Published : 04 Aug 2023 03:17 PM
Last Updated : 04 Aug 2023 03:17 PM

கரூர் - மேட்டுமகாதானபுரம் அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி பெருக்கு விழாவை ஒட்டி ஆடி 19ம் தேதியான இன்று (ஆக. 4ம் தேதி) பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் தலைத்தேங்காய் உடைத்து கொள்வதற்கு நேர்ந்து கொண்ட பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்திற்கு வந்திருந்தனர். விழாவையொட்டி காவிரியில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், இரவு சக்தி அழைப்பும் அதனை தொடர்ந்து காவிரிக்கு அம்மன் தீர்த்தவாரிக்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் நேற்று காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வந்து கோயில் முன் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர். பலர் சாமிக்கு முடி இறக்கி மொட்டை தலையுடன் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பரம்பரை பூசாரி பெரியசாமி பாதக்குரடு (ஆணி செருப்பு) அணிந்து, அம்பு போட்டவுடன் (இரும்புப் பட்டை கம்பியால் அடித்துக்கொள்ளுதல்) அருள் பெற்று வரிசையாக அமர்ந்திருந்த 519 பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார்.

தங்கள் தலையில் உடைத்த தேங்காய்களை பக்தர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் சேகரித்து எடுத்துச் சென்றனர். ஒரு சிலருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x