Last Updated : 01 Jul, 2019 03:07 PM

 

Published : 01 Jul 2019 03:07 PM
Last Updated : 01 Jul 2019 03:07 PM

மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்: மழை நீர் சேகரிப்பில் சாதனை புரிந்த மதுரை பொறியாளர் அருணாச்சலம் சொல்லும் ஆலோசனைகள்

நாடு முழுவதும் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது தமிழகத்தில் வட்டார அளவில் (பிளாக்) அதிகபட்சமாக 358 பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கதிமாக உறிஞ்சப்பட்டுள்ளது என்று நிலத்தடி நீர் தொடர்பாக  நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்திருக்கிறார். இது டெல்லி மேலிடக் கணிப்பு.

இக்கு தமிழகத்தில் அந்தக் கணிப்பை உறுதி செய்வதுபோல்தான் பற்றாக்குறையும் திண்டாட்டமும் இருக்கிறது.

தாகத்தில் தமிழகம் என்ற ஹேஷ்டேக் திடீரென ஒருநாள் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகிறது. தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் என எல்லாப் பக்கமும் தண்ணீர் பஞ்சம் பற்றிய விவாதங்களைக் கேட்க முடிகிறது. ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி கேப்ரியோ சென்னையை மழைதான் காப்பாற்ற வேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

தண்ணீர்  பிரச்சினை இப்படி பூதாகரமான பின்னர்தான் அரசாங்கம் கிடப்பில்போட்டுவைத்த மழைநீர் சேகரிப்பு முறை குறித்து பேசத் தொடங்கியிருக்கிறது. மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார்.

2003-லேயே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டாலும்கூட அதன் பின்னர் அது முழு வீச்சில் கண்காணிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால், மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக மழைநீர் சேகரிப்பு நீரை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தனது வீட்டுக்கும் தான் வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளுக்கும் தேவையான நீரை அறுவடை செய்துவருகிறார் ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி அருணாச்சலம். 

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அருணாச்சலத்தின் வீட்டின் நீர்வளம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். மழைநீரை சேகரித்தாலே வறட்சி காலத்தில் தண்ணீருக்காக ஏங்கும் நிலவரம் ஏற்படாது என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகிறார் அருணாச்சலம்.

இந்து தமிழ் திசை இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து:

நான் தமிழக பொதுப்பணித் துறையில் பணியாற்றினேன். 35 ஆண்டுகள் பணிக்காலத்தில் சீனியர் பொறியாளர், தலைமைப் பொறியாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறேன். அதுவும் நான் பணியாற்றியத் துறை நிலநீர் பிரிவு (GroundWater Wing). அதனால், எனக்கு நிலத்தடி நீர் மேலாண்மை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. எனது பணி அனுபவங்கள் பின்னாளில் என் வீட்டில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உந்துசக்தியாக இருந்தது.

அதுவும் இல்லாமல் நான் பிறந்தது காரைக்குடி அருகே இருக்கும் கல்லல் என்ற கிராமம். எங்கள் பகுதிகளில் வீடுகளுக்கு நடுவே முற்றம் இருக்கும். வெட்டவெளியான அந்தப் பகுதிக்குள் மழை நீர் விழும். அப்போது தாழ்வாரத்தின் ஓரங்களில் வழியும் தண்ணீரை பெரிய பெரிய அண்டாக்களில் சேகரித்துவைப்பது வழக்கம். தாமிர அண்டாவில் தண்ணீரைச் சேமித்து 8 முழு வேட்டியால் வேடு கட்டிவைத்துப் பயன்படுத்துவோம். 500 முதல் 600 லிட்டர் வரை ஒரு அண்டாவில் சேர்த்துவைப்போம். 4 மூலைகளில் 4 அண்டாக்கள் என்று இதிலேயே கிட்டத்தட்ட 2000 லிட்டர் வரை தண்ணீர் சேமித்துவிடுவோம். சிறுவயதிலிருந்தே மழைநீர் சேகரிப்பைப் பார்த்துப் பழகியதால் நான் கட்டிய வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டியை அமைக்க அடித்தளமாக அமைந்தது.

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 90 செ.மீ. மழை பெய்கிறது. ஏரி, குளம், கண்மாய்களை சரியான இடைவெளியில் தூர்வாரி மழை நீரைச் சேகரித்தாலே சென்னை போன்ற நகரங்கள் இன்று எதிர்கொண்டிருக்கும் சவாலை மிக எளிதாக சமாளித்திருக்க முடியும். அதுமட்டுமல்லாமல் நமக்குக் கிடைக்கும் மழை நீரை நாமே வீடுகளில் முறையாக சேமித்தால் தண்ணீருக்காக அரசாங்கத்திடம் கைகூப்பி நிற்கும் நிலையும் ஏற்படாது. இன்று எங்கள் குடும்பமும் எங்கள் வீட்டில் உள்ள வாடகைதாரர்களும் தண்ணீரில் தன்னிறைவைப் பெற்றிருக்கக் காரணமும் இதுவே.

எங்கள் வீட்டுல் போர் போட்டிருந்தாலும்கூட மழை நீர் மட்டுமே போதுமானதாக இருப்பதால் போர் வாட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தண்ணீர் சுரங்கத்தைப் பாழடையவிடாதீர்கள்:

பூமிக்கடியில் இருக்கும்  நீரகத்தைத்தான் (Aquifer) நான் தண்ணீர் சுரங்கம் என்கிறேன். நாம் நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டே இருக்கிறோமே தவிர பூமிக்கடியில் இருக்கும் நீரகங்களைப் பாழடையவிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே.

ஓர் எளிமையான உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன். நாம் ஒரு வீட்டை வங்கிக் கடன் பெற்று வாங்குகிறோம். அதற்கான கட்டணத்தை வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் வங்கிக்குச் செலுத்துகிறோம். ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் வீடு நம் கையில் இருக்குமா? அப்படித்தான் நாம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொண்டே இருந்தால் அந்த ஆதாரம் நம் கையில் இல்லாமல் போய்விடும். அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். தவறை நம் மீது வைத்துக்கொண்டு பொய்த்துப்போன பருவமழை மட்டுமே சுமத்துவது சரியானது அல்ல. ஒருவகையில் பருவமழை பொய்க்கவும் மனிதர்களாகிய நாமே காரணம்.

 

 

தண்ணீர் சுரங்கம் என்பது நிலத்திற்கு அடியில் இருக்கும் தண்ணீர் படுகைகள். இவை மழைநீரை உறிஞ்சுவைத்துக் கொள்ளும். சொட்டுசொட்டாக சேர்த்துவைத்த தண்ணீரை அவ்வப்போது வெளியேற்றி நிலத்தடி நீரை செறிவூட்டிக் கொண்டே இருக்கும். இதனால், கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். இப்படித்தான் நிலத்தடி நீர் ரீசார்ஜ் நடந்து கொண்டிருக்கும்.

ஆனால், நாம் மழை நீரைச் சேகரிப்பதில்லை. மழை நீர் நம் வீட்டைச் சுற்றி மண்ணுக்குள்கூட செல்லாவிடாமல் எல்லா இடங்களிலும் சிமெண்ட் போடுகிறோம். சாலைகளில் கான்க்ரீட்டால் அமைக்கிறோம். பெய்யும் மழை நீரில் ஓரளவு கடலில் கலக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், நமது மோசமான நீர் மேலாண்மையால் ஒட்டுமொத்த மழைநீரும் வீணாகக் கடலில் கலக்கிறது.

அக்வுஃபையர்களை அறிந்து கொள்ளுங்கள்..

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பதுடன் நின்றுவிடுவதில்லை. அதன் பின்னர் தொட்டி நிரம்பி வெளியேறும் தண்ணியை பூமிக்கடியில் உள்ள நீரகங்களுக்கு அனுப்புவதிலும் இருக்கிறது. ஒருபுறம் உங்கள் வீட்டில் ஆண்டுதோறும் நீர்த்தேவை பூர்த்தியாகும் அளவுக்கு தொட்டியில் தண்ணீர் இருக்கும். மறுபுறம் நீரகம் பாழடையாமல் இருக்கும்.

உதாரணத்துக்கு 3 சென்ட் வீடு என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் 4 பேர் வாழ்கிறார்கள். ஒருவருக்கு 1 நாளைக்கு குடிதண்ணீரின் தேவை 3 லிட்டர், சமையலுக்கான தேவை 4 லிட்டர். மொத்தம் 7 லிட்டர் வீதம் 4 பேருக்கான நன்னீர் தேவை ஒரு நாளைக்கு 28 லிட்டர். ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10,800 லிட்டர். உங்கள் வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி இருந்தால் ஆண்டில் 5 நாட்கள் மழை நீரை சேகரித்தால் மட்டுமே இந்த அளவிலான தண்ணீரைச் சேர்த்து வைத்துவிடலாம். யாரிடமும் கையேந்தும் நிலை ஏற்படாது.

11,000 லிட்டர் தண்ணீர்  வெயில்படாமல் வைத்து பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும். 11,000 லிட்டருக்கு மேலான தண்ணீரை பிரத்யேக போர் அமைப்பு மூலம் நீரகங்களுக்குள் செலுத்தலாம். எந்த இடத்தின் வழியாகச் செலுத்தலாம் என்பதை என்னைப் போல் நிலநீரோட்டம் அறிந்தவர்களால் கணித்துக் கூற முடியும்.

நீரகம் (Aquifer) கன்ஃபைன்ட் அக்வுஃபையர், நான் கன்ஃபைன்ட் அக்வுஃபையர் என இரண்டு வகைப்படும். கன்ஃபைன்ட் என்றால் முடிவுற்ற நிலையில் இருக்கும் நீரகங்கள். பாறைகளுக்கு இடையில் இருப்பவை. நான்கன்ஃபைன்ட் அக்வுஃபையர், முடிவு இல்லாமல் மணல்பாங்கான இடத்தில் இருப்பவை. உங்கள் வசிப்பிடத்தின் கீழ் எந்த மாதிரியான நீரகம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நீரை எத்தனை க்யூசெக்ஸ் ( ஒரு நொடிக்கு எத்தனை கியூபிக் ஃபீட்) தண்ணீரை உள்ளே செலுத்தலாம் என்பதைக் கணித்து செலுத்தலாம். இவற்றின் மீதெல்லாம் மக்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசாங்கம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு செலவிடும் காசை மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அதைவிட நிச்சயமாக மிக சொற்பமான அளவே செலவாகும். இஸ்ரேல் போன்ற நாடுகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேவை. அங்கு ஆண்டு மழையே வெறும் 11 செ.மீ .தான். ஆனால், இந்தியாவில் 90 செ.மீ. மழை பெய்கிறது. கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகமாக மழை பெய்யும் நம் நாட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவது என்னைப் பொறுத்தவரை அபத்தம்.

மறை நீர் தெரியுமா உங்களுக்கு?

சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு பருவமழை பொய்த்தது மட்டுமே காரணமல்ல. வேறு எந்த வகையிலுமே தண்ணீர் ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது, பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள்தொகையும் காரணம். விர்ச்சுவல் வாட்டர் (Virtual water) மறை நீர் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு விழிப்புணர்வு இருக்கிறது.

மறை நீர் என்பது ஒரு நாட்டின் நீர் வளத்தைக் கொண்டு மதிப்பிடப்படும் தண்ணீர் பொருளாதாரம். இதனை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஆண்டனி ஆலன் என்பவர் கண்டறிந்தார். 2008-ல் தான் இது கண்டுபிடிகப்பட்டது. நீரின் தேவை எவ்வளவும் பொருளின் தேவை எவ்வளவு என்பதை சரியாக ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். இதில் சீனா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் புத்திசாலித்தனமாக இயங்குகின்றன.

ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் ஏற்படும் செலவைவிட அதை இறக்குமதி செய்யும் செலவு குறைவு என்றால் அதனை இறக்குமதி செய்வதே சிறந்த கொள்கை. அதனால்தான் சீனா பன்றி வளர்ப்பை ஊக்குவிப்பதில்லை. பன்றி இறைச்சிக்கு அதிகமான மறை நீர் தேவைப்படுவதால் அதனை இறக்குமதி செய்து கொள்கிறது.

சென்னையில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. இன்னும் புதிதுபுதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன. ஒரு கார் தயாரிக்க சுமார் 4 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. அமெரிக்காவும், ஜப்பானும் தங்கள் கார் தொழிற்சாலைகளை சென்னையில் அமைப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் உங்களுக்கு இப்போது புரிகிறதா? அமெரிக்காவின் மிகப் பிரபலமான பைக் கம்பெனி அதன் வாடிக்கையாளர்களுக்கான ஹெல்மெட்டை நாக்பூரில் தயாரிக்கிறது. நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுடன் நமது தண்ணீர் பொருளாதாரம் கருகிக் கொண்டிருக்கிறது.

மறை நீர் பற்றி நமக்கு விழிப்புணர்வும் இல்லை. ஆட்சியாளர்களுக்கு அக்கறையும் இல்லை. சென்னை தண்ணீர்  பஞ்சத்துக்கு இதைவிட பெரிய காரணம் என்னவிருக்க முடியும். அத்துடன் சென்னைக்கு நீர் ஆதாரமான ஏரி, குளங்களைத் தூர் வாருவதில் காட்டப்படும் மெத்தனம். தூர் வாருதல் என்பது வெறும் ஆழத்தை அதிகரிப்பது மட்டுமல்ல கரைகளைப் பலப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகளை உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் சிரத்தையுடன் செய்திருந்தால், மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால், மறை நீர் பற்றி புரிதல் ஏற்படுத்தியிருந்தால் மக்கள் உஷாராகியிருப்பார்கள். தண்ணீர்  மேலாண்மை அவர்கள் வாழ்க்கை முறையாகியிருக்கும். ஆங்கிலத்தில் பெட்டர் லேட் தான் நெவர் என்பதுபோல் இப்போதாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இயற்கை நமக்கு அருளிக்கொண்டுதான் இருக்கிறது நமக்குத்தான் அதனை மேலாண்மை செய்யத் தெரியவில்லை. நம் தவற்றைத் திருத்துவோம்.. தண்ணீர் பஞ்சமில்லாமல் வாழ்வோம் என்று கூறி முடித்தார் அருணாச்சலம்.

மழை நீர் சேகரிப்பு பற்றி மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கருத்து கூறும்போது, அரசாங்கம் எதை எதையோ இலவசமாக வழங்குகிறது. மழை நீர் தொட்டியை முறையாக அமைக்க மானியம் கொடுக்கலாம். ஒவ்வொரு நபரின் கணக்கிலும் நேரடியாகவே கூட பணத்தை செலுத்தி அரசாங்க விதிமுறைகளின்படி குறிப்பிட்ட கால அளவுக்குள் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யலாம் என்று யோசனை கூறினார்.

மாற்றம் நம்மிடம் இருந்துதான் பிறக்க வேண்டும் என்பது காந்தியின் வார்த்தைகள். மழைநீர் சேகரிப்பை நாம் ஒவ்வொருவருமே வீட்டில் அமைக்கத் தொடங்கி அதன் பலன்களை நாம் அறுவடை செய்வதை அக்கம்பக்கத்தினர் நேரடியாக பார்ப்பார்களேயானால் அவர்களும் ஊக்கமடைவார்கள் அல்லவா?

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x