Published : 20 Sep 2017 03:33 PM
Last Updated : 20 Sep 2017 03:33 PM

யானைகளின் வருகை 40: ஒரு காலத்துல பெரியவங்க எங்க நண்பர்கள்

அது நாடாளுமன்றத் தேர்தல் காலம். அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் தூமனூர், சேம்புக்கரை கிராம மக்கள் 6 கிலோமீட்டர் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் வந்து ஆனைகட்டி, ஆலமரமேடு வாக்கு சாவடியில் வாக்களிக்கும் நிலை. இந்த விநோத விஷயத்தை செய்தி சேகரிக்க சென்றிருந்த வேளையில்தான் அங்குள்ள ஒரு அத்துவானக்காட்டில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வந்து மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்து செய்தியாக்கும் வேகத்துடன் கொஞ்ச தூரம் நானும் சென்று பார்த்தேன். ஆனால் அது அடர்ந்த காட்டுக்குள் கிடப்பதாக, வனத்துறையினர் அனுமதியின்றி செல்லமுடியாது என்பதால் திரும்பி வந்து தேர்தல் பணியை பார்க்கச் சென்றுவிட்டேன். அதற்கு பிறகு இதே ஆனைகட்டி பகுதிக்கு செல்லும்போது பேரதிர்ச்சி காட்சிகளை காண முடிந்தது. ஆலமரமேடு தொடங்கி ஆனைகட்டி வரையிலும் (சுமார் 3 கிலோமீட்டர் தூரம்) உள்ள சாலையின் இரு மருங்கும் வழக்கத்திற்கு விரோதமாக 20, 30 வருடங்கள் வயதான தென்னை மரங்கள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு கிடந்தன. கட்டிடங்கள், கூரைகள் இடிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டும் கிடந்தன. பார்த்தவுடனேயே இதுவெல்லாம் காட்டு யானைகளின் கைங்கர்யம் என்று தெரிந்தது. 18 ஆண்டுகளுக்கு மேலாக அடிக்கடி செய்தி சேகரிப்புக்காக நான் சென்று வரும் ஊர்கள்தான் இவை எனினும், ஒரு காலத்திலும் சாலையோரத்திலேயே இத்தகைய யானைகள் அழிச்சாட்டியத்தை நான் கண்டதில்லை.

அப்பகுதி மக்களிடம் பேசியதிலும் அதை உறுதிப் படுத்தினார்கள்.

''இங்கு ஆலமரமேடு, சின்ன ஜம்புகண்டி, பெரிய ஜம்பு கண்டி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு யானைகள் இரவு நேரங்களில் யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி அதன் காய்களையும், தண்டுகளையும் உண்ணும். பலா என்றால் அதில் பழத்தை மட்டும் பிடுங்கி அதனை பிளந்தும் கூட சாப்பிடும், ராகி, சோளம், கம்பு, சாமை போன்ற பயிர் வகைகளை மட்டுமல்லாது தக்காளி, பூசணி போன்ற பயிர்களுக்குள் புகுந்து கடுமையாக சேதப்படுத்தும். தென்னை மரங்களைப் பொறுத்தவரை ஏழெட்டு வயதுள்ள சிறிய மரங்களை மட்டும் பிடுங்கி எடுத்து எப்போதாவது சேதப்படுத்தும்.

அதன் நடுவில் இருக்கும் பூவையும், சோற்றையும் சாப்பிடும். ஆனால் இப்ப சில வாரங்களாக மாலை 6 மணிக்கே ஊருக்குள் புகும் காட்டு யானைகள் முட்டித்தள்ளுவது எல்லாம் பெரிய பெரிய தென்னை மரங்களைத்தான். அதனை அடியோடு பெயர்த்தெடுத்து உச்சியில் உள்ள தென்னங்குருத்தை மட்டும் உண்டுவிட்டுச் செல்கிறது. இப்படி மட்டும் ஒரு வாரத்தில் ஆலமரத்துமேடு, சின்ன ஜம்புகண்டி, பெரிய ஜம்புகண்டி, ஆனைகட்டி, தூவைப்பதி கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது!'' என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதைப் பற்றி விசாரித்தவேளையில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜம்புகண்டியை சேர்ந்த அப்துல் ரஹிமான், அலீமா தேவி, அர்ஜூனன் ஆகியோர் இப்படிச் சொன்னார்கள். ''இரண்டு ஆண்டுகளாகத்தான் யானைகள் இப்படி மெயின் ரோட்டுக்கே வந்துடுது. இந்த ரெண்டு மூணு மாதமா ஓவர் லூட்டி. எங்கள் தோப்பில் ரெண்டு நாள்ல மட்டும் 7 தென்னைகள். பக்கத்தில் உள்ள ஆடிட்டர் நிலத்தில் 8 தென்னைகள். அடுத்ததா உள்ள வெட்கிரைண்டர் கம்பெனிக்காரங்க காம்பவுண்டில் 7 தென்னைகள்னு புடுங்கியிருக்கு. இரண்டு நாட்களில் மட்டும் சேதம் செய்துள்ளது. இந்த நாலு தோட்டத்திற்குள் மட்டும் இத்தனை மரங்கள்னா சுத்து வட்டாரத்து கிராமங்கள்ல எத்தனை தென்னை மரங்க சூறையாடப்பட்டருக்கும்னு யோசிச்சு பாருங்க. இந்த தென்னைகள் எல்லாமே 25 வயது 30 வயதுடையது. இங்கே மட்டும் தொடர்ந்து 24 யானைகள் வருகிறது. அதுகளுக்கு காட்டுக்குள் தீவனம் இருக்கோ இல்லையோ, மனுசங்க வைக்கிற பயிர் பச்சைகளை ருசிச்சு பழகிடுச்சு. அதுதான் இங்கேயே வருது!''

யானைகள் அழிச்சாட்டியம் அதிகரிக்க பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் முக்கியமானதாக செங்கல் சூளைக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டி அகற்றப்பட்டதே என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள் இப்பகுதியில் உள்ள கானுயிர் ஆர்வலர்கள்.

''அந்த தண்ணீர் தொட்டி நீண்ட காலமாக இருந்தது. மாலை 6 மணிக்கு இருவேறு யானைக் கூட்டங்கள் குட்டிகளுடன் வந்து நீர் அருந்தி பழக்கப்பட்டும் உள்ளது. அதைத்தான் இரண்டாண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் உடைத்துவிட்டார்கள். அதற்கு பதிலாக வனத்திற்குள்ளாக வேறொரு தண்ணீர் தொட்டி கட்டினாங்க. அதேபோல் இங்குள்ள பட்டா நிலங்கள், தங்கும் விடுதிகள் ஓரம் சில தண்ணீர் தொட்டிகள் இருந்தது. அவற்றிலும் யானைகள் தண்ணீர் குடித்து வந்தது. அதில் நிறைய தண்ணீர் தொட்டிகள் மூடி போட்டு மூடி விட்டனர். சிலவற்றை உடைத்து விட்டனர். அதற்குப் பின்புதான் ஊருக்குள் புகுந்து இப்படி யானைகள் செய்யும் அழிச்சாட்டியம் அதிகரித்துள்ளது. யானைகள் வழித்தடத்தை மறிப்பது போல் அது வழக்கமாக நீர் அருந்தும் இடத்தை மாற்றியதால்தான் இந்த ரோதனையே!'' என்றனர்.

இப்பகுதி வனத்துறையினரிடம் பேசியதில், ''2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை மட்டும் தடாகம், மாங்கரை,சேகான், தூமனூர், சேம்புக்கரை உள்பட 9 இடங்களில் யானைகளுக்கு புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே யானைகள் மட்டுமல்ல; மற்ற வனவிலங்குகளும் நீர் அருந்தி செல்கின்றன. இன்னும் பல இடங்களில் தண்ணீர்தொட்டிகள் அமைக்கும் திட்டம் உள்ளது. அதற்கு மின்சாரத்துறை அனுமதி கிடைக்காமல் உள்ளது. மற்றபடி சில தனியார் இடத்தில் தண்ணீர் தொட்டிகள் மூடப்பட்டதற்கும், ஒரு தண்ணீர் தொட்டி உடைக்கப்பட்டதற்கும் யானைகள் அழிச்சாட்டியத்திற்கும் சம்பந்தமில்லை!'' என்று சமாளித்தனர். ஆனால் இப்பகுதியில் இப்போதும் யானைகள் வருகை, அவை விளைநிலங்களை சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

அதை தூமனூர், சேம்புக்கரை கிரமாங்களை சேர்ந்த பழங்குடியினர் சிலர் இதன் வருகையின் படிநிலையை, அதன் பின்னணியை வாழ்வியல் தன்மையோடு அழகாகவே சொல்கின்றனர் கேளுங்கள்.

''எங்க ஊரே யானைக்காடுதான். ஊரும், நாங்களும், யானையும் இணைபிரியாத நண்பர்கள்னே சொல்லலாம். எங்க பாட்டன் பூட்டன் காலத்துல ராகி, சோளம், கம்புன்னு விதைச்சா பெரியவனுக்கு பாதி, அவன் தின்னது போக மீதி நம்மளுக்குன்னு சொல்லித்தான் விதைப்பாங்க. தானியம் இரைச்சு உட்டுட்டு வந்தா பெரிசா பராமரிக்கவும் மாட்டோம். கதிர் விளைஞ்சி நிற்கிற காலத்துல பெரியவன் (யானை) வந்தா ஒரு இடத்துல அர்த்தமா சாப்பிட்டுட்டு போயிடும். நாங்க ஏண்டா இப்படி பண்றேன்னு கேட்டா எங்க வார்த்தைக்கு கட்டுப்பட்ட மாதிரி போயிடும். எப்ப சுத்துப்பத்துல உள்ள எங்கூர்களுக்கு கீழ்நாட்டுக்காரங்க எல்லாம் நிலம் வாங்க வந்தாங்களோ. வாழை, கரும்பு, தென்னைன்னு வச்சாங்களோ, அதைப் பார்த்து நாங்களும் அதையே வச்சோமோ? அப்ப இருந்தே எல்லாம் கடைநாசம்தான்.

பக்கத்து ஊர்ல கரும்பு இருந்தா கூட அதை சாப்பிட்டு பழகின பெரிசுக, அது கிடைக்காத போது எங்க ஊருக்குள்ளே நுழைஞ்சுடும். எதுவுமே கெடைக்காட்டி தென்னை மரத்தையே புடுங்கிடும். அதுதான் எங்க ஊர்ல நாங்க எல்லாம் பத்திருபது வருஷமா அவரை துவரையே பயிர் செய்ய ஆரம்பிச்சோம். ஏன்னா, அதுக்கு அவரை, துவரைன்னா புடிக்காது. அதை பாரம்பர்யமா தெரிஞ்சு வச்சே செஞ்சுட்டு வந்தோம். இப்ப ரெண்டு மூணு வருஷமா என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை பெரியவனுக்கு இந்த துவரை, அவரையும் பழகிப்போச்சு. முந்தியெல்லாம் வந்தா அதோட வாசத்தை கண்டாலே பர்லாங் தூரம் தள்ளிநிக்கும். இப்ப எல்லாம் நேரா அவரை, துவரை பயிர் வச்சிருக்கிற காட்டுக்குள்ளேதான் வருது. அந்த கொடிகளையெல்லாம் புடுங்கி எறிஞ்சிடுது. இல்லே எல்லாத்தையும் மிதிச்சு தாம்பு கட்டிடுது. அந்த அளவுக்கு அதுக்கு ஆத்திரம். பெரியவனுக்கு காட்டுக்குள்ளே என்னவோ நடந்திருக்கு. அதனாலதான் இப்படியெல்லாம் நடந்துக்கறான். அதனால நாங்க எல்லாம் இப்ப செட்டில்மெண்ட் நிலங்கள்ல அவரை விதைப்பை கூட கைவிட்டுட்டு வர்றோம்!'' என்றார்.

சேம்புக்கரையில் 40 வீடுகளில் 120 பேர் வசிக்கின்றனர். அங்கிருந்து 3 கிமீ தூமனூர். இங்கே சுமார் 80 வீடுகள். 300 பேர் வசிக்கின்றனர். இந்த ஊர்களுக்கு மின்சாரம் கிடையாது. சோலார் தெருவிளக்குகள்தான். சாலை வசதி கிடையாது. வனத்துறையின் பாதையில் ஜீப் பயணம்தான். கேரளா, கர்நாடகா என வலசை செல்கிற யானைக நிறையவே இந்த ஊர் வழியாகவே போகிறது. இந்த ஊர்களில் வாழை, தென்னை விவசாயத்தை பழங்குடிகள் தம் கையால் கூட தொடுவதில்லை.

''அதுக்கு நிறையா தண்ணீ வேணும். அப்படியே போர் போட்டு தண்ணி எடுத்து, ஆயில் இன்ஜின் வச்சு ஓட்டி, தண்ணீய பாய்ச்சி வாழை, தென்னைன்னு வச்சா மனுசன் குடியிருக்கவே முடியாது. 'பெரியவங்க' (காட்டு யானைகள்) சூறையாடி டுவாங்கள்ல'' என்று வெள்ளந்தியாக கூறினார் இங்கு வசிக்கும் ஆதிவாசி ராமன் என்பவர்.

இவர்களின் வாழ்வாதாரமே ரேஷன் அரிசியும், அவரையுமாக இருப்பதால் தினந்தோறும் இவர்கள் உணவில் ரேஷன் அரிசி சோறும், அவரைக்குழம்பு, அவரை பொறியல், அவரை சுண்டல் என்று எல்லாமே அவரை மயமாகவே உள்ளது. 40 குடும்பங்களுக்கு மேல் அவரை, துவரை பயிர் செய்கிறார்கள்.

எல்லாம் சரி. இங்குள்ள பறவைகள் ஆராய்ச்சி மையம், குருகுலம் உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம் கீழ்நாட்டு மனிதர்களை திரட்டி மேலே கொண்டு வரவில்லை. இயற்கையையும் சேதப்படுத்தவில்லை. பிறகு எப்படித்தான் இத்தனை யானைகளிடம் மனவியல் மாற்றம் இந்தளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. கீழ்நாட்டுக்காரர்கள் வந்து வாழை, தென்னை, கரும்பு என பணப் பயிர்கள் பயிரிட்டதால்தானா? அது ஒரு சிறு காரணம்தான். அதைவிட பெரிய காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் இந்த காடுகளின் அடிவாரத்திலேயே அமைந்திருக்கும் செங்கல் சூளைகள். அதற்கென எரிக்கப்படும் பனை மரங்கள். அதனுள்ளே விரியும் பனைச்சோறு. அதை உண்டு போதையில் தள்ளாடும் யானைகள்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x