Published : 05 Sep 2017 10:02 AM
Last Updated : 05 Sep 2017 10:02 AM

மாங்கரை சுண்டலும்.. மணக்கும் சுக்குக் காபியும்

கேரளத்தின் அட்டப்பாடி கிராமங்கள் என்றாலே, ‘ஆஹா, அது மாவோயிஸ்ட்கள் ஏரியாவாச்சே!’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், அதையும் தாண்டி அட்டப்பாடிக்கு செல்வோரில் பெரும்பகுதியினர் மாங்கரை சுண்டலையும், மணக்கும் சுக்குக் காபியையும் சுவைக்காமல் செல்வதில்லை!

அட்டப்பாடி என்பது கேரளத்தின் பாலக்காடு ஜில்லாவுக்குள் வருவது. இது, 198 பழங்குடி கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும். அட்டப்பாடிக்கு பத்து கிலோ மீட்டர் முன்னதாக ஆனைகட்டி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது மாங்கரை. அட்டப்பாடியை கேரளத்தின் தண்டர் போல்ட் போலீஸ் கண்காணிப்பது போல் மாங்கரையில் தமிழகத்தின் அதிரடி போலீஸார் மாவோயிஸ்ட்களை கண்காணிக்கிறார்கள். தமிழகத்திலிருந்து செல்லும்போது மாங்கரையில் வனத்துறை, காவல்துறை சோதனைச் சாவடிகளுக்கு முன்னதாகவே மூன்று, நான்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரைக் கடைகளைப் பார்க்கலாம். இங்குதான், காலை தொடங்கி இரவு வரை களைகட்டுகிறது சுண்டலும் சுக்குக் காபி வியாபாரமும்!

90 ஆண்டுகளாய்..

இன்று நேற்றல்ல.. இது 90 ஆண்டுகளாய் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் என்கிறார்கள். இந்த இடத்தி லிருந்து மலைப்பகுதி ஆரம்பமாவதால், மலை ஏறும் வண்டிகள் இங்கே சற்று நேரம் இளைப்பாறிவிட்டுத் தான் செல்கின்றன. அதன்பால், ஒரு காலத்தில் இங்கே பெட்டிக்கடை வியாபாரமாக தொடங்கிய சுண்டல், சுக்கு காபி வியாபாரம் இன்று மூன்று நான்கு கடைகளாக விரிந்திருக்கிறது. இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மாத்திரமல்ல.. அருகில் முகாமிட்டுள்ள அதிரடிப்படை போலீஸாரும் இந்தச் சுக்குக் காபி, சுண்டல் சுவைக்கு அடிமை!

இந்தப் பகுதியில் சுக்குக் காபி, சுண்டல் வியாபாரமும் வளர்ந்த கதையை விவரித்தார் இங்கு கடை வைத்திருக்கும் மூர்த்தி. ”90 வருசத்துக்கு முந்தி, எங்க தாத்தாவுக்கு தாத்தா இந்த வியபாரத்தை ஆரம்பிச்சதா எங்க அப்பா சொல்லிக் கேட்டுருக்கேன். அப்பவெல்லாம் இப்ப இருக்கிற மாதிரி ரோடு வசதி இல்லை; வண்டிப் பாதைதான். ஜன போக்குவரத்தும் அவ்வளவா இருக்காது. ஓரணா, ரெண்டணாவுக்கு சுண்டல், சுக்குக்காபி வித்த காலம் அது. இப்ப, நாங்க நாலாவது தலைமுறையா இந்தக் கடைகளை நடத்துறோம்

எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்.

எங்க அப்பா காலத்துல, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். எல்லாம் சினிமா ஷூட்டிங் வந்தப்ப இங்கே சுக்கு காபி, சுண்டல் வாங்கிச் சாப்பிட்டிருக்காங்க. இப்பெல்லாம் அதிரடிப்படை போலீஸ்காரங்கதான் தினமும் வர்றாங்க. அப்பப்ப வருவாங்க. சுண்டல் வாங்கிச் சாப்பிடுவாங்க. பக்கத்து கடையில டிபன் சாப்பிட்டுட்டுப் போவாங்க.” என்று சொன்னார் மூர்த்தி.

சுண்டலுக்கும் சுக்குக் காபிக்குமாய் சேர்த்து நாற்பது ரூபாய் கேட்கிறார்கள். ”என்ன சார்.. இந்த விலை?” என்று கேட்டதற்கு, “அந்தக் காலம் மாதிரி இப்ப பெருசா வியாபாரம் இல்லீங்க. விலைவாசியும் ஏறிப்போச்சுங்களா. அதுக்கேத்தபடி விலை வெச்சாத்தானே கட்டுபடியாகும். அதுமட்டுமல்லீங்க.. எங்க கடைக்கு வர்றவங்க யாரும் விலைய பத்தி கேட்கிறதேயில்லை. காட்டு யானைக திரியுற இந்த வனாந்திரத்துல கடைகளே இல்லாத ஏரியாவுல இங்கே இது இவ்வளவு தரமா கிடைக்குதேன்னு அத்தனை பேரும் சந்தோஷமாத்தான் பேசீட்டுப் போறாங்க. நாங்களும், எங்களுக்குக் கட்டுபடியானாலும் ஆகாட்டாலும் சுவை மாறாம சுண்டலும் சுக்குக் காபியும் குடுத்துட்டு வர்றோம். இன்னிக்கு, நேத்தா.. நாலு தலைமுறையா தொடர்ந்து வர்ற தொழில எப்படி விடமுடியும் சொல்லுங்க?” என்று கேட்டுவிட்டு, சுண்டலைக் கிளற ஆரம்பித்தார் மூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x