Published : 09 Sep 2017 09:52 AM
Last Updated : 09 Sep 2017 09:52 AM
பு
துச்சேரி ஈஸ்வரன் கோயில் தெரு - இங்குதான், பாட்டாலே புத்திசொன்ன முண்டாசுக் கவிஞன் பாரதியின் வீடு இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இந்த வீட்டிலிருந்து பல அரிய படைப்புகளைத் தந்தார் பாரதி. இப்போது, அவரது நினைவுகளையும் படைப்புகளையும் சுமந்துகொண்டு அருங்காட்சியகமாக நிற்கிறது இந்த வீடு.
விடுதலைப் போராட்டத்தின் போது பிரான்ஸின் வசமிருந்தது புதுச்சேரி. அந்தக் காலகட்டத்தில் 1908-லிருந்து 1910-வரை பாரதியார் புதுச்சேரி வீட்டில் வசித்தார். இங்கிருந்துதான், மக்களைத் தட்டி எழுப்பிய பல படைப்புகளை அவர் தந்தார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்டவைகளையும் இங்கிருந்தபோதே எழுதினார்.
அரிய பொக்கிஷங்களாக..
இப்போது இந்த வீட்டை ஆருங்காட்சியகமாகவும் ஆய்வுமையமாகவும் அரசு பராமரித்து வருகிறது. இங்கே, ஆயிரக் கணக்கில் பாரதியின் கையெழுத்துப்பிரதி படைப்புகளும் அவர் பயன்படுத்திய பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களும் அரிய பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதுதவிர, சிறப்பு நூலகம் ஒன்றும் உள்ளது.
மிகப் பழமையான இந்த இல்லம் பராமரிப்புப் பணிகளுக்காக 2009-ல் தற்காலிகமாக மூடப்பட்டது. நிதிப்பற்றாக்குறையால் புனரமைப்புப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுப் பெறாமல் இழுத்துக் கொண்டிருந்தது. இதனால், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாரதியார் நினைவு இல்லத்தைப் பார்வையிட முடியவில்லையே என வருத்தப்பட்டனர். இதுகுறித்து, ‘தி இந்து’வில் 2013-ல் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறை மூலம் மேலும் ஒரு கோடி ரூபாய் புனரமைப்புப் பணிக்காக ஒதுக்கியது. இதையடுத்து, ‘இன்டாக்’ அமைப்பின் மூலம் பாரதியார் இல்லம் கடந்த ஆண்டு புதுப்பித்து முடிக்கப்பட்டது.
சிலாகித்துச் சொல்கிறார்கள்
பாரதியின் கையெழுத்துப் பிரதி படைப்புகள் உள்பட சுமார் 3,000 நூல்கள் இந்த இல்லத்தின் தரைத்தளத்தில் உள்ளன. இதர சுமார் 17 ஆயிரம் நூல்கள் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்புக் கலவை கொண்டும், மெட்ராஸ் டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களைக் கொண்டும் இந்த இல்லத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்திருக்கிறார்கள். இல்லத்தின் முகப்புத் தோற்றம் பிரெஞ்சு கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பது போல் இருந்தாலும் உள்புறத்தில் தமிழர் மரபுப்படி நடை, முற்றம், அறைகள், முதல் தளம் ஆகியவை உள்ளன.
தரைத் தளத்தில் பாரதியாரின் அபூர்வமான நிழல்படங்களைப் பார்க்க முடிகிறது. இதில், முக்கியமானது பாரதி தன் மனைவி செல்லம்மாளுடன் சேர்ந்து நிற்கும் நிழல்படம். நூறாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அபூர்வப்படம் இது. இவை தவிர, நம்மைப் பாரதி வாழ்ந்த காலத்துக்கே கடத்திச் செல்லும் இன்னும் ஏராளமான ஆவணங்களையும் இங்கு பார்க்கமுடிகிறது. அதனால் தான், இங்கு வந்துபோகும் பாரதியின் அபிமானிகள் அவரோடு அமர்ந்து பேசிவிட்டுப் போனது போன்ற உணர்வைப் பெறுவதாக சிலாகித்துச் சொல்கிறார்கள்.
பாரதி அமர்ந்த பெஞ்ச்
கடந்த 33 ஆண்டுகளாக இந்த இல்லத்தின் பொறுப்பாளராக இருந்தவர் முனைவர் செங்கமலதாயார். இந்த இல்லத்தின் ஒவ்வொரு அங்கமும் செங்கமலதாயாருக்கு அத்துபடியான விஷயம். அண்மையில் ஓய்வுபெற்றிருக்கும் அவரிடம் இந்த இல்லம் குறித்துப் பேசினோம். “இந்த இல்லம் முழுக்க பாரதியே நிறைந்துள்ளார். முக்கியமாக, பாரதி தனது நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிய அந்த பழைய பெஞ்ச். அதனருகே செல்பவர்கள், ‘பாரதி அமர்ந்த பெஞ்ச்’ என்று சொல்லி தங்கள் கையால் தொட்டுப் பார்த்து வியப்பார்கள். பாரதி எழுதிய இதழ்கள், அவரது கையெழுத்துப் பிரதி படைப்புகள், தாகூர், அரவிந்தர் உள்ளிட்ட பலரது படைப்புகளுக்கான பாரதியின் மொழியாக்கம் என பல விஷயங்களை இங்கே சேகரித்து வைத்துள்ளோம்.
தனது முக்கியமான பல படைப்புகளை பாரதி இந்த வீட்டில் வசித்தபோதுதான் படைத்துள்ளார். பறவை களுக்கு அரிசி வைத்தது இங்குதான். சுருக்கமாகச் சொல்வதானால், பாரதி தனது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தை இங்குதான் கழித்தார். இங்குள்ள பாரதி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டலைஸ் செய்து பாதுகாக்க வேண்டும். அவற்றை இனிவரும் தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக டிஜிட்டல் நூலகமாக்க வேண்டும். பாரதி பத்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இந்தப் வீட்டில் நான் 33 ஆண்டுகள் பணி செய்திருக்கிறேன். அதுவே எனக்கு ஆத்மதிருப்தி.” என்று சொன்னார்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT