Published : 17 Dec 2017 10:21 AM
Last Updated : 17 Dec 2017 10:21 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

இந்தப் பாடலின் மூலம் பாவை நோன்பு நோற்பது குறித்துச் சொல்லியிருக்கிறார் ஆண்டாள். இவ்வுலகில் வாழும் மக்களே கேளுங்கள். நாம் பாவை நோன்பு நோற்கும்போது, கடைபிடிக்கவேண்டிய செயல்கள் என்னவென்று, கேளுங்கள்.

நெய், பால் முதலான உணவுகளைச் சாப்பிடமாட்டோம். விடியற்காலையில், சூர்யோதயத்துக்கு முன்னரே எழுந்துவிடுவோம். குளித்துவிடுவோம். அதேசமயம், எங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காக, கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளமாட்டோம். வாசனை மலர்களை சூடிக் கொள்ளமாட்டோம். நன்னெறியாளர்கள், ஆகாது என்று எதையெல்லாம் சொல்லிவைத்தார்களோ, அதை அறவே செய்யமாட்டோம். பிறருக்குத் தீங்கு தரும் சொற்களை ஒருபோதும் பேசமாட்டோம்.

அதேசமயம், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் புகழைப் பாடிக்கொண்டே இருப்போம். அற வழியில் நடப்போம். தர்மசிந்தனையுடன் இருப்போம். தர்ம காரியங்களைச் செய்து பிறருக்கு உதவியாக இருப்போம்.

இப்படியெல்லாம் இருந்துகொண்டே, பாவை நோன்பு விரதத்தையும் மேற்கொள்வோம். என்கிறாள் ஆண்டாள். அதுமட்டுமா. தர்மகாரியங்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே தெய்வ காரியங்களுக்குத் துணையாக இருப்பான் கடவுள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறாள்.

அனைத்து விரத நாட்களிலும் இந்தத் திருப்பாவைப் பாடலைப் பாடுங்கள். நற்காரியங்களில் ஈடுபட்டு, தெய்வ பூஜைகளைச் சரிவர செய்து, சுவைக்காக உண்ணாமல், இறைச் சிந்தனையுடன் வாழ்ந்தால், இறைவன் பரிபூரணமாக நம்மை ஆசீர்வதிப்பான். அவனின் அருளைப் பெறுவோம். ஆனந்தமாய் வாழ்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x