Published : 25 Dec 2017 12:13 PM
Last Updated : 25 Dec 2017 12:13 PM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

அதாவது, பாவை நோன்பு இருந்து, திருமாலை வேண்டிக் கொண்டால், உறுதியாக சொர்க்கலோகப் பிராப்தி கிடைக்கும். எனவே, பாவை நோன்பு நோற்கவேண்டும் என்ற எண்ணம் கூடியவளான பெண்ணே... உன் வீட்டு வாசலில் நின்று, நாங்கள் அழைக்கிறோமே! வாசல் கதவைத் திறக்காவிட்டால் கூட, ஏதாவது பதிலுரைக்கலாம் அல்லவா!

அன்று ராமாவதாரத்திலே தன்னுடன் போரிட்ட கும்பகர்ணனை வீழ்த்தியவர் ராமபிரான். போரில் ராமபிரானுடன் தோல்வியுற்ற கும்பகர்ணன் உன்னிடம் (தூக்கத்தில்)உறக்கம் கொள்வதில் தோற்று, தன்னுடைய உறக்கத்தை உன்னிடமே விட்டுவிட்டானோ?

மணம் வீசும் திருத்துழாய் மாலைகளை, அணிந்துகொண்டும் நறுமணம் வீசும் கேசத்தை உடையவனுமான திருமால், நாம் போற்றி வழிபட்டவுடன் இம்மையில் நமக்கு அனைத்து செல்வங்களையும் மறுமையில் சொர்க்கமும் தரவல்லவனாயும் இருக்கிறான்.

எனவே, பெரியசோம்பேறியாய் உறங்கிக் கொண்டிருப்பவளே! உறக்கம் தொலைந்து, சோம்பல் மறந்து, விரைந்து வந்து கதவைத் திறப்பாய். அழகான அணிகலன்களை அணிந்து கொண்டு, எல்லோரும் புகழும்வண்ணம், பாவை நோன்பு நோற்க வா தோழி என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

இந்தத் திருப்பாவைப் பாடலை, ஆண்டாள் அன்பொழுகப் பாடிய திருப்பாவையை தினமும் பாடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தந்தருள்வான் நாராயணன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x