Published : 08 Sep 2017 08:52 AM
Last Updated : 08 Sep 2017 08:52 AM

மனநோயாளிகளை தேடி: ராமேஸ்வரத்துக்கும் வருகிறது மனோலயா இல்லம்!

டந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ‘தி இந்து’ சிறப்புப் பக்கத்தில் ‘புனிதத் தலமா? மனநோயாளிகள் மடமா? - அவதியில் ராமேஸ்வரம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப்படித்துவிட்டு, மணிகண்டன் என்பவர், ‘தி இந்து’ சிறப்புப் பக்க செய்திகளுக்கான அலைபேசி எண்ணில் (044 42890013) நம்மைத் தொடர்பு கொண்டார்.

“நாங்கள் குமரி மாவட்டத்தில் மனநோயாளிகளின் மறுவாழ்வுக்காக மனோலயா என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். அதன்மூலம், மனநலம் பாதித்தவர்களுக்கு கட்டணமில்லா சேவை செய்து வருகிறோம். ராமேஸ்வரத்தில் நடமாடும் மனநோயாளிகள் குறித்த தங்களது செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. எனவே, மனோலயாவின் சேவையை ராமேஸ்வரத்திலும் தொடங்க முடிவெடுத்திருக்கிறோம்” என்று சொல்லி இருந்தார் மணிகண்டன்.

ராமேஸ்வரத்தைப் போலவே..

ராமேஸ்வரத்தைப் போலவே, கன்னியாகுமரியிலும் சுற்றுலா வருபவர்கள், மனநோயாளிகளையும் கூட்டி வந்து விட்டுச்செல்வது காலம் காலமாகத் தொடர்கிறது. இப்படி விட்டுச் செல்லப்படும் மனநோயாளிகள் சாலையோரங்களிலும், பயணிகள் நிழற்குடைகளிலும் சங்கமித்துவிடுகின்றனர். இப்படி விடப்படுபவர்களை தேடிப்பிடித்து உணவளித்து, தங்கவைத்து, சிகிச்சையளிக்கும் அறச் சேவையை இலவசமாகவே செய்து வருகிறது மனோலயா அமைப்பு.

குமரி மாவட்டம் அச்சன்குளத்தில் மருந்துவாழ்மலை அடிவாரத்தில் செயல்படுகிறது மனோலயா இல்லம். “துவக்கத்தில், சாலையோரங்களில் சுற்றித் திரிந்த மனநோயாளிகளுக்கு, ‘அன்னபூர்ணா யாத்ரா’ என்ற பெயரில் உணவு வழங்கினோம். தொடர்ந்து, இவர்களை சீர்படுத்த இந்த இல்லத்தை துவங்கியதோடு, இப்போதும் அன்னபூர்ணா யாத்ராவையும் தொடர் கிறோம்” என்கிறார் மனோலயா அமைப்பின் நிறுவனர் மணிகண்டன்.

33 பேரை குணப்படுத்தினோம்

இது குறித்து மேலும் அவர் பேசினார். ’’மனோலயா மறுவாழ்வு மையத்தைத் தொடங்கி 4 ஆண்டுகளாகிறது. இதுவரை இங்கே, ஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநோயாளிகள் 33 பேரைக் கொண்டு வந்து தங்கவைத்து அவர்களுக்கு உணவும் சிகிச்சையும் அளித்து, தேவையான கவுன்சலிங் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இன்னும் 44 பேர் தற்போது இங்கே பராமரிப்பில் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே பெற்றோரால் கொண்டுவந்து விடப்பட்டவர்கள். மற்ற அனைவரும் ஆதரவின்றி விடப்பட்டவர்களே.

எங்கள் கண்ணில்படும் மனநோயாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை இங்கே அழைத்துவந்து விடுவோம். இப்போது, இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகள் இருக்கிறார்கள். இங்கு வரும் மனநோயாளிகளில் பலர் ஒவ்வொரு முறையும் தங்களது பெயரை மாற்றி மாற்றிச் சொல்வார்கள். அவர்கள் முதன்முதலில் என்ன பெயரைச் சொல்கிறார்களோ அந்தப் பெயரை நாங்கள் பதிவுசெய்து கொள்வோம்.

மனநோயாளிகள் என்ற மனிதம்

சாதி, மதம், இனம், மொழி என எந்த பாகுபாடும் இல்லாத மனிதம் உண்டு என்றால் அது மனநோயாளிகள் தான். இவர்களுக்கு இங்கு சைவ உணவு தான் கொடுப்போம். அசைவ உணவு சாப்பிடும்போது இவர்களிடம் மூர்க்கத்தனம் தெரிகிறது. அதனால், அசைவத்தைத் தவிர்த்துவிட்டோம். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முகமது யாகூப் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிக்குளத்திலிருந்து அழைத்து வந்தோம். மனநோயாளியாக இருந்தபோதும் நோன்பு இருத்தல் உள்ளிட்ட விரதங்களை அவர் கடைபிடித்தது ஆச்சரியமாய் இருந்தது. அவரது மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து ரம்ஜான், பக்ரித் பண்டிகைகளுக்கு அவருக்கு மட்டும் அசைவ உணவு கிடைக்கச் செய்தோம்.

இங்கிருக்கும் மனநோயாளிகளின் மனதை ஒருநிலைப்படுத்த தினசரி யோகா பயிற்சிகள் கொடுக்கிறோம். தினமும் பஜனை, கவுன்சலிங், நடைப்பயிற்சியும் உண்டு.

அரசிடம் முறையான அனுமதிபெற்று இந்தக் காப்பகத்தை நடத்துகிறோம்.மற்றபடி, பொருளாதாரச் சிக்கல்ஏதுமில்லாமல் இறைவனே இந்த இல்லத்தை நடத்திக் கொண்டிருப்பதாகத்தான் சொல்வேன். திருமண நாள், பிறந்த நாள் கொண்டாடுபவர்களும்நீத்தாருக்காக நினைவு நாள் அனுஷ்டிப்பவர்களும் சில நேரங்களில் இவர்களின் சில வேளைகளுக்கான சாப்பாட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று சொன்னவர் ராமேஸ்வரம் விஷயத்துக்கு வந்தார்.

விஜயதசமிக்கு ராமேஸ்வரத்தில் மனோலயா

“நான் ‘தி இந்து தமிழ்’ வாசகன். ராமேஸ்வரத்தில் மனநோயாளிகள் படும் அவதி குறித்து படித்தபோது அதிர்ந்து போனேன். உடனே, ராமேஸ்வரத்திலும் மனநோயாளிகளை மீட்டு இதேபோல் காப்பகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டோம். வரும் 30-ம் தேதி விஜயதசமி அன்று ராமேஸ்வரத்தில் எங்கள் சேவை தொடங்கும். இந்த உந்துதலுக்கு முழு முதற்காரணம் ‘தி இந்து’ தான்.” நெகிழ்வாய் சொன்னார் மணிகண்டன்.

படங்கள் உதவி: ராஜேஷ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x