Published : 13 Oct 2017 03:10 PM
Last Updated : 13 Oct 2017 03:10 PM

யானைகளின் வருகை 55: வனவிலங்குகளுக்கு எமனாக வந்த கோடநாடு

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வனக்கல்லூரி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள கோத்தகிரி சாலையில் மூன்று மான்கள் இறந்து கிடந்தன. அது அதிவேகமாக வந்த வாகனங்களால் அடிபட்டுத்தான் இறந்தது என புகார்கள் எழ, இந்த மான்கள் நாய்கள் கடித்ததால்தான் இறந்துள்ளன என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதே காலகட்டத்தில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அகழியில் ஆறு வயது மதிக்கத்தக்க யானை இறந்து கிடந்தது. அகழியில் சிக்கித்தான் யானை இறந்தது என புகார்கள் கிளம்ப, யானை வயிற்றுக்கோளாறால்தான் இறந்தது என குறிப்பிட்டனர் வனத்துறையினர்.

ராணி என்ற தோட்டத் தொழிலாளி யானை மிதித்து இறந்த சமயத்தில்தான் கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது அவர் சென்ற காரை காட்டு யானை மறித்து தாக்கிய சம்பவமும் நடந்தது. ராணி இறந்த பிறகு அவர் நடந்து வந்த குறுக்குப் பாதையில் யாரும் நடமாடக் கூடாது என்று உத்தரவு போட்டிருந்தனர் வனத்துறையினர். அந்த பாதையை மின் வேலி போட்டு தடுத்தும் இருந்தனர்.

இந்த சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் இந்த கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரிக்கு எதிரே தினசரி காலை மாலையில் மேட்டுப்பாளையம் நகரப் பகுதிகளிலிருந்தும், சுற்றுப்புற பண்ணை வீடுகளிலிருந்தும், ரிசார்ட்டுகளிலிருந்தும் நிறைய பேர் வந்து உடற்பயிற்சி மற்றும் நடைப் பயிற்சி செய்து வந்தனர். இவர்கள் நடைப்பயிற்சி செய்த, ஆங்காங்கே நின்று காலை கையை அகட்டி விரித்து உடற்பயிற்சி செய்த பகுதிகள் எல்லாமே யானைகள் கடவுகளில் புகுந்து வரக்கூடிய காட்டுப் பகுதிகள். அவர்கள் அப்படி அகட்டி, மடக்கி பயிற்சி செய்யும்போது யானைகள், காட்டெருமைகள் கடவிலிருந்து எகிறிப்பாய, பயிற்சியாளர்கள் ஓட்டமெடுத்ததும் பல சமயங்களில் நடந்துள்ளது. இதன் உச்சகட்டமாக ஒரு நாள் இங்கே நடைப் பயிற்சி செய்த ஒருவரை, யானை தந்தத்தால் குத்தி விட்டு காட்டுக்குள் ஓடி விட்டது.

குத்துப்பட்டவரை மற்றவர்கள் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்னொரு நாள் ஓடந்துறையை சேர்ந்த ஒரு வனவரும், வனக்காவலரும் இந்த வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அவர்களை ஆண் யானை ஒன்று துரத்த மூச்சிரைக்க ஓடி வந்தனர். இதில் பல இடங்களில் குப்புற விழுந்து எழுத்த வனவருக்கு கடைசியில் கால் முறிவு. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழல்களை கவனித்து இந்த பகுதியில் பொதுமக்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய தடை விதித்தனர் வனத்துறையினர். இதற்கிடையே இங்கு வலசை போய் வரும் காட்டு யானைகளுக்கு அங்கு வெட்டப்பட்டிருந்த அகழியும் பழகிப் போனது. கூட்டம் கூட்டமாக வந்த யானைகள் அந்த அகழியை நீள வாக்கில் நடந்து ஆராய்ச்சி நடத்த, அதில் மேடான பகுதியை பார்த்து அங்குள்ள தரையை தட்டி மண்ணை அந்த அகழிக்குள் தள்ளுவதும், பாறைகளை முட்டி மோதுவதும், அகழி மேடாகியதும், அதில் வரிசையாக இறங்கி கடப்பதும், பிறகு அங்குள்ள நீர்நிலைகளில் நீர் அருந்துவதும், விவசாய நிலங்களை கபளீகரம் செய்வதும் தொடர்ந்து நடந்தது. இந்த சுற்றுவட்டார வனத்தில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் இங்கே வனத்துறையால் தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட அதில் அவையெல்லாம் பதிவாக ஆரம்பித்தது..

அதில் யானைகள் மட்டுமல்லாது, புலி, கழுதைப்புலி, சிறுத்தைப்புலி, மான்கள், கடமான்கள், காட்டெருமைகள் என பலதும் பதிவாக இந்த ஏரியாவே கானுயிர்களின் முக்கியத்துவம் பெறக்கூடிய பிரதேசமாக உணரப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் ஒரே நாளில் இந்த வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 23 தானியங்கி கேமராக்களில் மட்டும் 5 புலிகள் (வரிகள் உள்ள தன்மையை வைத்து வேறு வேறு புலிகள் என வனத்துறையினர் கணிக்கின்றனர்), ஒரு கழுதைப்புலி, 5 கரடிகள், 50க்கும் மேற்பட்ட மான்கள், பல்வேறுபட்ட யானைக்கூட்டங்கள் தொட்டிகளில், குட்டைகளில் தண்ணீர் அருந்தும் காட்சிகள் என பதிவாகியுள்ளது கண்டு வனத்துறையினரே ஆச்சர்யப்பட்டனர். அதை முன்னிட்டு கோவை வனப்பகுதிகளிலேயே (ஆனைமலை புலிகள் காப்பகம் தவிர) அதீத வன உயிரினங்கள் இயற்கை சூழல் மிகுந்த இடம் என்பதிலும் தெளிவு பெற்றுள்ளனர்.

அதை முன்னிட்டு இங்கு 12 இடங்களில் செயற்கை தண்ணீர் தொட்டிகள், அதில் தண்ணீர் நிரப்பிட 9 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அதற்கு தானியங்கி மோட்டார்கள் எல்லாம் அமைந்தன. இவை தவிர 20 இடங்களில் கசிவு நீர்க்குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வனப்பகுதியில் மட்டும் 800க்கும் மேற்பட்ட யானைகள் வலசை போவதாக புள்ளி விவரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் முக்கிய வனவிலங்குகளில் சிங்கம் மட்டும்தான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து விலங்குகளும் பெருகியுள்ளதாகவும் அதில் விவரணைகள் நீளுகின்றன.

எனவே ஊட்டி, கோத்தகிரி சாலைகளில் பயணிப்பவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுத்து வருகிறது வனத்துறை. வழியில் எங்கும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. லாரியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு காடுகளுக்குள் 'கழிக்க' செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கூட்டம், கூட்டமாக உள்ள யானைகளால் மட்டுமல்ல செந்நாய்கள், கரடிகள், நரிகள், புலிகள் போன்ற மிருகங்கள் கூட மனிதர்களை தாக்கிட கூடும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்யப்படுகிறது. அதற்காக எச்சரிக்கை பலகைகளும் வரிசை கட்டி இந்த சாலையில் நிற்கின்றன.

ஆனால் இந்த சூழலுக்கு எதிரான முரண்பாடுகளை நிறையவே இந்தப் பகுதியில் காணமுடிகிறது. எப்படி?

நீலகிரியின் மலைகளில் ஊட்டிக்கு செல்ல காரமடை மஞ்சூர் ரோடு, மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு, மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோடு என மூன்று சாலைகள் உள்ளது. அதில் பிரதான சாலையாக விளங்கும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலைப்பாதை கூட சுமார் 30 அடிதான். அதுவே மஞ்சூர் சாலை15 அடி கொண்டது. ஆனால் இந்த மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை சுமார் 40 அடி கொண்டதாக உள்ளது. அதிலும் சாலை மற்ற சாலைகளை விட 'பளிச்' என்று பளிங்கு போல், வேகத்தடைகள் கூட இல்லாமல் காணப்படுகிறது. அதனால், 'இது வனவிலங்குகள் நடமாடும் பகுதி. வாகனங்களை மெதுவாக செலுத்தவும்' என எச்சரிக்கை பலகைகள் கடை விரித்தாலும் கூட வாகனங்கள் 60 கிலோ மீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் இந்த இடத்தை கடப்பதை காணமுடிகிறது.

'ஒரு காலத்தில் மூன்று சாலைகளிலேயே மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக, குறுகலாக மிகவும் காணப்பட்டது இந்த கோத்தகிரி சாலைதான். ஆனால் எப்போது கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா உருவானதோ, அவரின் பயணம் இந்த சாலையில் புறப்பட்டதோ, அப்போது 'பளிச்' ஆக்கப்பட்டது சாலை. அது முதலே இந்த சாலையை கடக்கும் யானைகளுக்கு மட்டுமல்ல; பல்வேறு வனவிலங்குகளுக்கும் எமனாக விளங்குகிறது இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள்.

அது மட்டுமல்ல, வனக்கல்லூரியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு மாணவர்கள் என்று நூற்றுக்கும் அடக்கமான மாணவ- மாணவியரே இங்கே தங்கிப்படித்தனர். இப்போது இங்கு ஆண்டுதோறும் சேர்க்கப்படும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை 600க்கும் மேல். அவர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகள் படிக்கிறார்கள்.அதற்கேற்ற மனித நடமாட்டமும் கானுயிர் சூழலுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில கோரிக்கைகளை முன்வைத்து இங்கே இரவு- பகல் பாராமல் நடத்திய மாதக்கணக்கிலான உள்ளிருப்பு போராட்டம் நம் அரசாங்கத்தை நடுங்க வைத்ததோ இல்லையோ, இங்குள்ள வன விலங்குகளை அச்சுறுத்தியும் பார்த்தது. அது மட்டுமா?

ஒரு பக்கம் ஊட்டி ரோட்டில் கேளிக்கை விடுதிகள், விளையாட்டு பூங்காக்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விரவிக்கிடக்கிறது. இங்கே வனக்கல்லூரி, ஆராய்ச்சி மையம் கட்டிடங்கள், அதற்கான அகழிகள் அமைக்கப்பட்டிருக்கிறது, இதற்கிடையே 2 கிலோமீட்டர் தொலைவுக்கு V வடிவத்திற்குள் சிக்கிக் கிடக்கும் வனப்பகுதியில் காடு காடாக இல்லை. அதனால் காட்டுயிர்கள் நிம்மதியாக உயிர்வாழவும் முடியவில்லை என்றும் விளம்புகிறார்கள் சூழலியாளர்கள்.

அந்த விளம்பல் இங்கு நிறைந்திருக்கும் சீமைக்கருவேல மரங்கள் ரூபத்தில் பிரதிபலிக்கின்றன. இங்குள்ள நீர்நிலைகள், காடுகளில் சீமைக்கருவேல மரங்கள் வெகுவாக காணப்படுகிறது. இந்த சீமைக்கருவேலத்தை விரும்பி உண்ணும் மிருகங்கள் ஒரு மடங்குக்கு பல மடங்கு தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பது நியதி. வனாந்திரங்களில் சரியான அளவில் தனக்கான உணவு கிட்டாததால் தற்போதெல்லாம் இந்த சீமைக்கருவேலத்தையே காட்டு யானைகள் சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, அதற்குப் பழகியும் விட்டன. அதை சாப்பிட்டு விட்டு அதற்கேற்ப ஏற்பட்ட தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அலை மோதுகின்றன. காடுகளில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் அவற்றுக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட யானைகள் நீர் சுருக்கு மற்றும் குடல் அடைப்பான் நோயால் மரணிக்கின்றன

இதுபற்றி மேட்டுப்பாளையம் வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வன மரபியல் துறையினை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் ஆய்வு செய்தும் உள்ளனர். அவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன்பு நமக்கு கொடுத்த புள்ளி விவரங்கள் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியூட்டுபவை.

சத்தியமங்கலம் வனப்பகுதி துவங்கி மேட்டுப்பாளையம் வரை மட்டும் 2014 ஆம் ஆண்டில் மட்டும் 21 யானைகள் இறந்துள்ளன. இறந்த யானைகளை பிரேத பரிசோதனை செய்யும் வனத்துறை மருத்துவர்கள், யானை நீர்ச்சுருக்கு மற்றும் குடல் அடைப்பால் மரணம் என்று சொல்வது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் இந்த நீர்ச்சுருக்கு, குடல் அடைப்பு நோய் எதனால் வருகிறது என்பதை மட்டும் அவர்கள் அவ்வளவு சுலபமாக தெளிவுபடுத்துவதேயில்லை. அதன் பின்னணியில் இருப்பதுதான் இந்த சீமைக் கருவேல மரங்கள் என்பது இந்த ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.

 

ஒரு நாட்டின் மொத்தப் பரப்பளவில் குறைந்த பட்சம் காடுகள் 33 சதவீதம் இருக்க வேண்டும். அப்போதுதான் பல்லுயிர் பெருக்கம் மட்டுமல்ல, நீர்நிலைகள், இயற்கை வளங்கள் சீரான தன்மையில் இருந்து வரும். நம் நாட்டில் இது 23 சதவீதமே உள்ளது. தவிர காட்டின் பரப்பளவும் குறைந்து கொண்டே வருகிறது. அப்படிப்பட்ட காடுகளிலும் முன்பெல்லாம் குறிப்பிட்ட காலங்களில் அந்தந்த காலத்திற்கேற்ற மரம், செடி, கொடிகள் பூத்துக்குலுங்கிக்காய்த்து இயற்கையான சுழற்சி நிகழ்ந்து வந்தது. அது காட்டுயிர்களுக்கு உணவுத் தட்டுப்பாடின்றி பாதுகாத்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காடுகள் குறுகி, பருவமழைகள் பொய்த்து வனங்கள் காய்ந்து வருகின்றன.

இதனால் காடுகளில் வாழும் உயிரினங்கள் தீவனமும் கிடைக்காமல், தாகத்திற்கு நீரும் கிடைக்காமல் அல்லாடுகின்றன. இந்த நிலையில் பிராஸோபிஸ் ஜீலிஃப்ளோரா (prosopis juliflora) எனப்படும் சீமைக்கருவேல மரங்கள் நம்ம ஊர் நீர் நிலைகளிலும், வறண்ட தரிசு நிலங்களில் மட்டுமல்ல காப்புக்காடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. கடும் வறட்சியிலும் வேகமாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கக்கூடிய இம்மரங்களின் விதைகளை தின்று பறவைகள் எச்சங்கள் இடுவதிலும் வேகம் காட்டுகின்றன. அதில் முளைப்புத் திறனிலும் இம்மரங்கள் வேகம் காட்டுகின்றன. அறுபதுகளில் பரவத் துவங்கிய இம்மரங்கள் தற்போது காடுகளை அழிக்கும் சக்தியாகவும், காட்டு விலங்குகளை காவு வாங்கும் சக்தியாகவும் மாறி விட்டன. உண்ண பசுந்தழைகளும், புற்களும் இல்லாத காடுகளில் வறட்சியிலும் பசுமை காட்டி நிற்கும் சீமை கருவேலங்கள் யானைகளை ஈர்த்ததில் வியப்பில்லை. வேறு உணவு கிடைக்காத நிலையில் இதையே சாப்பிட பழக்கப்பட்டு விட்டன.

இதனை உண்ணும் யானைகளுக்கு, இதில் உள்ள டேனின் (tanin) என்ற நச்சுப்பொருளை முறிக்கவும், அதனை நீர்த்துப்போக செய்யவும் இயல்புக்கு மாறாக பல மடங்கு நீர் தேவைப்படுகிறது. ஆனால் போதிய நீர் கிடைக்காததால் அலைந்து திரியும் யானைகள் போதுமான நீர் கிடைக்காத நிலையிலும் மீண்டும் மீண்டும் எழும் பசிக்கு இந்த சீமைக் கருவேலத்தையே உண்கின்றன. விளைவு. யானைகளின் பெருங்குடலும், மலக்குடலும் பாதிக்கின்றன. நீர்ச்சுருக்கு, குடல் அடைப்பு நோய் ஏற்பட்டு அவை இறக்கின்றன! என்று தெரிவித்தனர்.

சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை வெகு ஆழம் வரை சென்று உறிஞ்சுவதோடு, தன்னருகே வேறு எந்த தாவரங்களையும் வளர அனுமதிப்பதில்லை. இதனால் காட்டில் உள்ள இயற்கையான அந்தந்த மண்ணிற்கேற்ற உள்ள நாட்டு தாவரங்களையும், மரங்களையும் இவை அழித்தே வளர்கின்றன. காடுகளில் சோலைக்காடுகள்தான். மழை நீரை சேமித்து அருவியாக கொட்ட வைத்து நீரோடைகளாகவும், ஆறுகளாகவும் உருவாக துணை புரிகின்றன. அதன் அடிநாதத்தையே இந்த சீமைக்கருவேலன்கள் அழித்து விடுகின்றன. இதுவே அவர்கள் ஆய்வு செய்து தெரிவித்த செய்தி.

சில மாதங்களுக்கு முன்புதான் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு வந்தது. அதையொட்டி மக்கள் அதை தேடித்தேடி அழித்தார்கள். அந்த வேகத்தில் இங்கே உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை வனத்துறையினர். ஏனென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றத்தில் இருவேறு கருத்துக்கள் ஆய்வாளர்களிடம் ஓடியதுதான்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x