Published : 04 Nov 2017 04:50 PM
Last Updated : 04 Nov 2017 04:50 PM

கஜ பிருஷ்ட விமானத்துடன் பாடி திருவல்லீஸ்வரர் கோயில்!

சென்னை கோயம்பேட்டில் இருந்து அம்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது பாடி. இங்கே, லூகாஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்து, மிக அருகில் அமைந்து உள்ளது திருவல்லீஸ்வரர் கோயில்.

தேவாரப் பாடல் பெற்ற அருமையான திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் இது 254 வது தேவாரத்தலம்! தொண்டை நாட்டுத் தலங்களில் 21-வது ஆலயம். திருவல்லீஸ்வரர்.

திருவலிதமுடையநாயனார் என்பது மூலவரின் திருநாமம். அம்பாளின் திருநாமம் ஜெகதாம்பிகை. புராண, புராதனப் பெருமை கொண்ட தலம் இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

தல விருட்சமாக பாதிரியும், கொன்றை மரமும் இருக்க, ஸ்தல தீர்த்தமாக பரத்வாஜ தீர்த்தம் திகழ்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட அமைப்பு கொண்டது. அதாவது யானையின் பின்புறம் போல் அமைப்பு கொண்ட விமானம் அமைந்துள்ள தலங்களில் இதுவும் ஒன்று.

இங்கே, அண்ணன் விநாயகர் விசேஷமானவர். உத்ஸவரை மாப்பிள்ளை விநாயகர் என்றே அழைக்கின்றனர். இவரை வணங்கினால், விரைவில் தடைகள் நீங்கி, திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

அதேபோல், இந்தத் தலத்தில் குரு பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்து உள்ளது. வியாழக்கிழமை மற்றும் அவரவருக்கான நட்சத்திர நாளில், இங்கு வந்து குரு பகவானை வணங்குகின்றனர் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x