Published : 14 Dec 2017 12:11 PM
Last Updated : 14 Dec 2017 12:11 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மிதுனம்

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளை தந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை சனிபகவான் வலுவடைந்து 7-ல் அமர்வதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். உங்கள் இருவருக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். அநாவசியமாக யாரையும் வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். விலையுயர்ந்த ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. சட்டத்துக்குப் புறம்பான வகையில் செல்ல வேண்டாம். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் நன்றாக இருக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வேற்றுமொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் அவ்வப்போது குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகள் வந்துபோகும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகரிக்கும்.

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் கடன் பிரச்சினையிலிருந்து மீள்வதற்குப் புது வழி பிறக்கும். முன்கோபம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் உறவினர் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்தி வைப்பீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் தைரியஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் சகோதரர்களின் ஆதரவு பெருகும். எனினும் அவர்களுடன் அளவாக பழகுவது நல்லது.

சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாய் வழி உறவுகளுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். 02.2.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகிச் செல்வதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.

மாணவ, மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். மனத்தை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானதுதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தலைமையின் கட்டளையை மீற வேண்டாம். நீங்கள் எதைச் செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள். தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டாம்.

கலைத்துறையினரே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்னச் சின்ன வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் கூட்டு வேண்டாம். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

இந்த சனி மாற்றம் உங்களின் பொறுமையை கொஞ்சம் சோதிப்பதாக இருந்தாலும் ஓரளவு வருவாயையும், வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் திருமூலஸ்தானம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் கைலாசநாதருக்கும், காமாட்சி அம்மனுக்கும் பாலாபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றுங்கள். அங்கிருக்கும் சனீஸ்வரரைப் பிரார்த்தியுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x