Published : 16 Sep 2017 02:46 PM
Last Updated : 16 Sep 2017 02:46 PM

யானைகளின் வருகை 36: ஆனைகட்டியை அதிர வைக்கும் உபத்திரவங்கள்

உயிரியல் பூங்கா சம்பந்தமாக நான் சேகரித்த செய்தியை தொகுத்து, அலுவலகத்திற்கு அனுப்பி விட்டேன். அது அச்சில் வருவதற்குள்ளாக (அப்போது நான் பணிபுரிந்த வாரப் பத்திரிகையில்) இது விவகாரமாய் நான் சந்தித்துவிட்டு வந்த தொழிலதிபர் தரப்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்வு ஆனைகட்டியில் ஒரு நாள் காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த சந்திப்பு முடிந்ததும் அங்கிருந்து துாவைப்பதியில் உயிரியியல் பூங்கா அமைக்கப்பட இருக்கும் இடத்தை (3 கிலோமீட்டர்) சுற்றிக் காண்பிக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தகவல் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. அதற்கு காரணம் நான் இந்த விஷயத்தில் பழங்குடி மக்கள் சார்பான ஒருதரப்புக் கண்ணோட்டத்தில் இருந்ததாக அவர் கருதியிருந்தது கூட இருக்கலாம். 'நீங்கள் அவர்களிடம் பழங்குடி மக்களுக்காக கேட்ட கேள்விகள்தான் இப்படியொரு திடீர் மீடியா சந்திப்பிற்கே ஏற்பாடு செய்ய வைத்திருக்கிறது!' என்று கூட நமக்கு பேட்டியளித்த பியுசிஎல் அமைப்பினர் என்னை அழைத்து தகவல் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட நாளன்று பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. அதைத் தொடர்ந்து பூங்கா அமையும் இடத்திற்கும் பத்திரிகையாளர் உள்ளிட்ட பலரும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் தூவைப்பதி பழங்குடி மக்களுக்கு எப்படி சொல்லப்பட்டதோ. 'வருபவர்கள் எல்லாம் தங்கள் நிலங்களை கையகப்படுத்தவே வருகிறார்கள்!' என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைத்து விட்டது.

அதன் பலன் அவர்களும் ஊர் எல்லையில் திரண்டிருந்திருக்கின்றனர்.

தங்கள் ஊரை நோக்கி வந்த வாகனங்களையும் மறித்துள்ளனர். இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் வந்தவர்களை நோக்கி கல்லெறிய அங்கே ஒரே களேபரம் ஏற்பட்டுள்ளது. இதில் தெறித்து ஓடிய மீடியா ஆட்கள் மட்டுமல்ல; மற்றவர்களும்தான். அவர்கள் சார்பாக போலீஸில் பழங்குடி மக்கள் மீது புகார் கொடுக்கப்பட விவகாரம் மேலும் விபரீதமானது. தங்களைத் தாக்கிய ஆதிவாசிகள் பழங்குடிகளே அல்ல, அவர்கள் நக்ஸலைட்டுகள், தீவிரவாதிகள், தீ கம்யூனிஸ்ட்டுகள் என்றும் அவர்களால் வர்ணிக்கப்பட்டனர். (அப்போது அட்டப்பாடியில் மாவோயிஸ்ட் வாசம் இல்லை. இல்லாவிட்டால் அப்படியொரு சாயம் கூட இவர்கள் மீது பூசப்பட்டிருக்கலாம் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்)

அதில் தூவைப்பதி கிராமமே பெரும்பகுதி போலீஸிற்கு பயந்து தலைமறைவானது. வயதான ஆண்கள், பெண்கள் மக்கள் மட்டுமே ஊரில் இருந்தனர். என் காதுபட பல நிருபர்கள், 'அங்கே இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பயங்கர ஆயுதங்கள் வைத்துள்ளார்கள். அவங்க தாக்குதலில் தப்பித்து வந்தவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள்!' என்றும் பேசினர். அதற்கே முக்கியத்துவம் கொடுத்து செய்தியும் எழுதினர். அதில் முற்றிலும் மாறுபட்ட செய்தியாக, பழங்குடியினர் குரலாகவே எனது செய்தி வெளியானது. அதில் இறுதியாக இப்படி குறிப்பிட்டேன்:

'....நாம் இச்செய்தி சேகரித்ததன் தொடர்ச்சியாக உயிரியல் பூங்காவினர் ஆனைகட்டியில் ஒரு 'மக்கள் கூட்டம்' ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் பத்திரிகையாளர்களையும் அழைத்திருக்கிறார்கள். அவர்களை தூவைப்பதி ஆதிவாசிகள் தம் ஊர் எல்லையிலேயே மறித்தும் விட்டனர். கல்லெறிந்து, கம்புகளை எடுத்து ஒரே அடிதடி கலாட்டா. ரகளை. ஆறு பேருக்கு இதில் பலத்த காயம். நம்மிடம் பேசிய ஆதிவாசி கவுன்சிலர் நஞ்சம்மாள் முருகவேலு, ''அவுங்க தரப்புல காசு கொடுத்து கூட்டி வந்த ஆட்கள் மட்டும் 50 பேர். அது பத்திரிகை நிருபர்களுக்கே தெரியாது. அந்நியர்கள் எங்க ஊருக்குள்ளே பிரச்சினைக்காக வர்றதை எப்படி நாங்க அனுமதிக்க முடியும்? அதுதான் தடுத்தோம். முதல்ல அடிச்சவங்க அவங்க. அதுல அடிபட்டவங்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக கூட விடலை போலீஸ். அந்த அளவுக்கு பணம் அங்கே விளையாடியிருக்கு! ...''

இந்த சம்பவம் நடந்தது 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில். என்னால் எழுதப்பட்ட செய்தி நடுநிலையோடு, பழங்குடியினர் தரப்பு நியாயத்தையும் தாங்கி வந்த பின்புதான் தூவைப்பதி கிராமம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அந்த காலகட்டத்தில் எனது இந்த செய்தி சேகரிப்புக்கும், நடுநிலைத்தன்மைக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர் மலையாள நாளிதழ் மாத்ரூபூமி கோவை அலுவலக பொறுப்பாளராக இருந்தவரும், கவிஞருமான குன்னிசேரி விஜயகுமார் ஆவார்.

''சாமி எங்களையெல்லாம் தீவிரவாதிகள்னு போலீஸ்ல பெரிய கேஸ்ல போட இருந்தாங்க. நீங்க பொறுப்பா எழுதினதாலதான் அடிதடி தகராறா அதை சாதாரண வழக்கா பதிவு செஞ்சாங்க. இல்லைன்னா எங்க குடும்பமே ஜெயில்ல இருந்து வெளிய வரமுடியாம செஞ்சிருப்பாங்க. நாங்க அப்படி வெளியில் வர்றதுக்குள்ளே எங்க நிலங்களும் எங்க கைய விட்டு போயிருக்கும்!'' என தூவைப்பதி பழங்குடியினர் குன்னிச்சேரி விஜயகுமார் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் கண்ணீர் மல்க சொன்னது இப்பவும் மனதை கனக்க செய்கிறது.

16 ஆண்டுகள் கழித்து இதே ஆனைகட்டி வழியே பயணம் போகிற போது காண்கிறேன். வழியெங்கும் பல நூறு ஏக்கர் நிலங்களை கோவை தொழிலதிபர்கள் தங்கள் நிறுவன முத்திரை தாங்கி பெயர்ப்பலகைகள் மாட்டி, மின்வேலி போட்டு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதனூடே 50 ஏக்கர், 60 ஏக்கரில் ரிசார்ட்டுகளும் உருவாகியிருப்பதை கவனிக்கிறேன். இருபது, இருபது சென்ட் தொடங்கி, அரை ஏக்கர், ஒரு ஏக்கரில் ஆங்காங்கே ஓட்டல்களும், தனியார் ஓட்டல்களும், பண்ணை இல்லங்களும் கடை விரிப்பதும் நடந்திருக்கிறது. அதே நேரத்தில் தூவைப்பதியில் தாங்கள் விலைக்கு வாங்கிய நிலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த குறிப்பிட்ட உயிரியல் நிறுவனம், சர்ச்சைக்குரிய ஆதிவாசிகளின் செட்டில்மென்ட் நிலங்களில் கை வைக்கவில்லை. கை வைக்க விடாத வண்ணம் அது சம்பந்தமாய் பல்வேறு வழக்குகள் நடந்து கொண்டிருப்பதாக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த தூவைப்பதி பழங்குடியினர் சொன்னார்கள்.

இந்த தூவைப்பதி கிராமத்தை மையமாக வைத்து பார்த்தோமானால் தூமனூர், சேம்புக்கரை, மாங்கரை, அனுவாவி சுப்பிரமணியர் கோயில், பெரிய தடாகம், சின்னத்தடாகம், சோமையனூர், கணுவாய், மருதமலை,பில்லூர், சிறுவாணி எஸ்டேட், சோலையூர், மானாரு, அரக்கடவு, அத்திக்கடவு, புதுக்காடு, சொரண்டி, கூடப்பட்டி, கோபனாரி, குறவங்கண்டி, எழுத்துக்கல் புதூர் என வரும் கிராமங்களில் எல்லாம் யானைகள் உட்புகுவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும், மளிகைக்கடை, ரேஷன் கடை பாகுபாடில்லாமல் உள்ளே புகுந்து அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை பண்டங்களை பதம் பார்ப்பதும், மக்கள் அலறுவதும் தொடர்ந்து நடக்கிறது. அதேபோல் தண்ணீர் தேடி வந்த யானைகள் சகதியில் சிக்கி தத்தளிப்பதும், வயிற்று உபாதையால் அலைந்து திரிந்து அவை இறப்பதும் கூட அதிகமாக இந்தப் பகுதிகளில்தான் நிகழ்கிறது.

அந்த அளவுக்கு இங்கே சூழல் சேதம் எப்படியெல்லாம் ஏற்பட்டிருக்கிறது என்று பார்த்தால் சில சூழலியாளர்கள் சிலர் இதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள ஆர்ஷ வித்ய குருகுலம், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிறுவனம், காரல் க்யூபல் இன்ஸ்டிட்யூஷன் போன்ற சில நிறுவனங்களை மையமாக வைத்து சர்ச்சை கிளப்புவது வாடிக்கையாக உள்ளது. உண்மையில் இந்த நிறுவனங்களின் கட்டுமானங்கள்தான் இதற்கு காரணமா? நிச்சயமாக இல்லை என்று சொன்னால் சிலர் கோபப்படுவார்கள். எனவே அதை அனுபவப்பூர்வமாகவே ஒவ்வொன்றாக சொல்கிறேன்.

கோவையிலிருந்து ஆனைகட்டி செல்லும் வழியில் ஆனைகட்டி மலைகளின் அடிவாரமாக எதிர்ப்படுவது மாங்கரை. அதன் முகப்பிலேயே செயல்படுவதுதான் கார்ல் க்யூபல் இன்ஸ்டிட்யூஷன். மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்து விழிப்புணர்வு, மக்கள் மேம்பாடு குறித்த பல்வேறு திட்டங்களை மக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் 20 ஆண்டுகளாக இங்கே செயல்பட்டு வருகிறது.

சுமார் ஆறேழு ஏக்கர் பரப்பளவில் சில கட்டிடங்களை மட்டும் வைத்து இயங்கும் இந்த நிறுவனத்தில் அவ்வப்போது நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு 50 முதல் 100 பேர் வரை தமிழகமெங்கும் இருந்து வந்து செல்கிறார்கள். அதில் பயிற்சி கலெக்டர்கள், அரசு அலுவலர்களும் அடக்கம். இதுவரை இங்கு வந்து செல்பவர்களால், இந்த நிறுவனத்தின் புதிய கட்டிடங்களால் கானுயிர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது என்றோ மக்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டது என்று எதுவுமே இருந்ததில்லை.

அதற்கு அடுத்ததாக நாம் எதிர்கொள்வது சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம். மாங்கரையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் சேம்புக்கரை கிராமத்திற்கு பிரியும் வனத்துறை பாதைக்கு அருகில் இது அமைந்துள்ளது. இந்த வழியே செய்தி சேகரிக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்தில் சென்றபோது இதன் பெயர்ப் பலகையையும் கவனித்தேன். திரும்பி வரும்போது இங்கே என்னதான் நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக இறங்கியும் விட்டேன்.

சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் காட்டுக்குள் உள்ளடங்கியிருந்த முக்கோண வடிவிலான அழகிய கற்கட்டிடங்கள். அதில் நிலவும் பேரமைதி மிகவும் ஈர்த்தது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்கள். காற்றுக்கு கூட சத்தம் உண்டு என்பதைப் போல் அங்கே இயங்கிக் கொண்டிருந்தது அதை விட ஆச்சர்யம். அதுதான் என்னை 'பறவைக் காதலர்கள்' என்ற தலைப்பில் அந்த கட்டுரையை எழுத தூண்டியது.

'தமிழ்ப் பத்திரிகையில் முதலாவதாக வந்த சலீம் அலி ஆராய்ச்சி மையம் குறித்த முதல் கட்டுரை இது!' என்று அப்போது அந்த மையப் பொறுப்பாளர் ஒருவர் உளம் கனிந்த சொன்னது எனக்கு நினைவிற்கு வருகிறது. அப்படியென்ன அங்கே நடக்கிறது?

மீண்டும் பேசலாம்..

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x