Published : 22 Sep 2017 10:35 AM
Last Updated : 22 Sep 2017 10:35 AM

யானைகளின் வருகை 42: பூமித்தாயின் மார்பகங்களை அறுத்து...

குஞ்சூர்பதி. வனவிலங்குகள் அதிகம் நடமாட்டம் உள்ள பாலமலையை ஒட்டியிருக்கும் ஒரு கிராமம். பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகத்தின் கீழ் வரும் மலைக்கிராமமான இங்கு ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டையில் மலையடிவாரத்தில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள், மான்கள், காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அப்படித்தான் ஒரு குட்டியுடன் 2 பெண் யானைகள் இந்த குட்டைக்கு அந்த நாளில் பின்னிரவு 3 மணியளவில் தண்ணீர் அருந்த வந்தன. அதில் ஒரு பெண் யானை குட்டையில் உள்ள சேற்றில் வகையாக சிக்கிக் கொண்டது.

அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த யானையும், உடன் வந்த மற்றொரு பெண் யானையும் அந்த பிராந்தியத்தையே உலுக்குகிறாற்போல் பிளிற ஆரம்பித்தன. அதில் தூக்கம் தொலைத்த குஞ்சூர்பதி கிராம மக்கள் காட்டுப்பகுதிக்கு வந்து குட்டையில் யானை சிக்கியிருப்பதைக் கண்டனர். வனத்துறைக்கும் தகவல் தந்தனர். அதைத் தொடர்ந்து பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறையினர் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சகிதம் வந்து யானையை சேற்றிலிருந்து மீட்கும் பணியில் இறங்கினர். அங்கே சேற்றில் சிக்கிய பெண் யானையை சுற்றிச்சுற்றி பிளிறிக் கொண்டு குட்டி யானை ஓடிக் கொண்டிருந்தது.

அதற்கு அப்பால் நின்ற மற்றொரு பெண் யானை குட்டையில் சிக்கியிருக்கும் பெண் யானையை மீட்க முயற்சித்து தும்பிக்கையை நீட்டுவதும், தானும் சேற்றில் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்தோ என்னவோ தூரத்தில் சென்று அஞ்சி நின்று பிளிறுவதுமாக ஒரு பாசப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. இதனால் சேற்றில் சிக்கிய யானைக்கு கிட்டே போக முடியாத சூழல் வனத்துறைக்கு இருந்தது. எனவே குட்டி யானை மற்றும் அந்த பெண் யானையை விரட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அவை காட்டுக்குள் ஓடுவதும், திரும்ப ஓடி வருவதுமாக இருந்து ஒரு கட்டத்தில் ஒரு மறைவிடத்தில் ஆசுவாசப்படுத்தி நின்றன.

அதைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் ஒன்று கொண்டு வரப்பட்டு, அதில் கயிறு கட்டி சேற்றில் சிக்கிய யானையை நீண்ட நேரம் போராடி மீட்டனர். சேற்றில் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததால் சோர்வில் இருந்த அந்த யானை எழுந்து நிற்க முடியாமல் கீழேயே படுத்துக் கிடந்தது. அதற்கு தண்ணீரும் பழங்களும் கொடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் குழு குளுக்கோஸ் மற்றும் மருந்துகளையும் ஊசிமூலம் செலுத்தினர். அதையடுத்து காட்டு யானை மெல்ல எழுந்து நின்றது. பின்பு அது வனப்பகுதிக்குள் சென்றது. அங்கு மரங்களின் மறைவில் அதுவரை நின்றிருந்த குட்டி யானை ஓடிவந்து தாய் யானை அருகே நின்றது. இதுவும் தும்பிக்கையால் தடவிக் கொடுத்து குட்டியை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்தது.

இந்த சம்பவம் சரியாக இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது. இப்படி குட்டைகளில், குழிகளில், புதை சேறுகளுக்குள் காட்டு யானைகள் சிக்குவதும், அதை மீட்பதும் சமீப காலமாக வனத்துறையினருக்கு அன்றாட வேலையாகிக் கொண்டிருக்கிறது. இந்த யானை மீட்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பவானிசாகர் பகுதியில் புதைசேற்றில் சிக்கியிருந்த யானைகள் அடுத்தடுத்த சில நாட்களில் மீட்கப்பட்டு காட்டுக்குள் விரட்டப்பட்டன. சில பகுதிகளில் சேற்றில் சிக்கி யானைகள் இறந்த சம்பவமும் நடந்திருக்கிறது. சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை வனப்பகுதிகளில் இப்படி சேற்றில் சிக்கும் காட்டு யானைகள் இயல்பாகவே தண்ணீர் தேடி வந்து, காய்ந்து சுருங்கிக் கிடக்கும் குட்டையில், வறண்ட அணைக்கட்டுகளில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் குழிகளில். வறண்டு கிடக்கும் மண் எடுக்கப்பட்டு சேறும் சகதியுமாக காணப்படும் குளங்களில் சிக்கி அபாயத்தில் மாட்டுபவை.

ஆனால் பெரிய நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் குறிப்பாக மாங்கரை, ஆனைகட்டி, சோமையனூர், பெரிய தடாகம், சின்னத் தடாகம், கோபனாரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரும்பின பக்கமெல்லாம் செங்கல்லுக்காக மண் எடுக்கப்பட்ட படுபாதாளக்குழிகள் காட்சியளிக்கின்றன. இவையெல்லாமே நம் கனிம வளத்தை காணாமல் செய்வதோடு, கானுயிர்களின் நகர்வுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. செங்கல் சூளைகளுக்காக பட்டா நிலத்தில் மட்டுமல்லாது, புறம்போக்கு குட்டைகளில், நீர்நிலைகளில் மண் எடுக்கும் வேலைகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துள்ளன. அவையெல்லாமே இன்றைக்கு வலசை பாதை மறிக்கப்பட்டதால், பனை சோறு போன்ற போதைக்கு ஆட்பட்டதால் திசைமாறி வரும் காட்டு யானைகளுக்கு பெருந்தீங்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான சூளைகள் என்றால் பரவாயில்லை.

இங்கே பெரிய தடாகம், சின்னத்தடாகம் கிராமங்களில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் இருக்கின்றன. இவையெல்லாம் தன் சூளைகள் இருக்கும் பகுதியில் மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளிடம் பேரம் பேசி ஏக்கருக்கு ஒரு அடிக்கு மண்ணின் விலை இவ்வளவு என்று தொகை கொடுத்து மண்ணை மட்டும் விலைக்கு வாங்குகின்றன.

மாங்கரையிலிருந்து அட்டப்பாடியின் தாவளம், முக்காலி வரை சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் தொலைவுக்கு கிழக்கிருந்து மேற்கிலும், குருடி மலை தொடங்கி மருதமலை வரை 30 கிலோமீட்டர் தூரம் வரை பல்கிப் பெருகியுள்ள மேற்குமலைத் தொடர்ச்சி மலைக்குன்றுகள் எல்லாம் மழைக் காலங்களில் வெள்ளத்தின் மூலம் அளப்பரிய முடியாத கனிம வளத்தை மாங்கரை தொடங்கி காரமடை காடுகள் வரைதான் கொண்டு வந்து சேர்க்கிறது.

இப்படிப்பட்ட வண்டல் மண்ணில் நிறமுள்ள செம்மண் முழுக்க இந்த பெரிய தடாகம், சின்னத் தடாகம் சுற்றியுள்ள பகுதிகளில்தான் கிடைக்கிறது. அதை முன்வைத்தே இங்குள்ள விவசாயம் படிப்படியாக நின்று போய் தற்போது செங்கல் தொழில் செழிப்பாக வளர்ந்துள்ளது. அது பூமித்தாயின் மார்பில் பாலுறிஞ்சி குடிக்கும் அளவுக்கு இயல்பாக வளர்ந்தால் பரவாயில்லை. பூமித் தாயின் மார்பையே அறுத்து ரத்தத்தை குடித்திருப்பது போல் வளர்ந்திருப்பதுதான் படு பயங்கரமானது. அதுதான் இன்றைக்கு யானைகளின் வாழ்நிலை சூழலை காடுகளிலிருந்து இங்குள்ள குடியிருப்புகளுக்குள் கொண்டு வரவும் வழி வகுத்திருக்கிறது.

எப்படி? 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதியில் செங்கல் சூளைகளே இல்லை எனலாம். ஒரே ஒரு செங்கல் சூளை மட்டும் இருந்துள்ளது. அதுவும் ஆனைகட்டி சென்றே இதன் செங்கல் தயாரிப்புக்கான மண்ணை எடுத்து வந்துள்ளனர் அந்த நிறுவனத்தினர். அந்த அளவுக்கு இங்கு சுற்றுப்பகுதியில் கிடைக்கும் மண்ணே செங்கல்லுக்கு சரியாக வரும் என்று அவர்களுக்கு தோன்றாமல் இருந்திருக்கலாம். அல்லது விவசாயத்தை செழிக்க வைக்கும் வளம் மிக்க மண்ணை செங்கல் சூளையில் வைத்து சுடுவதும், பயன்படுத்துவம்து தர்மம் அல்ல என்று அவர்கள் உணர்ந்திருக்கலாம். 1980க்குப் பிறகே இங்கே புற்றீசல்களாய் செங்கல்சூளைகள் புறப்பட்டன. அப்படி புறப்பட்ட சூளைகள் தற்போது தடாகம் கிராமத்தில் மட்டும் 150க்கும் மேல் உள்ளன.

இந்தப் பகுதியில் நான் 1997ல் செய்தி சேகரிப்புக்காக சென்றிருந்தேன். அப்போது காடு வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவரும், காடு வளர்ப்பில் 300க்கும் மேற்பட்ட கிராமத்தினரை மீட்டெடுத்து புலம் பெயரச் செய்யாமல் செய்தவரும், அந்த ஆண்டில் இந்திரா பிரியதர்சினி விருது பெற்றவருமான இ.ஆர்.ஆர். சதாசிவம் வேதனையுடன் ஒரு கருத்தை தெரிவித்தார். அதை செய்தியும் ஆக்கினேன்.

''இங்குள்ள விவசாய நிலங்களை ஒரு ஏக்கர் ஒரு அடி மண்ணை ரூபாய் ஒன்றரை கோடி விலை வைத்து விவசாயிகள் விற்கிறார்கள். அப்படி இந்த மண்ணை மூன்றடி ஆழத்திற்கு மேல் எடுக்கக் கூடாது என்று கனிம வளத்துறை விதிமுறை உள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் ஆறடி முதல் 10 அடி வரை கூட மண் எடுக்கிறார்கள். இப்படி மண் எடுப்பது சூழலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயத்தையும் பாதிக்கும். இந்த வண்டல் மண் திரும்ப இதே இடத்தில் இதே அளவு படிய பல நூற்றாண்டுகள் ஆகும்!'' என்பதுதான் அவர் குறிப்பிட்ட அந்த வேதனை கருத்து.

அப்போது இந்தப் பகுதிகளில் 60 முதல் 70 செங்கல் சூளைகளே இருந்தன. இப்போது இதே வழியில் அடிக்கடி பயணிக்கிறேன். பல முறை இதே செங்கல் சூளைகளின் விதிமீறல்களை எழுதியும் உள்ளேன். இங்கே செங்கல் சூளைகள் 300க்கும் மேற்பட்டவை பெருகியிருப்பதாக சொல்வது கணக்கில் வருவது. கணக்கில் வராமல் மேலும் 100 க்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.

அது மட்டுமா? இங்கே செங்கல்லுக்காக மண் எடுக்கும் குழிகளில் 20 ஆண்டுகளில் 6 அடியிலிருந்து 30 முதல் 40 அடிகள் வரை கூட சென்றிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி. ''அந்த அளவுக்கு மண் வந்து கொண்டே இருக்கிறது. இது பாறையே காணாது பூமியாக இருக்கிறது. எங்கள் பட்டா நிலம். நாங்கள் மண் எடுக்கிறோம். இதை தடுப்பவர் யார்?'' என்று இந்த நிலத்தில் இவ்வளவு ஆழமாக பள்ளம் வெட்டியவர்கள் கேள்வி கேட்கவும் செய்கிறார்கள். எப்படி வந்தது இவர்களுக்கு இந்த தெனாவெட்டு? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் கனிம வளத்துறை அதிகாரிகள்? இது சம்பந்தமான செய்தி சேகரிப்பில் அவர்களிடம் சமீபத்தில் கிடைத்த ஓர் அனுபவத்தை சொல்லுகிறேன். சூழல் மீது அக்கறையுள்ளவர்கள், ஆச்சர்யம் அல்ல, அதிர்ச்சியடைந்தே போவார்கள்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x