Published : 29 Dec 2017 10:25 AM
Last Updated : 29 Dec 2017 10:25 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 14

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்!

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணனைப் பாடேலோ ரெம்பாவாய்!

அதாவது அந்தக்காலத்தில், வீடுகள் யாவும் இயற்கை எழில் சூழ்ந்ததாக அமைக்கப்பட்டிருந்ததாம். வீடுகளின் கொல்லைப்புறத்தை புழக்கடை என்று கூறும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. வீடுகளின் பின்புறத்தில் தோட்டம் அமைந்திருக்கும். கிணறு, அல்லது சிறிய குளம் (வாவி) போன்ற நீர்நிலை அமைந்திருக்குமாம்! தோட்டங்களில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் துளசி, புஷ்பம், வாழைமரம், தென்னை மரம் என செடிகொடிகளும் மரங்களும் இருக்கும்.

ஆண்டாள், தன் தோழியரோடு நோன்பு நோற்கக் கிளம்பி ஒவ்வொரு வீடாகச் சென்று, உறங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு தோழியை எழுப்புகிறாள். பெண்ணே! உங்கள் வீட்டின் பின்பக்கமுள்ள தோட்டத்தில் இருக்கும் குளத்தில், செங்கழுநீர் மலர்கள் சூரியன் உதயமாவதைக் கண்டு, தம் இதழ்களை விரித்து, கூம்பிவிட்டன (அல்லி மலர் சந்திர ஒளியில் மலரும் எனப்து குறிப்பிட வேண்டிய ஒன்று).

நீயே போய்ப் பார். காவி நிறத்தில் தோய்த்து சாயம் ஏற்றப்பட்ட செவ்வாடைகளை அணிந்த இவ்வுலக சுகங்களை மறுத்ததால், வெற்றிலை பாக்கு போடாத வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள் தங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று திருமாலுக்கு சங்காபிஷேகம் செய்யப் புறப்பட்டு விட்டனர். காவியில் தோய்த்ததால் காயம் ஏற்றப்பட்ட ஆடை, வெற்றிலை போடாததால், காவிநிறம் படியாத வெள்ளைப் பற்கள் என்கிறார்.

‘உங்களை நாளைக்கு நான் முன்னால் வந்து எழுப்புவேன்’ என்று நீ உனது வாயால் கூறினாயே. இப்போது நாங்களல்லவா உன்னை எழுப்பவேண்டியதாயிற்று.

வெட்கம் அறியாதது உனது நாக்கு. சங்கும் சக்கரமும் ஏந்துகின்ற அகன்ற கைகளை உடையவனும் தாமரை போன்ற கண்களை உடையவனுமான கண்ணனின் நாடகத்தைப் பாடி நோன்பு நோற்க எழுந்து வாராய் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

இந்தத் திருப்பாவைப் பாடலை ஆண்டாளைப் போலவே மெய்யுருகிப் பாடுங்கள். அனவரதமும் நம்மை ஆட்கொண்டருள்வார் திருமால்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x