Published : 04 Sep 2017 14:20 pm

Updated : 04 Sep 2017 14:35 pm

 

Published : 04 Sep 2017 02:20 PM
Last Updated : 04 Sep 2017 02:35 PM

யானைகளின் வருகை 26: ஹாகாவும், வரைமுறையில்லா சூழல் சேதமும்

26

இந்த காட்டு பங்களா வருவதற்கு முன்பு யானைகள் ஊருக்குள் வந்ததாகவோ, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்ததோ இல்லை. இந்தக் கட்டிடம் வந்து 10 ஆண்டுகளுக்குள்தான் யானைகள் வருகின்றன. தினம், தினம் அவற்றின் தொல்லையால் நாங்கள் அவதியுற்று வருகிறோம் அதற்கு பிறகும் பல கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் பத்து ஏக்கர், இருபது ஏக்கர் பரப்பளவில் அமைந்தன. அது கூட பிரச்சனையில்லை இப்போது மீண்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் இப்படியொரு சொகுசு மாளிகை உருவாகிறதென்றால் நாங்கள் எங்கேதான் போக முடியும் என்பது நாதே கவுண்டன்புதூர் சுற்றுப்புற குக்கிராமங்களின் பரிதாப கேள்வியாக இருந்தது. இந்த விஷயமும் செய்தியானது. .

அதில் பொங்கி விட்டார் சம்பந்தப்பட்ட காட்டு பங்களா சொந்தக்காரர். செய்திக்கு நீண்டதொரு விளக்கம் எனக்கு வந்தது.


''நாங்கள் இருக்கும் இடத்தை நாங்கள் வாங்கி கட்டிடம் கட்டும் வரையில் அங்கே ஏராளமான சமூக விரோத செயல்கள் நடந்து வந்தன. காட்டுக்கோழி, முயல், மான் உள்ளிட்ட விலங்குகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதும், மரங்கள் வெட்டிக் கடத்துவதும் அதில் மிகுதி. ஆடு, மாடுகள் மேய்ப்போர் இவர்களுக்கு உதவியாகவும் செயல்பட்டனர். நாங்கள் கட்டிடம் கட்டியதால் இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கெல்லாம் இடைஞ்சல். அதற்காக வேண்டுமென்றே கதை கட்டி உயரதிகாரிகளுக்கெல்லாம் மனு அனுப்பினார்கள். அவர்களும் வந்து விசாரித்தார்கள்.

நேரடியாக நாங்கள் செய்திருக்கும் காரியத்தையும் பார்த்தார்கள். எங்கள் கட்டிடத்தை சுற்றி மட்டுமல்ல; உள்ளுக்குள்ளும் கூட தொட்டிகள் அமைத்து தண்ணீர் விடுகிறோம். அவற்றை வனவிலங்குகள் யானை, கரடி, மான்கள், காட்டெருமைகள், யானைகள் என எதுவுமே பாரபட்சம் இல்லாமல் அருந்திச் செல்கின்றன. அதைப் பார்த்து வன உயர் அதிகாரிகளே அசந்து போனார்கள். இப்படிப்பட்ட காரியம் நாங்கள் காட்டுக்குள் கூட வனவிலங்குகளுக்கென செய்யவில்லை என்று சொல்லி சந்தோஷப்பட்டே சென்றார்கள். அப்படியிருந்தும் இந்த ஊரில் உள்ள சிலருக்கு எங்களுக்கு எதிராக வதந்தி கிளப்புவதும், தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குவதுமே வழக்கமாக உள்ளது. நீங்கள் வெளியிட்டிருக்கும் செய்தி தவறானது!'' என்றெல்லாம் அதில் விளக்கம் தெரிவித்திருந்தார்கள்.

அவர்கள் தரப்பு விளக்கம் வெளியிடவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு பேசுபவர்கள், நகரப்புறத்தில் பெரிய வசதியுடன் வசிப்பவர்கள் அந்த காட்டுக்குள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்கள். அதற்கு எதற்கு வேலி போடாமல் ஒரு பக்கம் சுற்றுச்சுவர் போட்டிருக்கிறார்கள். அதனால் வலசை மாறும் யானைகளுக்கு என்ன பரிகாரம் செய்துள்ளார்கள் என்பதற்கெல்லாம் அதில் பதில் விளக்கம் ஏதுமில்லை. 'அந்தக் கடிதம் அனுப்பியவரிடம் தொலைபேசியில் பேசியபோதும் அதற்கு உரிய விளக்கம் தரவில்லை. அதை தாருங்கள். அது சரியாக பட்டால் வனத்துறையிடம் விளக்கமும் பெற்று வெளியிடுகிறோம்!' என்று தெரிவித்த பிறகு சம்பந்தப்பட்டவர் நம் தொடர்புக்கு வரவேயில்லை.

காட்டு பங்களா போல் இந்த அடர் காட்டுப்பகுதியில் இப்போதும் புதிய, புதிய பண்ணை வீடுகள், சொகுசு பங்களாக்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதை படிப்பவர்கள், 'இது என்ன வேடிக்கை. அவர்கள் எல்லாம் முறையாகத்தானே நிலங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். கட்டிடங்களை எழுப்பியிருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கு?' என்று சாமான்யர்கள் விவரம் புரியாதவர்கள் கேட்கலாம். இந்த மாதிரி கட்டுமானப்பணிகள் எழுகிறது. அதனால் காடுகள் அழிகிறது. கானுயிர்கள் அழிகிறது. உயிர்ச்சூழல் மண்டலம் அதீதமாக பாதிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த பகுதிகளை எல்லாம் மலையிட பாதுகாப்பு கிராமங்களாக அறிவித்தது அரசு.

இப்போது நம்மால் சுட்டிக்காட்டப்பட்ட காட்டு பங்களா, சொகுசு மாளிகைகள் அமைந்துள்ள நாதே கவுண்டன்புதூர், ஆலாந்துறை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமல்ல ஏற்கெனவே சொல்லப்பட்ட மதுக்கரை, மாவூத்தம்பதி, எட்டிமடை போன்ற பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளும் இந்த நில வகைகளுக்குள் வருபவைதான்.

இதன்படி தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் [Hill Area Conservation Authority (HACA)] G.O.Ms.எண்.44, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை (TCII) நாள் 22.4.1990 இன் படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசினால் குறிப்பிட்ட பணியை(Ad-hoc Authority) மட்டும் தொடர அமைக்கப்பட்டதே தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் ஆகும். இதில் பல்வேறு அரசுத் துறையின் செயலர்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) உறுப்பினராக்கப்பட்டனர்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலர், தலைவர் ஆவார். உறுப்பினர்-செயலராக , நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் ஆவார். உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறும் விண்ணப்பங்களை ஆணையம் ஆய்ந்து அனுமதி அளிக்கும். அரசாணை நிலை எண்.49 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள்.24.03.2003-இல் இணைப்பு- I இல் கொடுக்கப்பட்டுள்ள மலைப் பகுதிகளாக கோவை மாவட்டத்தில் கீழ்கண்ட வட்டத்தில் உள்ள ஊராட்சிகள் வருகின்றன.

மேட்டுப்பாளையம் வட்டத்தில், 1.தோலம்பாளையம், 2.வெள்ளியங்காடு, 3.தேக்கம்பட்டி, 4.ஓடந்துறை, 5.நெல்லித்துறை, 6.சிக்கதாசம்பாளையம், 7.சிறுமுகை. பொள்ளாச்சி வட்டத்தில் 1.பெரியபோது, 2.வேட்டைக்காரன்புதூர், 3.கலியபுரம், 4.காட்டூர், 5.அங்காலகுறிச்சி, 6.தொறையூர், 7.ஜல்லிப்பட்டி, 8.அர்த்தநாரிபாளையம், வால்பாறை வட்டத்தில் 1.வால்பாறை, 2. ஆனைமலை,

கோவை தெற்கு வட்டத்தில் 1.நரசிபுரம், 2.வெள்ளிமலைப்பட்டினம், 3.தேவராயபுரம், 4.கள்ளிநாயக்கன்பாளையம், 5.இக்கரைப் போலுவாம் பட்டி, 6.மத்வராயபுரம், 7.ஆலாந்துறை, 8.பூலுவப்பட்டி, 9.தென்கரை, 10.மாதம்பட்டி, 11.தீத்திபாளையம், 12.பேரூர்செட்டிபாளையம், 13.சுண்டக்காமுத்தூர், 14.எட்டிமடை, 15.மாவுத்தம்பதி, 16.தொண்டாமுத்தூர். கோவை வடக்கு வட்டத்தில் 1.நாயக்கன்பாளையம், 2.கூடலூர், 3.நரசிம்மநாயக்கன்பாளையம், 4.நஞ்சுண்டாபுரம், 5.சின்னதடாகம், 6.வீரபாண்டி, 7.சோமையம்பாளையம்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் 1. வலையபாளையம், 2.தளி, 2.தளி, 3.ஜல்லிப்பட்டி, 4.லிங்கமாவூர், 5.வெங்கிடாபுரம், 6.மானுப்பட்டி, 7.கல்லாபுரம். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், உதகை, குன்னூர், கோத்தகிரி என வரும் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமங்கள்.

இந்த கிராமங்களில் எப்படிப்பட்ட ஒரு எந்த ஒரு கட்டுமானப்பணியை மேற்கொள்வது என்றாலும் வனத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அரசுத் துறை ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ள இந்த மலையிடப் பாதுகாப்பு குழுவிடமிருந்து தடையில்லா சான்று பெறவேண்டும். இங்கு கட்டுமானப்பணிகள் மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட சதுர அடி பரப்பளவுக்கே அனுமதி கொடுப்பார்கள் அதிகாரிகள். அது யானைகள் வழித்தடம், நீர்நிலை பாதிப்புகள் ஏற்படும் என்றால் 'ஹாகா'வில் உறுப்பினராக உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒப்புதல் கிடைக்கவில்யென்றாலும் விண்ணப்பம் புறந்தள்ளப்படும். இந்த அனுமதி கிடைக்காமல் புதியதொரு கட்டுமானப் பணியோ, மனையிடங்கள் பிரிக்கும் பணிகளோ மேற்கொள்ள முடியாது.

இந்த விதிமுறைகளையெல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசியல் செல்வாக்கு மிக்க ஆன்மீகவாதிகள், கல்வியாளர்கள் அந்த கடும் விதிமுறைகள், சட்டதிட்டங்களையும் தன் செல்வாக்கை வைத்து வளைத்தார்கள். அதிகாரிகள் அதற்கு துணை போனார்கள். இன்னும் சொல்லப்போனால் சில ஐஏஎஸ் அதிகாரிகளே ஒன்று சேர்ந்து ஒரு கட்டுமானக் கம்பெனியாகி, அவர்களே குடியிருப்புகளை அடுக்கினார்கள். கோடி, கோடியாய் விலைக்கும் விற்றார்கள். அதுதான், அந்த பிரம்மாண்ட கட்டிடங்கள்தான் இங்குள்ள நீர்நிலைகளுக்கும், இயற்கை வளங்களுக்கும், வனவிலங்குகளுக்கும் சோதனையாக வந்து முடிந்தது. அதைத்தான் சில அத்தியாயங்கள் முன்வரை துணை நகரமாக, காட்டு பங்களாவாக, சொகுசு மாளிகைகளாக, பிரம்மாண்ட பல்கலைக்கழகங்களாக, கல்லூரிகளாக, கல்குவாரிகளாக எல்லாம் பார்த்தோம்.

அடுத்தது இதைவிட நிறையவே பார்க்கப் போகிறோம். அதில் முக்கியமானதாக வரைமுறையே இல்லாமல் சூழல் சேதப்பட்டுக் கொண்டிருக்கும் கோவை குற்றாலமும், வெள்ளியங்கிரி மலையும் அடுத்ததாக வரவிருக்கிறது..

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

 

தவறவிடாதீர்!    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x