Last Updated : 25 Sep, 2017 03:24 PM

 

Published : 25 Sep 2017 03:24 PM
Last Updated : 25 Sep 2017 03:24 PM

104-ஐ அழைத்திருந்தால், தற்கொலையைத் தடுத்திருக்கலாம்!

அதிகாலை நேரம். பெண் குழந்தையொன்று போன் செய்கிறது. மழலைப் பேச்சைவிட அழுது விம்மும் சத்தமே அதிகம் கேட்கிறது. மறுமுனையில் கனிவான குரலில் பேசிய பெண், அந்தக் குழந்தையைத் தேற்றி, “என்னமா விஷயம் ச்சும்மா சொல்லு” என்று மென்மையாகக் கேட்கிறார்.

“என்னன்னு தெரியலை மிஸ் (அப்படித்தான் அந்தக் குழந்தை சொல்லியிருக்கிறது) வீட்ல அப்பா அம்மா எல்லாரும் அழுறாங்க. என்னன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க. எனக்குப் பயமா இருக்கு மிஸ். பிளீஸ் ஹெல்ப் மீ!” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டது குழந்தை.

ஜிபிஆர்எஸ் மூலம் அந்தக் குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து 108 ஆம்புலன்ஸை அனுப்பினார்கள். போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு தம்பதி தன் இரு குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, தாங்களும் குடிப்பதற்கு ஆயத்தாக இருந்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்ததும் பதற்றமடைய, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்கள். இந்தச் சம்பவம் நடந்தது சென்னையில். 104 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில்!

இப்போது கிட்டத்திட்ட இந்தத் திட்டத்தை மக்கள் மறந்தேவிட்டார்கள். கடந்த 2 மாதத்தில் தமிழகத்தில் 100க்கும் அதிகமானோர் சொந்தப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 20 பேர். செத்தவர்கள், ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கும் விஷத்தைப் புகட்டி, தீவைத்துக் கொன்ற கொடூரத்தை என்னவென்று சொல்வது?

104 திட்டம்

முந்தைய முதல்வர் ஜெயலலிதாவால் 30.12.13 அன்று தொடங்கப்பட்டது 104 மருத்துவ உதவித் திட்டம். 108க்குப் போன் செய்து அவசர ஆம்புலன்ஸ் உதவி கோருவது போல, 104ஐ அழைத்து மருத்துவ தகவல்கள், ஆலோசனை மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில்தான் 108 மற்றும் 104 அலுவலகங்களின் தலைமையங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் 104 எனும் எண்ணை இலவசமாகத் தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவ உதவி, ஆலோசனை, மனநல ஆலோசனை போன்றவற்றை வழங்குவதற்காக 24 மணி நேரமும் தகுதிபெற்ற மருத்துவர்களும், மனநல நிபுணர்களும் காத்திருக்கிறார்கள்.

“அந்தச் சென்னை சிறுமியைப் போல, ஒரே ஒருவர் போன் செய்திருந்தால் மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இப்படிப் பரிதாபமாக இறந்திருக்க மாட்டார்கள். பொறியியல் படிக்கிற குழந்தைகள், அத்தனை பேர் கையிலும் ஸ்மார்ட் போன்கள். ஆனால், 104ஐ மறந்துவிட்டார்களே” என்று வேதனையோடு சொல்கிறார் வி.பி.இளையபாரி. 104 திட்டத்தின் மாநில ஆலோசகர்.

“இன்றைய வாழ்க்கை முறை அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தைத் தருகிறது. பிரச்சினையில் இருப்பவர்களை ஆற்றுப்படுத்துகிற ஆட்களை இன்றைய தனிக்குடித்தனங்கள் கொண்டிருப்பதில்லை. பிரச்சினைக்குக் காரணமான அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிற அளவிற்கு நெருக்கமான நண்பர்கள் இல்லாததும், இதுபோன்ற தற்கொலை எண்ணங்களுக்குக் காரணமாகிவிடுகின்றன. பிரச்சினைக்குரியவர்கள், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்திக்காமல் தாமதப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு 104 திட்டம் ஒரு வரப்பிரசாதம். முகத்தைக்கூட காட்டத் தேவையில்லை. உங்களைப் பற்றிய ரகசியங்கள் 100% பாதுகாக்கப்படும். எனவே, தயவு செய்து தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், மீள முடியாத மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். ஒரு முறை தொடர்பு கொண்டால் போதும். ஒரு எண் வழங்கப்பட்டுவிடும். அந்த எண்ணை மட்டும் தெரிவித்து, தொடர்ந்து 10 ஆண்டுகள் வரையில் கூட இலவசமாக ஆலோசனை பெறலாம். ஒவ்வொரு முறையும் அறிமுகமோ, பிரச்சினையைச் சொல்ல வேண்டிய தேவையோ இல்லை. எனக்குத் தெரிந்து, குரூப் 1 அதிகாரிகளாக இருக்கும் தம்பதியருக்கு குழந்தையில்லை. அவர்களுக்கிடையே ஈகோ பிரச்சினை வந்து விவாகரத்து செய்வது என்று முடிவெடுத்துவிட்டார்கள். அதற்கு முன்பாக அதில் ஒருவர் 104ஐத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றார். இப்போது ஒன்றாக இருக்கிறார்கள். 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான போது 104 மையத்தை கூடுதல் பணியாளர்களுடன் நடத்தினோம். வழக்கமாக ஒரு நாளைக்கு 1500 அழைப்புகள் தான் வரும். ஆனால், 10ம் வகுப்பு முடிவு வெளியானபோது, 4000 அழைப்புகள் வந்தன” என்றார்.

அவர் சொல்வது இருக்கட்டும், 104 சரியாக செயல்படுகிறதா என்று அறிய அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். அடுத்த வினாடியே ஒரு பெண் போனை எடுத்துவிட்டார். “வணக்கம். 104 ஆலோசனை மையம். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டார். “இந்த நம்பரைப் பற்றி கேள்விப்பட்டேன். செயல்படுகிறதா? என்று சரி பார்த்தேன், நன்றி” என்றேன்.

“அப்படியா, மிக்க நன்றி. உங்களுக்கோ, உறவினர்களுக்கோ ஏதேனும் நோய் அறிகுறி, அதற்கான உடனடி மருத்துவம், தேவையான மருத்துவ பரிசோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சித்தா, ஹோமியோபதி, அலோபதி போன்ற வெவ்வேறு மருத்துவ முறைகள் என்று எந்தத் தகவலை வேண்டுமானாலும் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், அங்குள்ள வசதிகள், உறுப்பு தானம், விஷ முறிவு சிகிச்சை மையங்கள் போன்றவை குறித்தும் கேட்கலாம். அரசு மருத்துவமனையில் உங்களைச் சரியாக கவனிக்கவில்லை என்றாலோ, மருத்துவர்கள் இல்லை என்றாலோ அங்கிருந்தே போன் செய்தால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் நிலைய மருத்துவர் அல்லது டீனைத் தொடர்பு கொண்டு உங்களது குறையைப் போக்குவோம். 108ஐ தொடர்ப கொள்ளவோ, ஆம்புலன்ஸ் வரத் தாமதமானால்கூட, 104ல் தொடர்பு கொள்ளலாம். மருத்துவம் தொடர்பான எல்லாப் புகார்களையும் பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இவ்வளவு நல்ல திட்டம் இன்னமும் மக்களைச் சரியாகச் சென்றடையவில்லை என்பதையே தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றன. சினிமா தியேட்டர்கள், பத்திரிகைகள், டி.வி., ரேடியோ உள்ளிட்ட ஊடங்கள் வாயிலாக விளம்பரம் செய்வார்களா மருத்துவத்துறையினர்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x