Published : 29 Jul 2019 12:29 pm

Updated : 29 Jul 2019 12:30 pm

 

Published : 29 Jul 2019 12:29 PM
Last Updated : 29 Jul 2019 12:30 PM

ஆண்கள் மட்டுமே தரிசிக்கும் தாளவாடி மல்லிகார்ஜுனா கோயில்!

thaalavadi-mallikarjun-temple

இந்து மதக் கோயில்களைப் பொறுத்தவரை, பல்வேறு காரணங்களால் வழிபாட்டு முறைகள் மாறுபடுகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கொங்ஹள்ளி கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜுனா கோயில், ஆண்கள் மட்டுமே வழிபடும் கோயிலாக  விளங்குகிறது.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ளது  தாளவாடி மலைக் கிராமம் உள்ளது. அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  கொங்ஹள்ளி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான  மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது. இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனை  தரிசித்த பின்னரே, மல்லிகார்ஜுனரைத் தரிசிக்க வேண்டுமென்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.இக்கோயிலில், ஆஞ்சநேயர் சன்னதி வரை மட்டுமே பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 


அதன் பின், பெண்களுக்கு அனுமதி இல்லை. கோயில் உருவான வரலாறு, பெண்களுக்கு அனுமதி மறுப்பதற்கான காரணம் குறித்து தலைமை பூசாரி சதாசிவமூர்த்தி விளக்கினார்.

“ஆந்திரா மாநிலம் ஸ்ரீசேனாவில் இருந்து,  மல்லிகார்ஜுனா தவம் செய்வதற்காக பாத யாத்திரையாக கொங்ஹள்ளி கிராமத்துக்கு வந்தார். தற்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் அமர்ந்து அவர் தவம் செய்தார். கொங்ஹள்ளியில் இருந்து தினமும் ஒரு பசுமாடு, மல்லிகார்ஜுனா தவம் செய்யும் இடத்துக்கு வந்து சென்றது.

மாட்டை வளர்த்து வந்தவர் பால் கறக்க முயன்றபோது,  மடியில் பால் சுரக்கவில்லை. எனவே, அடுத்த நாள் மாடு மேய்ச்சலுக்கு சென்றதை கண்காணித்தபோது, வனப் பகுதிக்குள் சென்று வருவதைப் பார்த்தார். பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், மாட்டை பின் தொடர்ந்து வனத்துக்குள் சென்றனர். வனத்துக்குள் பசுவின் மடியிலிருந்து பால் தானாக சுரந்து,  மல்லிகார்ஜுனாவின் மீது அபிஷேகம் செய்ததை பார்த்து ஊர்மக்கள் வியந்தனர்.

ஊர் மக்கள் வந்ததையறிந்த மல்லிகார்ஜுனா கண் விழித்துப் பார்த்தார். அவருக்கு அருகில் புலியும், 7 தலை நாகப்பாம்பும் இருந்தது. மக்களைப் பார்த்து உறுமிய புலியையும், சீறிய பாம்பையும் தடவிக்கொடுத்து அமைதிப்படுத்தினார் மல்லிகார்ஜுனா. பின்னர், ‘எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள்? என்று ஊர்மக்களிடம் கேட்டபோது, அவரை தரிசனம் செய்ய வந்ததாக  தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தவம் செய்ய, தங்களது ஊரில் சிறந்த குடிலை அமைத்துத் தருவதாகவும் தெரிவித்தனர். அப்போது மல்லிகார்ஜுனா, தான் பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதாகவும், தனது அருகில் பெண்கள் யாரும் வரக்கூடாது என்றும் கூறினார்.

எனினும், ஊருக்குள் வந்து அருள் வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியதால்,  மல்லிகார்ஜுனா ஒப்புக்கொண்டார். பின்னர்,  அவர் புலி மீது ஏறி, ஊரில் உள்ள  ஆஞ்சநேயர் கோயில் வரை  சென்றார். தொடர்ந்து புலி மீது சென்றால் மக்கள் அச்சம் கொள்வார்கள் என்பதால், பசுமாட்டைப் பயன்படுத்தினார்.

கொங்ஹள்ளி கிராமத்தில் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து, மக்களை சந்தித்தார். அப்போது அங்கிருந்த 3 பேருக்கு ஆசி வழங்கி, தனக்கு பணிவிடை செய்யலாம் என்றார். அன்றிலிருந்து அந்த 3 பேரின் தலைமுறையினர் கோயிலில் பூஜை செய்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக தவம் செய்துவந்த மல்லிகார்ஜுனா ஜீவசமாதி அடைய முடிவு செய்தார். தனது சீடர்களிடம், ‘நான் ஜீவசமாதி அடைந்த பிறகு உருவாகும் லிங்கத்துக்கு கோயில் கட்டி வழிபடுங்கள்’ என்று கூறினார். அவர் சொன்னபடி லிங்கம் உருவாக்கப்பட்டு, அதில் 7 தலை பாம்புக் கவசம் வைக்கப்பட்டு,  தற்போது வழிபாடு நடத்தப்படுகிறது” என்றார் பூசாரி சதாசிவமூர்த்தி.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது, பக்தர்கள் புடைசூழ பூசாரிகள்,  கோயிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெட்டவாடி கிராமம் கிரிஜம்மா தோப்புக்குச் செல்வார்கள். அங்குள்ள நந்தி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து,  மீண்டும் மல்லிகார்ஜுனா கோயிலுக்கு நடந்து வருவார்கள். இந்தக் கோயிலில் பூசாரி ஒருவர் மட்டுமே குண்டம் இறங்குவார். மல்லிகார்ஜுனா கோயிலுக்கும், கிரிஜம்மா தோப்புக்கும் சிறிய வரலாறு இருக்கிறது. 

கெட்டவாடி கிராமத்தில் சிவன் பக்தரான கிரிஜம்மா சிறிய மண்டபத்தில் தியானம் செய்வது வழக்கம். அந்த மண்டபத்தில் சிறிய தெப்பக்குளம், மலர்த் தோட்டம் இருந்தது. இதைப் பார்த்த மல்லிகார்ஜுனா, அந்த மண்டபத்துக்கு தினமும் அதிகாலை சென்று, தியானம் செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டார்.

அப்போது, தோட்டத்தில் உள்ள 108 வகையான பூக்களும் அவர் மீது தானாக விழுந்து அபிஷேகம் செய்யுமாம். பின்னர் அவர் வனத்துக்குள் சென்று விடுவார். தோட்டத்தில் பூக்கள் மாயமாவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த  கிரிஜம்மா, அதைக் கண்டுபிடிக்க மறுநாள் அதிகாலை ஒரு மரத்துக்கு அருகில் மறைந்து நின்றுகொண்டார்.

மல்லிகார்ஜுனா மண்டபத்துக்கு வந்து தியானம் செய்வதையும், 108 வகையான பூக்கள் அவர் மீது விழுவதையும் பார்த்த கிரிஜம்மா, அவர் முன்பு வந்து, வணங்கினார். மேலும், அந்த மண்டபத்திலேயே தங்கியிருந்து தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பிரம்மச்சரிய விரதத்தில் இருப்பதால், ‘பெண் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்’  என்று கூறிய மல்லிகார்ஜுனா, அங்கிருந்து  புறப்படுவதற்காக நந்தியின் மீது ஏற முயன்றார். அப்போது கிரிஜம்மா நந்தியின் மூக்கினாங்கயிற்றைப் பிடித்து இழுத்து,  மாமரத்தில் கட்டி வைத்தார். 

பின்னர், மல்லிகார்ஜுனா அங்கிருந்து கிளம்பிவிட்டார். மல்லிகார்ஜுனா பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதால், இக்கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மல்லிகார்ஜுனா ஜீவசமாதியின் மீது உள்ள நந்தி சிலை, அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கிணறு ஆகியவை  நினைவுச் சின்னங்களாக கோயிலில் உள்ளன. மேலும், கோயிலின் கோபுரத்தில் மல்லிகார்ஜுனாவின்  சிலை உள்ளது.

இக்கோயிலில் குண்டம் திருவிழா மட்டுமின்றி,  மகா சிவராத்திரி, யுகாதி,  பொங்கல் பண்டிகைகளும் விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோயிலுக்கு தமிழகம், கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களைச்  சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர்.

“மல்லிகார்ஜுனா சுவாமியை வழிபட்டால், அரசு வேலை கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை” என்கின்றனர் கோயில் பூசாரிகள்   சதாசிவமூர்த்தி, நடேஷ், மாதேஸ்சாமி ஆகியோர்.

பக்தர்கள் வசதிக்காக கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குண்டல்பேட் -கொங்ஹள்ளி, சாம்ராஜ்நகர் -கொங்ஹள்ளி ஆகிய வழித்தடங்களில் 2 பேருந்துகளும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தாளவாடியில் இருந்து கொங்ஹள்ளி கோயில் வரை ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது.

- எஸ்.கோவிந்தராஜ்தாளவாடி கோயில்மல்லிகார்ஜுனா கோயில்ஆண்கள் கோயில்மலைக்கிராம கோயில்கொங்ஹள்ளி கோயில்பிரம்மச்சாரிகள் கோயில்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x