Last Updated : 11 Oct, 2017 04:52 PM

 

Published : 11 Oct 2017 04:52 PM
Last Updated : 11 Oct 2017 04:52 PM

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள்

தொடர்ந்து சமவுரிமைகளுக்காவும், வாய்ப்புகளுக்காகவும், பல அடிப்படை உரிமைகளுக்காகவும் உலகின் பல முனைகளில் நின்று பெண்கள் போராடிக் கொண்டிருக்கும்  இவ்வேளையில் அக்டோபர் 11 -ஐ சர்வதேச பெண் குழந்தைகளுக்கான  தினமாக அனுசரித்து வருகிறோம்.

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும், அவர்களின் வெற்றிகளை கொண்டாடவும் கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.

அதன்படி ஒவ்வொரு வருடமும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11-ம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆறாவது வருடமாக சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சமூக வலைதளங்களில் #DayoftheGirl என்ற ஹாஷ்டேக்களில் பலரும் பல்வேறு துறைளில் பெண்கள் அடைந்த சாதனைகளையும், அவர்களது உரிமைகளையும் பதிவுகளாகயிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

இந்தத் கொண்டாடத்துக்கிடையே ஒரு சிறப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மனைவி  18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றால் அவருடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது என்ற வரவேற்கத்தக்க தீர்ப்பை வழங்கி சர்வதேச பெண்கள் தினம் மேலும் சிறப்பாக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான முன்னேற்றத்துக்கு பல இடர்பாடுகள் இருப்பினும் பாலியல் துன்புறுத்தல்கள்தான் பெண்களுக்கு எதிராக உச்சப்பட்ச வன்முறையாக உள்ளது. அதனை திருமணம் என்ற பெயரில் அங்கீகரிக்கும் சமூகத்தின் செயல்களுக்கு தடைக்கல்லை ஏற்படுத்தியிருக்கும் இந்திய நீதித்துறை தனது பேனாவை இன்று சிறப்பாக கூர்தீட்டியிருக்கிறது.

பல துறைகளில் பெண்களில் தங்களுக்கான உரிமைகளை பெற ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில், அவர்களுக்கு பல இடங்களில் ஆறுதல் பரிசுகள்தான் அளிக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

போராடத்துக்கான தேவை உள்ளது

இந்தியாவில் பெண்களுக்கான அதிகாரமும், சம உரிமையும் எவ்வாறு உள்ளதென்று பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடன் தி இந்து தமிழ் சார்ப்பாக கேட்டபோது,

முதலில், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் கட்டாய பாலுறவு (marital rape) குறித்து  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பல நாடுகளில் கட்டாய பாலுறவு என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அரசு கட்டாய பாலுறவை குற்றமாக அறிவிக்க அனுமதி அளிக்க மறுக்கிறது. அதற்கு முக்கிய காரணம் திருமணம் என்ற அமைப்பை இம்மதிரியான சட்டங்கள் வலுவிழக்க செய்துவிடும் என்பது அரசின் முக்கிய வாதமாக உள்ளது.

ஆனால் உண்மையில் கட்டாய பாலுறவு என்பது ஒரு பெண் மீது வைக்கப்படும் மோசமான வன்முறை. அவ்வாறு இருக்குபோது அதனை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டுவதுதான் இன்றைய தேவை. அதற்கு முதல் அடியாக இந்தத் தீர்ப்பு உள்ளது.

இன்னும் இது தொடர்பான விவாதங்களை எழச்செய்து கட்டாய பாலுறவை முழுவதுமான தண்டனைக்குரிய குற்றமாக கருதும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

மேலும்  குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் பெரும்பாலான இடங்களில் வெளிவருவதில்லை. அதனை கவுரவப் பிரச்சனையாக பார்க்கும் சதவீதம்தான் நமது சமூகத்தில் அதிகம். எனவே பதிவு செய்யப்படாத பாலியல் துன்புறுத்தல்களை நாம் எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்பது பற்றி நாம் இன்னும் பெருமளவு சிந்திக்க வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை பெண்களுக்கான அதிகாரம் மற்றும் சம உரிமையில் நாம் பெரியளவில் சாதித்துவிட்டோம் என்று கூறமுடியாது. ஆன்லைனின் நடக்கும் கேலி கிண்டல்களையே இதற்கு சிறந்த உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

ஒரே விஷயத்தை ஒரு ஆணும், பெண்ணும் பேசுகிறார்கள் என்றால் பெண்களை பற்றியான அவர்களின் கருத்துக்கள் முற்றிலும் வேறுப்பட்டதாக உள்ளது. சமூக ஊடகங்கள் பெண்கள் சுதந்திரமாக பேசுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது என்றாலும் சமூக வலைதளங்களில் பொது தளத்தை பேசும் பெண்களை கிண்டல்கள், தொந்தரவுகள் செய்வது தொடர்ந்து நடக்கிறது.

பெண்களுக்கான அதிகாரம் பற்றி கூறப்போனால் அதனை  நோக்கி நாம் சென்று கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் தூரம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்கான அதிகாரம் முழுமையாக கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு கவுரி லங்கேஷை எடுத்து கொள்ளுங்கள், அவரது மரணத்தை சமூக ஊடகங்களில் கொண்டாடக் கூடிய மன நிலையில் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் இந்தியாவில் பெண்களுக்கான அதிகாரமும், சம வுரிமையும் மோசமான அளவில்தான் உள்ளது. அதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும், அதற்கான தேவை இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றார்.

ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கான எதிர்ப்புக்கும் மற்றும் சம உரிமை போராட்டத்துக்கும் தாக்கப்படுகிறாள் என்று பல முன்னணி தன்னார்வ அமைப்புகளின் ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த எதிர்ப்புகளும், போராட்டங்களும் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்க போகிறது.

தொடர்ந்து நமது உரிமைகளை தடுக்கும் அந்த கதவுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருப்போம். நிச்சயம் திறக்கப்படும்.

தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x