Published : 06 Sep 2017 09:10 AM
Last Updated : 06 Sep 2017 09:10 AM

வாங்க பறிக்கலாம்.. மூலிகை தேடும் முப்பது கிராமங்கள்!

மூ

லிகை வைத்தியம் என்றாலே கேரளத்தைத்தான் பலரும் கைகாட்டுகிறார்கள். ஏனென்றால், கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளத்தில்தான் அத்தனை மூலிகைகளும் விரிந்து, பரந்து கிடக்கின்றன. கேரளத்தின் கொழிஞ்சாம்பாறையும் அதன் சுற்று வட்டாரமும் மூலிகை தேடுவோரின் முக்கியக் கேந்திரம் என்று சொன்னால் அது மிகையில்லை!

பெரும்பாலானவர்கள் தமிழர்கள்

கொழிஞ்சாம்பாறை நகரப் பகுதியில் திங்கள், வியாழக்கிழமைகளில் பலர் வண்டி, வண்டியாக இலை, தழைகளை ஏற்றிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும். சாதாரணமாக பார்த்தால் ஏதோ குப்பைக் கூளங்களை ஏற்றுவது போலத்தான் தெரியும். ஆனால், ஆயுர்வேத மருந்துக் கம்பெனிகளுக்காக சேகரிக்கப்படும் இவை அத்தனையும் அரியவகை மூலிகைகள். பழநியார்பாளையம் என்ற கிராமத்தினரால் கேரளத்திலும் தமிழகத்தின் வேதாரண்யம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்தும் இவை சேகரித்து அனுப்பப்படுகின்றன. இப்படி மூலிகை சேகரிப்பில் ஈடுபட்டிருப்போரில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம்!

பாலக்காடு - பொள்ளாச்சி சாலையில் கொழிஞ்சாம்பாறைக்கு அருகே உள்ளது இந்த பழநியார்பாளையம். இங்கு சுமார் 400 குடும்பங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே மூலிகை சேகரிப்புத்தான் பிரதான தொழில். தினமும் அதிகாலையிலேயே புறப்படும் இவர்கள், வயல், வரப்பு, தோட்டம் துரவு, காடுகள் என அலைந்து மூலிகைகளைத் தேடுகிறார்கள். பெண்கள் மூலிகைகளை பறித்துச் சேர்க்க.. ஆண்கள் இரு சக்கர வாகனங்களில் அறுபது, எழுபது கிலோ மீட்டருக்குச் சுற்றி, மூலிகைச் செடிகளின் கொம்பு, கிழங்கு, வேர்கள் என பறித்துக்கொண்டு ஊர் திரும்புகிறார்கள். கற்றாழை, தண்ணீர்விட்டான் கிழங்கு, விருமி, கரப்பான் தழை, சீண்டல் கொடி என நூற்றுக்கணக்கான மூலிகைகளின் பெயர்களை இங்கே சிறுவர்கள்கூட தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பழக்கம் எப்படி வந்தது?

சாதாரண கற்றாழை கிலோ மூன்று ரூபாய் என்றால் அபூர்வமான அடபதி என்ற கிழங்கு கிலோ 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. சரி, இங்குள்ள மக்களுக்கு மூலிகை சேகரிக்கும் பழக்கம் எப்படி வந்தது? அது பற்றிப் பேசினார் மூலிகை சேகரிப்பாளர் பிரசாத். “இந்த சுற்றுவட்டாரத்துல இருக்கிற முப்பதுக்கும் மேற்பட்ட ஊர்கள்ல தமிழர்கள்தான் அதிகமா வசிக்கிறாங்க. எல்லாருமே, மூணு, நாலு தலைமுறைக்கு முன்பே திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து இங்குவந்து குடியேறுனவங்களோட வாரிசுகள்தான்.

ஆரம்பத்துல மீன் பிடித்தல், விவசாயம்னு பாத்துட்டுருந்தோம். அந்தத் தொழில்கள் மங்கிப்போன சமயத்துல, முப்பது வருசத்துக்கு முந்தி இங்கே, கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை தொடங்கினாங்க. அந்த வைத்தியசாலைக்கு மூலிகைகளை சப்ளை செய்யுறதுக்கு 2 வியாபாரிகள் இருந்தாங்க. அவங்கதான் இங்குள்ள மக்களை மூலிகை சேகரிப்புல இறக்கி விட்டவங்க. அதுக்கப்புறம்தான் இந்தப் பகுதியில மூலிகைகள் இருப்பதே எங்களுக்குத் தெரியவந்துச்சு. மூலிகை சேகரிப்புல கிடைத்த அனுபவத்தை வைத்து காலப்போக்கில் எங்க மக்களில் சிலரே வியாபாரிகளா மாறுனாங்க.

வாரத்துக்கு 100 டன்

கோட்டக்கல் வைத்தியசாலையைத் தொடர்ந்து, கேரளத்தில் அரசு மற்றும் தனியார் ஆயுர்வேத மருந்து தயாரிப்புக் கம்பெனிகள் நூற்றுக் கணக்கில் உருவாச்சு. அவங்களுக்குத் தேவையான மூலிகைகளை சப்ளை செய்வதற்காக இங்குள்ள மக்கள் குடும்பம், குடும்பமா மூலிகை சேகரிப்பில் இறங்கினாங்க. இங்கே மழை யில்லாத சமயத்தில் தமிழகத்தின் திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மழை இருக்கும். அந்த சமயத்துல அங்கே சென்று, அங்கிருந்தும் மூலிகைகளை சேகரித்துவர ஆரம்பிச்சாங்க. நானெல்லாம் வேதாரண்யம் வரைக்கும் போய் மூலிகை சேகரித்து வருகிறேன்.” என்று சொன்னார்.

மூலிகை சேகரிப்பின் மூலம் இங்குள்ள ஒவ்வொருவரும் தினமும் ஆயிரத்திலிருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்கள். இவர்கள் சேகரிக்கும் மூலிகைகளை கொள்முதல் செய்வதற்காக இந்தப் பகுதியில் 50 வியாபாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் தான் திருச்சூர் மற்றும் கள்ளிக்கோட்டையில் உள்ள சுமார் இருநூற்றுக்கும் மேலான ஆயுர்வேத மருந்துக் கம்பெனிகளுக்கு மூலிகை சப்ளையர்கள். இவர்கள் மூலமாக கொழிஞ்சாம்பாறை பகுதியிலிருந்து வாரத்துக்கு 100 டன் அளவுக்கு மூலிகைகள், வேர்கள், கிழங்குகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

“எல்லாம் சரி, இதில் எந்த மூலிகை எந்த மருந்துக்கு பயன்படுத்துறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என இங்குள்ள மக்களைக் கேட்டால், “எட்டு மருந்துகளின் கூட்டுச் சேர்க்கைதான் ஆயுர்வேதம் என்பார்கள். எனவே, ஒரு மூலிகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட மருந்து மட்டும் தயாரிக்கிறதில்லை.

ஒரே மூலிகை பல மருந்துகளை தயாரிக்கவும் பயன்படும். அதெல்லாம் மருந்துக் கம்பெனிகளுக்குத்தான் தெரியும்” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x