Published : 04 Oct 2017 02:27 PM
Last Updated : 04 Oct 2017 02:27 PM

யானைகளின் வருகை 49: குடற்புழு நோய் உருவாக்கும் வில்லன்கள்!

இது மேட்டுப்பாளையம் கல்லாற்றில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். இந்த வனப்பகுதியில் மிகவும் மெலிந்து காணப்பட்ட ஒரு காட்டு யானை தள்ளாட்டத்துடன் சுற்றித் திரிந்ததை பொதுமக்கள் பார்த்தனர். வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்து குறிப்பிட்ட யானை நோய்வாய்ப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தனர். அதேசமயம் அதனை சுற்றியே பெரிய யானைக்கூட்டமும் திரிந்து கொண்டிருந்தது. எனவே யானைக்கு சிகிச்சையளிக்க முடியாமல் இருந்தனர். அதற்கடுத்தநாளே தள்ளாடிய யானை கல்லாறு நடுத்திட்டு பகுதியில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் அந்த யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அது 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை. குடல்புழு நோய் பாதித்து இறந்துள்ளது என்பது பின்னர் தெரிய வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

இந்த யானை இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து கோவை மாங்கரையில் இதேபோல் ஏழெட்டு வயது மதிக்கத்தக்க யானை வனத்தில் தள்ளாட்டத்துடன் சுற்றித்திரிந்தது. அதை சுற்றி ஒரு யானைக்கூட்டமே பிளிறிக் கொண்டு அலைந்தது. ஒரு கட்டத்தில் அங்குள்ள பள்ளத்தில் தள்ளாடிய யானை எழ முடியாமல் படுத்துக் கொண்டது. மற்ற யானைகள் அதை எழுப்பவும், தூக்கி நிறுத்தவும், நடத்திச் செல்லவும் முயற்சித்தன. ஆனால் ஒரு அடி கூட அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. அந்த நிலையில் அந்த யானை இறந்தும் போனது. இரவு முழுக்க அந்த யானையைச் சுற்றி நின்று பிளிறிக் கொண்டிருந்த யானைக்கூட்டம் அதிகாலையில் அகன்ற நிலையில் வனத்துறையினர் அந்த யானையின் உடலை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். அந்த குட்டியும் வயிற்றில் குடற்புழு நோயினால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலே சொன்னது உதாரணத்திற்கு இரண்டு சம்பவங்கள்தான். கடந்த சில வருடங்களாகவே கோவை வனப்பகுதிகளில் (வாளையாறு, எட்டிமடை, மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, நரசீபுரம், மாங்கரை, கொடுங்கரை பள்ளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை) இப்படி யானைகள் குடற்புழு மற்றும் வயிற்று உபாதைகளால் இறப்பது அதிகரித்து வருகிறது.

இதேபோல் ஈரோடு வன மண்டலத்தில் பவானி சாகர், சத்தியமங்கலம், கோபி, கடம்பூர் பகுதிகளிலும் கடந்த மூன்று வருடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் குடற்புழு தாக்கி இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதைவிட கொடுமை. வேளாண் விளைபொருட்களுக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தப்படும் வேதி மருந்துகளால், பாறு கழுகுகள் எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள் அழிவு குறித்தும், அதனால் ஏற்படும் இயற்கை சுழற்சி பாதிப்புகளையும் குறித்து விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த இயற்கை ஆர்வலர்கள் உள்ள அமைப்பான அருளகம் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஆய்வை நடத்தியது.

ஆனைகட்டி, வால்பாறை, கோவை போளுவாம்பட்டி, சத்தியமங்கலம் என யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் காணப்பட்ட காட்டு யானைகளின் சாணக்கழிவுகளில் 60 சதவீதம் பாலீதின் பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர். தவிர ஒரு யானை போட்ட சாணத்தில் சீனா தயாரிப்பான ஒரு குளிர்பான புட்டி முழுக்க இடம்பிடித்திருந்ததை படம் பிடித்துள்ளனர். இதனாலேயே இப்பகுதியில் வலசை போகும் யானைகள் குடற்புழு நோய் தாக்கப்பட்டு இறக்கின்றன என்பதை விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் செய்தனர். அவர்களின் பிரச்சாரத்தில், 'சுற்றுலா செல்பவர்கள் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை காடுகளில் எறிய வேண்டாம்!' என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தது. முக்கியமாக யானை இனங்களை அடுத்த தலைமுறைக்கும் காக்க வேண்டுமானால் குடற்புழு நோயிலிருந்து யானைகளை காப்பாற்ற வனப்பகுதியில் ஆங்காங்கே அதற்கு தகுந்த தடுப்பு மருந்துகளை யானைகள் சாப்பிடும் உணவில் கலந்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

நோய் வந்த பிறகு இந்த மருத்துவம், விழிப்புணர்வு, கோரிக்கை எல்லாம் சரி. இந்த நோய் வருவதற்கு மூல காரணி பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பொதுமக்கள் போடுவதும், பயன்படுத்துவதுதான் காரணமா? இல்லை. அதையும் தாண்டிய விஷயம் இருக்கிறது. அதுதான் கோவை மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வனப்பிரதேசங்களில் பயணிக்கும் நொய்யல் மற்றும் பவானி நதிகளில் போடப்படும் குப்பைக்கழிவுகள்.

இதன் வரலாற்றை எடுத்தால் கொஞ்சம் பயங்கரமானதாக விரிவானதாக இருக்கும். இருந்தாலும் அதனை இங்கே சொல்லியே ஆக வேண்டும் ஏனென்றால் கோவை வனக்கோட்டத்தில் கானுயிர்களின் ஜீவாதாரம் பல்கிப் பெருகி நிற்கும் முக்கிய பிரதேசமாக விளங்குவது இந்த பகுதிதான். அதற்கேற்ப இங்கே சூழல் சேதமும் நடந்து கொண்டிருக்கிறது.

அதில் தலையாயது, முன்னோடியானது சிறுமுகை விஸ்கோஸ். செயற்கை பட்டு தயாரிப்புக்காக 1960-70களில் உருவாக்கப்பட்ட இந்த பாக்டரி பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது. மற்ற எந்த நிறுவனத்தில் இல்லாத விதமாக தொழிலாளிகளுக்கு கை நிறைய சம்பளம் போனஸ் எல்லாம் கொடுத்தது என்பது அந்த காலத்தில் மிக முக்கியமான பாஸிட்டிவ் விஷயம். ஆனால் அதற்கு எதிரான நெகட்டிவ் விஷயம் அது ஏற்படுத்திய சூழல் கேடு.

பவானி நதியையும், அதன் சுற்றுப்புற நிலத்தடி நீரையும் பாழ்படுத்தி, அமிலம் பாய்ச்சியது. அதை எதிர்த்து போராடியதன் விளைவே, அந்த நிறுவனம் பல வழக்குகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து, இறுதியில் அது படு நஷ்டம் ஏற்பட்டு மூடும் நிலைக்குப் போனது. அந்த ஃபாக்டரி 2000 ஆம் ஆண்டு வாக்கிலேயே மூடப்பட்டு, இன்றைக்கு பாழடைந்து துருப்பிடித்த கட்டிடங்களாக காணப்படுகிறது. அதன் புதர்மண்டிய காடுகள் காட்டுப்பன்றி, கரடி, முள்ளம்பன்றி, சிறுத்தைகள், காட்டு யானைகளின் பதுங்கலிடங்களாக இப்போது மாறியுள்ளது. அதன் வரலாற்றையும், அது ஏற்படுத்திய சூழல் சேதத்தையும் பின்னர் தேவைப்படும்போது காணலாம்.

அதே சமயம் அந்த ஃபாக்டரியின் வரலாற்றில் 2000 ஆம் ஆண்டு வரை நீர்நிலைகள் கெட்டது, அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது, விவசாயிகள் போராடினர் என்பது மட்டும்தான் வரலாறு. அதில் எந்த இடத்திலும் கானுயிர்கள், குறிப்பாக காட்டு யானைகள் பாதிக்கப்பட்டு திசைமாறி ஊருக்குள் புகுந்தது என்றோ, அந்த தண்ணீரை யானைகள் குடித்து வயிற்று உபாதைகள் ஏற்பட்டது என்றோ, குடற்புழு நோயால் இறந்தது என்பது குறித்தோ செய்திகள் இல்லை.

ஆனால் அவ்வளவு பெரிய ஃபாக்டரி, மாபெரும் அளவில் சர்ச்சைக்குள்ளான தொழிற்சாலை மூடப்பட்ட பின்னால் அதை விட கொடூரமான கானுயிர் இதே காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வலசைகளில் நடக்கிறது என்றால் என்ன அர்த்தம்? அதை விட ரசாயனத்தை, அமிலத்தை உமிழும் சங்கதிகள் இங்கே நிறைந்து கிடக்கின்றன என்றுதானே?

ஆம் அதுதான் உண்மை. விஸ்கோஸ் போனாலும், அதை தூக்கி சாப்பிடும் வண்ணம் இந்த பிராந்தியத்தில் சின்னதும் பெரியதுமான நிறைய ஃபாக்டரிகள் வந்து விட்டன. அதில் ஒன்றுதான் காரமடை வெள்ளியங்காடு கிராமத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேக்கம்பட்டி சாலையில் உருவான நிறுவனம்.

இந்த நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு குப்பைக் கழிவுகளை பயன்படுத்தி ரீ சைக்கிளிங் (மறுசுழற்சி) முறையில் காகித அட்டைகள், கை துடைக்கும் நாப்கின்கள் உள்ளிட்ட பல்வேறு காகித பொருட்களை தயார் செய்வதாக தனது ஆறாவது பிரிவை (யூனிட்) தொடங்கியிருக்கிறது. இந்த கம்பெனி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து குப்பைக் கழிவுகளை தினசரி இறக்குமதி செய்தது. இப்படி 2006- 2007 ஆம் ஆண்டில் மட்டும் இந்த கம்பெனி இறக்குமதி செய்த குப்பையின் எடை மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரம் டன்கள்.

அதில் வந்தவை வெறும் பேப்பர் கழிவுகள் மட்டுமல்ல. அமெரிக்காவில் சாப்பிட பயன்படுத்திய ஒன்ஸ் யூஸ் எச்சில் தட்டுகள், பூச்சிக் கொல்லி மருந்துகளின் காலி டப்பாக்கள், அரைகுறையாக மருந்துடன் இருந்த பாட்டில்கள், மருத்துவக்கழிவுகள், அறுவை சிகிச்சை மூலம் கழிக்கப்பட்ட மனித உறுப்புகள், அரைகுறை பிரசவத்தில் பிறந்து இறந்த குழந்தைகள் என சகட்டு மேனிக்கு இருந்துள்ளன.

இவற்றை பிரித்தெடுக்க சப்- கான்ட்ராக்ட் எடுத்துள்ள கம்பெனிகள், தேவையானதை எடுத்து பெரிய கம்பெனிக்கு கொடுத்துவிட்டு, மீதிக்கழிவுகளை ஆங்காங்கு கிராமங்களில் உள்ள பள்ளங்களிலும், தண்ணீரில்லாமல் காய்ந்து கிடக்கும் ஓடைகளிலும், வறண்டு கிடக்கும் கிணறுகளிலும் கொட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த கிணற்றுக்கு சொந்தக்காரரான விவசாயிக்கு ரூபாய் ஆயிரம், இரண்டாயிரம் என கொடுத்தும் உள்ளனர்.

இதனால் குறிப்பிட்ட கிணற்றை ஒட்டியுள்ள, நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ள மற்ற கிணறுகள், நீர்நிலைகள் எல்லாம் கழிவு கலந்தன. ஊரையே தூக்கும் வண்ணம் கழிவுகளின் வாசம் வீசியது. அந்த நீரை பயிருக்கு பாய்ச்சியதில் அவை அப்படியே கருகிப்போயின. அதன் எதிரொலி மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தயராகினர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x