Published : 26 Sep 2017 02:32 PM
Last Updated : 26 Sep 2017 02:32 PM

யானைகளின் வருகை 44: உயிரைக் குடிக்கும் அவுட்டுக்காய் வெடிகள்!

மாங்கரைக்கு அப்பால் குருடிமலை பகுதியில் அமைந்துள்ளது பொன்னுாத்து மலை. இங்கே உள்ள சுற்றுவட்டார கிராமங்களில்ஒரு மாதிரி பிளிறலுடன் (அலறல்) சுற்றித்திரிந்த 7 வயது குட்டி யானையைப் பார்த்து இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் கடைவாய்ப்பகுதி கிழிந்து, தன் தும்பிக்கையை கூட சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது அந்த யானை. அதனுடன் அந்த தாயும் அதற்கு துணையாக குட்டியை அரவணைத்து நகருவதும், அது அலறும்போது தானும் அலறுவதும், அது ஓட்டம் எடுக்கும்போது தானும் ஓட்டமெடுப்பதுமாக அந்தப் பகுதியையே அல்லோல கல்லோலப்படுத்தியது.

அதைப் பார்த்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள்ளாகவே காட்டுக்குள் ஓடிவிட்டது யானைகள். அதை தேடி காட்டுக்குள் சென்ற வனத்துறையினர் அடுத்தநாளே கடத்துவழிக்காடு என்ற இடத்தில் காயமடைந்த குட்டியையும், அதன் தாயையும் கண்டுபிடித்தனர். அங்கே இருந்த யானைக்கூட்டத்துடன் இந்த தாய் மற்றும் குட்டி

யானை சேர்ந்து கொண்டன. அங்கு சென்ற வன ஊழியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் குட்டி யானையை தாயிடம் இருந்து பிரித்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் தாய் யானை குட்டியிடம் யாரும் நெருங்க விடாமல் அங்கேயே சுற்றியபடி இருந்தது.

இந்த யானை தொடர்ந்து சின்னத் தடாகம், வீரபாண்டி, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து ரகளையும் ஈடுபட்டது. குட்டி யானைக்கு ஏற்பட்டுள்ள காயத்தை குணப்படுத்த வனத்துறையினர் ஒரு வாரத்திற்கு மேலாக பல நடவடிக்கைகளை எடுத்தனர். அதன்படி, யானைக்கு மருந்து, மாத்திரை கலந்த உணவு வன எல்லைப் பகுதியில் வைத்தனர். இதனை குட்டி யானையும், தாய் யானையும் சாப்பிட்டது. ஆனால் எந்தப் பலனும் இல்லை. இதற்கு எதிர்வினையாக இந்த யானைகள் இரவு 8 மணிக்கு மேல் வனத்தில் இருந்து வெளியேறி உணவிற்காக ஊருக்குள் புகுந்து விடுவதை வழக்கமாகக் கொண்டது. வீடுகளை, கடைகளை சேதப்படுத்தியது. இதனால், செங்கல் சூளை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு நாள் குட்டி யானை, தாய் யானை இரண்டும் 9 யானைகள் கொண்ட ஒரு பெரிய யானை கூட்டத்துடன் இணைந்தது. இவை வனப்பகுதியில் ஒன்றாக சுற்றித் திரிகிறது. எனவே வேறு வழியில்லாமல் தாய் யானை மற்றும் கூட்டத்து யானைகளை விரட்டி விட்டு குட்டியைப் பிடித்து சிகிச்சையளிக்க சாடிவயலிலிருந்து சுஜய் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அந்த கும்கி கூட்டத்து யானைகளையும், தாய் யானையையும் விரட்டியது. கூட்டத்து யானைகள் காட்டுக்குள் சென்றுவிட, தாய் யானை மட்டும் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து ஓடிவந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தவர்களையும் துரத்தியது. தவிர அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தியது. இப்படி சில மணிநேர போராட்டத்துக்குப் பின் கும்கி, தாய் யானையை விரட்டியது.

அதன் பின்னர் குட்டி யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த யானை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து யானையை புதைப்பதற்காக வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில் காட்டுக்குள் சென்ற தாய் யானை மீண்டும் வந்தது. குட்டி யானை இருந்த இடத்தை சுற்றி, சுற்றி வந்து பிளிறியது. குட்டி யானையை காணாததால் மிகவும் ஆக்ரோஷத்துடன் தாய் யானை செங்கல் சூளையில் உள்ள கட்டிடத்தை சேதப்படுத்தியது. பின்னர் குட்டி யானை இருந்த இடத்தில் கிடந்த மண்ணை எடுத்து தலையில் வாரிபோட்டு பிளிறியபடி பல மணி நேரம் அங்கேயே சுற்றி வந்தது பரிதாபமாக இருந்தது. ஒரு மாதகாலம் தடாகம் பகுதியில் நடந்த இந்த யானை விரட்டல் நிகழ்வு சோகத்திலேயே முடிந்தது. இது இன்றைக்கு ஓராண்டுக்கு முன்பு நடந்த சம்பவம்.

இதைத் தொடர்ந்து சில மாதங்களில் இதேபோன்ற இன்னொரு சம்பவம்.

இந்த சம்பவம் நடந்த பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்டது பாலமலை. இதன் அருகே உள்ளது பாரதிபுரம். இப்பகுதியில் ஒரு நாள் இரவு ஒரு வேட்டுச்சத்தம். அப்போது அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை விரட்ட விவசாயிகள்தான் பட்டாசு வெடித்ததாக கருதிக் கொண்டனர். ஆனால் அதே சமயம் இரண்டு பேர் மொபட்டில் காட்டுப்பன்றி ஒன்றை வைத்துக் கொண்டு வர அவர்களை வழிமறித்துப் பிடித்துள்ளனர்.

உடனே பிடிபட்டவர்களில் இருவரில் ஒருவர் ஏதோ ஒரு பொருளை பாக்கெட்டிலிருந்து எடுத்து தூரத்தில் இருந்த புதருக்குள் வீசியதைக் பார்த்துள்ளனர். அது என்ன என்று அவர்களிடம் கேட்க மூச்சுவிடவே மறுத்தனர். அங்குள்ள புதரில் தேடியபோது காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் அவுட்டுக்காய் எனப்படும் 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்துள்ளன. காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பல்களில் இருவரே தங்களிடம் பிடிபட்டவர்கள் என்பதை அறிந்த வனத்துறையினர் அவர்களை வனத்துறை அலுவலகம் கொண்டு போய் தீவிர விசாரணையில் ஈடுபடுத்தினர்.

பிடிபட்ட இருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வெடிகுண்டுகளை வாங்கித்தரும் வியாபாரிகள் இருவர் பிடிபட்டனர். அந்த இருவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அன்னூர் அருகே ஒரு கும்பல்தான் அவுட்டுக்காய் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்கிறது என்ற தகவல் கிடைக்க, இதில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் குருசாமி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சூழ்நிலையில் இதற்கடுத்த நாள் அதிகாலை இந்த கும்பல் பிடிபட்ட இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கோவனூர் கிராமத்து எல்லையில் ஒரு காட்டு யானை தாடை தொங்கிய நிலையில் அடிபட்டு அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் நீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறது. வலி தாளமுடியாமல் அங்கேயே பிளிறியபடியே அலைந்திருக்கிறது. அதைப் பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு வந்த வனத்துறையினர் அடிபட்ட யானையைத் தேட அது அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. அந்த யானை காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் அவுட்டுக்காயை மேய்ச்சலின் போது வாய் வைத்திருக்க வேண்டும். அதில்தான் அதன் தாடை கிழிந்து தொங்கியிருக்க வேண்டும். எனவே அதற்கு உடனே சிகிச்சையளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த வனத்துறையினர் காட்டுக்குள் சென்றுவிட்ட யானையைத் தேடும் பணியைத் தொடர்ந்தனர். அது தண்ணீர் அருந்த வரும் இடங்களில் வாழைப்பழத்தில் (ஒரு வாழைத்தாரில்) மருந்துகளை கலந்து வைத்தனர். அதன் காயம் ஆறவும் வலி நிவாரணம் பெறவும் இதில் மாத்திரைகள் வைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலையில் அந்த வாழைத்தாரையே காணோம்.

அந்த வாழைப்பழத் தாரை அந்த யானைதான் சாப்பிட்டதா? வேறு யானையோ, மிருகங்களோ சாப்பிட்டதா? என்று புரிபடாத நிலையில் மறுபடியும் அடிபட்ட யானை வேட்டை தொடர்ந்தது. இறுதியில் அந்த அவுட்டுக்காய் வெடியில் சிக்கிய யானை இறந்த பின்பே மீட்கப்பட்டது.

இப்படி பன்றிகளுக்கு வைக்கப்படும் அவுட்டுக்காய் வெடிகளால் யானைகளும் பாதிக்கப்படுவது, உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அவுட்டுக்காய் வெடி பற்றியும், அதை கையாளும் கும்பல் பற்றியும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவிக்கின்றனர் வனத்துறையினர்.

பொதுவாக வனப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளை அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டு மூலம் கொன்று அதன் இறைச்சியை விற்று வருகின்றனர். வெடி மருந்தை சிறுகற்களோடு சேர்த்து இறுக கட்டி அதன் மீது மாட்டின் கொழுப்பை தடவி, தேவைப்பட்டால் மாட்டுக்கொழுப்பு, குடல் போன்றவற்றை அதன் மீது சுற்றி வெகு தொழில் நுட்பத்துடன் வனப்பகுதிகளில் இதை வைக்கிறார்கள். இதனை கடிக்கும் காட்டுப்பன்றி வெடி வெடித்து தலை சிதறி இறந்து விடுகிறது. அதனைக் கொண்டு சென்று இறைச்சியாக்கி கிலோ ரூ. 200 வரை விற்பனை செய்கிறார்கள்.

இது அன்னூர், சத்தியமங்கலம், பவானி சாகர் போன்ற பகுதிகளில் நிறைய நடக்கிறது. இந்த நாட்டு வெடிகுண்டு சாதாரணமாக உராய்வு ஏற்பட்டாலோ, கூடுதல் வெப்பம் படிந்தாலோ, சிறிய அழுத்தம் கிடைத்தாலோ கூட வெடித்துவிடும் தன்மை கொண்டவை. கடும் பலம் கொண்ட காட்டுப்பன்றிகளே தாடை கிழிந்து சாகிறது என்றால் மற்ற விலங்குகள் என்ன ஆகும்? அப்படித்தான் யானைகள் சில சமயங்களில் தீவனங்களை சாப்பிடும்போது, அதற்குள் சுருண்டிருக்கும் அவுட்டுக்காய் தெரியாமல் தும்பிக்கையால் சுற்றி வாயில் போட்டுவிடும்.

அப்படித்தான் 6 மாதங்களுக்கு முன்பு தடாகம் பகுதியில் தாடை கிழிந்து சுற்றித்திரிந்த குட்டி யானை இறந்தது. அதேபோல்தான் இந்த காட்டு யானையும் அவுட்டுக்காய் வெடித்து தாடை கிழிந்து காயத்துடன் சுற்றியபடி செத்துப் போயிருக்கிறது.

பொதுவாக யானைக்கு ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் அவசியம் . வாய் பகுதி சிதறி புண்ணான யானைகள் நீர் அருந்த முடியாமலும், தீவனம் உண்ண முடியாமலும் மிகவும் பலவீனமடைந்து போகிறது. தவிர கடும் வலி காரணமாக ஓரிடத்தில் நில்லாமல் ஆக்ரோஷமாகவும் இருக்கும். அதனால் அதற்கு சிகிச்சையளிப்பது என்பது தேர்ந்த கால்நடை டாக்டர்களினாலேயே இயலாத காரியம். எனவே இப்படி மாட்டும் யானைகள் இறப்பை தவிர வேறு எதிலும் விடிவில்லை.

அதேசமயம் அடிபட்ட யானை சும்மாவும் இருக்காது. ஊருக்குள் நுழையும், விளைநிலங்களுக்குள் புகும். பயிர்களை சேதப்படுத்தும். மனித உயிர்களையும் ஆக்ரோஷமாக கொல்லும். ஏனென்றால் இந்த வெடியை வைத்தது, வெடித்தது மனிதர்கள்தான் என்பது அதற்கு தெரியும் என்கிற ஆச்சர்ய தகவல்களை அப்போது நிறைய பகிர்ந்து கொண்டனர் யானைப் பாகன்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x