தவன்.

மலடி என்ற வார்த்தையை நீக்கி, தன் தாய் தேவகி, யசோதை ஆகியோருக்குக் குழந்தையாகத் தோன்றியவன். யசோதா பிராட்டியால், கண்ணிநுண் சிறுத்தாம்பினால் (உரலில்) கட்டுண்ணப் பண்ணியதால், வயிற்றில் தழும்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தாமோதரன் எனப் பெயர் பெற்றவன்.

அதாவது, தாயாருடைய அன்புக்காகக் கட்டுப்பட்டவன். இப்படியெல்லாம் இருக்கிற கண்ணனை, நாம் குறிப்பாக மார்கழி மாதத்தில் (மற்ற மாதங்களிலும், ஏனைய நாட்களிலும்) அதிகாலையில் நீராடி, தூய்மையாக இருந்து, அவனின் பாதாரவிந்தங்களில், மலர்களால் அர்ச்சித்து, வாயாற அவனுடையப் புகழைப் பாடி, மனதில் அவனுடைய திருமேனியை நிறுத்தி, நிர்சிந்தனையாகத் தொழுதால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீயினில் இட்ட தூசு போல், உருத்தெரியாமல் அழிந்துவிடும் என்கிறாள் ஆண்டாள்!

திரிகரண சுத்தியாக, மனம், வாக்கு, காயம் ஆகியவை தூய்மையாக, கண்ணபரமாத்மாவின் சிந்தனையில் திளைத்து, அவனை அர்ச்சித்தால், இதுவரை செய்த பாவங்கள் இருக்குமிடம் தெரியாமல் அழிந்துவிடும்.

அவனுடைய உருவமும் சிந்தனையும் நம் மனதில் ஆழப்பதிந்துவிட்டால், இனிமேலும் நாம் பாவங்களேதும் செய்யாதவராக ஆகிவிடுவோம் என்பது உறுதி என்று போற்றிக் கொண்டாடி, நமக்கு அறிவுறுத்துகிறாள் கோதை ஆண்டாள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x