Published : 22 Dec 2017 10:23 AM
Last Updated : 22 Dec 2017 10:23 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 7

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே

காசும்பிறப்பும் கலகலப்புக் கைபேர்த்து

வாச நறுங்குழலாய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ

தேச முடையாய்! திறவே லோரெம்பாவாய்!

குருவி இனங்கள் மற்றும் பிற பறவையினங்கள் பொழுதுவிடிந்துவிட்டது என்று தமக்கே உரிய மொழியில், கீசுகீசு எனக் கூவுகின்றன. இரவெல்லாம் ஒரே இடத்தில், ஒன்றாக இருந்துவிட்டு, இரை தேட பகல் பொழுது முழுவதும் பிரியப்போகிறோமே என்று தமது குஞ்சுகளுடன் அவை பேசுவது பேரிரைச்சலாக உள்ளது.

ஆயர்பாடியில் பாலும் தயிரும் மிகுந்தியாக உள்ளதால், மணங்கமழும் அழகிய கேசத்தை உடைய ஆயர் குலப்பெண்கள், மத்தைக் கொண்டு தயிர் கடையும்போது, அவர்கள் அணிந்திருக்கும் காசு மாலை, அவர்களது தாலியும் ஒன்றோடொன்று உரசுவதால், கலகலவென்றும் சப்தம் எழுகின்றன. அந்தச் சத்தமெல்லாம் கேட்கவில்லையா உனக்கு?

கேசி என்னும் அரக்கனைக் கொன்றதால், நாராயணனுக்கு கேசவன் எனும் பொருள் கொண்ட பெயர் உண்டு. அழகிய கேசத்தை உடையவன் என்றும் பொருள் உண்டு. நாங்கள் நாராயணனான கேசவனைப் பாடிக் கொண்டு வரும் ஒலியைக் கேட்டு, கிருஷ்ணானுபவத்திலே திளைத்து அதைப் பிரிய மனமில்லாமல் அவனுடைய நாமத்தைக் கேட்டவாறே, முகமலர்ச்சியுடன், நீ அமைதியாக இருக்கிறாயே. உடனே எழுந்து கதவு திறந்து பாவை நோன்பு நோக்க வாராய் என ஆண்டாள் தன் தோழியரை மட்டுமின்றி எல்லாப் பெண்களையும் அழைக்கிறாள்.

மந்தரமலையை மத்தாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்ததாலன்றோ அமிர்தம் கிடைத்தது. அதேபோல், தினந்தோறும் இந்தப் பாடலைப் பாடி உள்ளம் என்னும் பாற்கடலில் அவனுடைய திருநாமத்தை உச்சரித்து வந்தால், கடைந்தால் தயிரிலிருந்து வெண்ணெய் கிடைப்பது போலவே, அவனுடைய பேரருள் கிடைக்கும் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x