Last Updated : 25 Oct, 2017 02:01 PM

 

Published : 25 Oct 2017 02:01 PM
Last Updated : 25 Oct 2017 02:01 PM

திருப்பங்களைத் தருவார் திருப்பட்டூர் முருகன்!

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 28-வது கிலோமீட்டரில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. பயணித்தால், நம் தலையெழுத்தையே திருத்தி எழுதியருளும் திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

இங்கே சிவனாரின் திருநாமம் - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீபிரம்மசம்பத் கெளரி. ஆமாம்... பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கி, அவரின் படைப்புத் தொழிலை மீண்டும் அவருக்கே தந்தருளிய திருத்தலம்... திருப்பட்டூர். எனவே இங்கே வேறெந்தத் தலத்திலும் இல்லாத வகையில், பத்மபீடத்தில் மிகப் பிரமாண்டமாக அமர்ந்தபடி அருட்காட்சி தருகிறார் பிரம்மா.

இந்தத் தலத்தில் உள்ள முருகப் பெருமான் கொள்ளை அழகு. அதுமட்டுமா. சொல்லப்போனால்... இந்தத் தலத்தின் மகிமைக்கும் மகோன்னதத்துக்குமான சிவனாரைப் போல, பிரம்மாவைப் போல, முருகக் கடவுளும் முக்கியமானவர்.

இப்போது திருப்பட்டூர். புராணக் காலத்தில் இது திருப்பிடவூர். திருப்படையூர் என்றெல்லாம் இருந்துள்ளன. பொதுவாகவே, பிடவூர், படையூர் என்பதெல்லாம், முருகப் பெருமானை சூரபத்மனை அழிப்பதற்கு, படை திரட்டிச் சென்றபோது ஓய்வெடுக்க தங்கிய இடங்கள் என்று ஞானநூல்கள் விவரிக்கின்றன. அப்படிப் பார்த்தால்... சூரபத்மனை அழிப்பதற்கு முன்னதாக, கந்தபிரான் தன் படையினருடன் இங்கே தங்கியதால், திருப்பிடவூர், திருப்படையூர் என ஊர்ப்பெயர் அமைந்ததாகச் சொல்கறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.

மயிலில் இரண்டு வகை உண்டு. தேவ மயில், அசுர மயில் எனும் வகையில், இங்கே அசுர மயிலில் போருக்குத் தயாரான நிலையில் வீற்றிருக்கிறார் முருகப் பெருமான். அதாவது முருகக் கடவுளுக்கு இடதுபாகத்தில் மயிலின் முகம் இருந்தால், அது அசுர ,மயில் என்றழைக்கப்படுமாம்.

சிற்ப நுட்பத்துடன், கலை நயத்துடன், அழகுறக் காட்சி தருகிறது முருகனின் கற்சிலை. இங்கு செவ்வாய், சஷ்டி முதலான நாட்களில் வந்து வேண்டிக் கொண்டால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களைத் தந்தருள்வார் கந்தவேள்.

வழக்குப் பிரச்சினைகளில் உள்ள இழுபறி விலகி, வழக்கில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீய சக்திகளின் தொல்லையும் எதிரிகளின் குடைச்சலும் விலகச் செய்து, பக்கத்துணையாக இருந்து நம்மைக் காத்தருள்வார் திருப்பட்டூர் முருகப் பெருமான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x