Published : 14 Aug 2017 10:06 am

Updated : 14 Aug 2017 10:35 am

 

Published : 14 Aug 2017 10:06 AM
Last Updated : 14 Aug 2017 10:35 AM

23 லட்சம் இளைஞர்களுக்கு வருகிறது விடியல்

23

ந்தியா ஒரு விநோதமான நாடு. அநேகமாக நாம் அனைவருமே விநோதமானவர்கள்தாம். படிப்பையும் உழைப்பையும் கூட, தரம் பிரித்துப் பார்க்கிற நம்மை வேறு என்னவென்று சொல்வது...? மருத்துவத்துக்கும் பொறியியலுக்கும் ஆலாய்ப் பறக்கிறவர்களில் எத்தனை பேருக்கு, ‘ஐடிஐ’ என்று ஒரு தொழிற்கல்வி இருப்பது தெரியும்....?

சில படிப்புகள், நலிந்தவர்கள், ஏழைகளுக்கானது என்கிற சிந்தனையே, ஒரு வகையில், மனநோய்தான். ‘வசதி’ உள்ளவர்கள், இந்தப் படிப்பை நல்கும் நிறுவனங்களின் வாசலில் ஒதுங்கக்கூட மறுக்கிறார்கள். இங்கிருந்துதான் லட்சக்கணக்கில், திறமையான தொழிலாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவைதாம் - ‘ஐடிஐ’ எனப்படும் தொழிற்கல்வி நிலையங்கள்.

தொழிற்சாலைகளில் இடையறாது சுழன்று கொண்டு இருக்கும் சக்கரங்கள்தாம், ஒரு நாட்டுப் பொருளாதாரத்தின் அச்சாணி. இந்த இயந்திரங்களை இயக்குபவர்கள் யார்? ‘இயக்குநர்கள்’...? இல்லை. ‘ஐடிஐ’ முடித்த தொழிலாளர்கள். நமது நாட்டின் சுய தொழில்களில் நிரந்தரமாக முதல் இடத்தைப் பிடித்து இருப்பதும் ‘ஐடிஐ’ சார்ந்த தொழில்கள்தாம். மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீஷியன் தொடங்கி, வெல்டர், ப்ளம்பர் வரை எல்லாப் பயிற்சிகளுமே, சுயமாக தொழில் செய்து, வருமானம் ஈட்டும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின், திறன் மேம்பாடு மற்றும் சுய தொழில் அமைச்சகத்தின்கீழ் உள்ள, ‘டைரக்டர் ஜெனரல் ஆஃப் ட்ரெய்னிங்’ அலுவலக அதிகாரப்பூர்வ இணைய தளம், இந்தியாவில் 11,964 ‘ஐடிஐ’கள் இயங்கி வருவதாக தெரிவிக்கிறது. (அரசு - 2284 + தனியார் - 9680) இவற்றில் 5 நிறுவனங்கள், பார்வையற்றோருக்கான சிறப்பு மையங்கள். இங்கிருந்து, 126 வகைத் தொழில்களில் முறையாகப் பயிற்சி பெற்று, ஆண்டுதோறும், சுமார் 23 லட்சம் பேர் தகுதி வாய்ந்த தொழிலாளர்களாக வெளி வருகின்றனர். இதிலும் அரசு மையங்களில் பயின்று வரும் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும் எவரையும் ஒரு கணம் மலைக்க வைக்கும். உலகின் தலை சிறந்த திறனுடைத் தொழிலாளர்கள் (skilled workers) இவர்கள்தாம்.

ஆனால்....? என்னதான் சிறப்பாகத் தொழிற்கல்வி முடித்தவர்களாக இருந்தாலும், இவர்கள் பெற்ற பயிற்சியும் திறமையும், பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2-க்கு இணையாகக் கொள்ளப்படுவது இல்லை. 10 அல்லது பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று இருந்தால் மட்டுமே அதற்கான சான்றிதழ் பெற முடியும். ‘ஐடிஐ’ பயிற்சி எல்லாம் கணக்கிலேயே வராது. விளைவு...? ‘ஐடிஐ’ முடித்து இருந்தாலும், பத்தாவது கூடத் தேறாதவர்கள். இதுவே சமுதாயம் இவர்களை இரண்டாம் தரமாக பாவிக்கக் காரணம் ஆகி விடுகிறது.

விரைவில் இந்தக் கொடுமையில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. ‘தி இந்து’ குழுமத்தின் ‘பிசினஸ் லைன்’ பத்திரிகை ஆகஸ்ட் 10 அன்று, மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி சொன்னதாய், இனிய செய்தியை வெளியிட்டு இருக்கிறது. ‘ஐடிஐ’ முடித்தவர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி வகையைப் பொறுத்து 10-வது அல்லது பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற இருக்கிறார்கள். “இதற்கான தேர்வை நடத்தி சான்றிதழ் வழங்கும் பொறுப்பு, டைரக்டர் ஜெனரலுக்குத் தரப்பட்டு இருக்கிறது. சான்றிதழுக்கான தேர்வுப் பணியை, மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வசம் ஒப்படைக்கலாமா அல்லது தனி வாரியம் அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கூறி இருந்தார். அதன்படியே, விரைவில் ‘ஐடிஐ’ மாணவர்களுக்கு தேர்வு நடத்த, தனி வாரியம் அமைக்கப்படும் என்று தற்போது அறிவித்தும்விட்டார்.

சிபிஎஸ்சி அல்ல; ‘ஐடிஐ’க்கு என்று தனி வாரியம் என்கிற முடிவு, உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பள்ளிப் பாடக் கல்வியில் இருந்து ‘ஐடிஐ’ தொழிற்கல்வி முற்றிலும் வேறுபட்டது என்பதால், இதற்கென்று தனி வாரியம் இருப்பதே சரியானது; முறையானது.

இந்த வாரியம் தேர்வு நடத்தி வழங்கும் சான்றிதழ், ‘ஐடிஐ’யில் எடுத்த பாடப் பிரிவைப் பொறுத்து, பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்புக்கு இணையானது. இதனைக் கொண்டு, மேற்கொண்டு பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

தனி வாரியம், சான்றிதழ் என்பதோடு மட்டுமல்லாமல், ‘ஐடிஐ’ படிப்பு / பயிற்சியின் தரத்தை உயர்த்துவது பற்றியும் அமைச்சர் கருத்து தெரிவித்து உள்ளார். இதன்படி, 'ஐ.டி.ஐ.' நிறுவனங்கள், புதிய பல கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துக்காக, அரசு நிறுவனங்களுக்குப் போதிய நிதி வசதி செய்து தரப்படும். ‘ஐடிஐ’ படிப்பு / பயிற்சி, இனிமேல், சிபிஎஸ்சி படிப்புக்கு இணையானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐடிஐ’ முடித்தவர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிகள், கடன் உதவி செய்தல் போன்றவையும் வரவேற்கத் தகுந்த முன்னேற்றமாக இருக்கப் போகிறது.

நீண்ட நாட்களாக இருந்து வந்த பெரிய மனக் குறை தீரப் போவதில் ‘ஐடிஐ’ மாணவர்கள் உண்மையில் மனம் மகிழலாம். இனி வரும் ஆண்டுகளில், மிகவும் வேண்டப்படுகிற படிப்பாக, ‘ஐடிஐ’ மாறவும் வாய்ப்பு இருக்கிறது. பல்வேறு படிப்பு, பயிற்சிகளுக்கு இடையே நிலவும் சமமின்மையைப் போக்குகிற முயற்சியில், ‘ஐடிஐ’ சான்றிதழ், மிக முக்கிய மைல் கல்.

கூடவே, நடந்து முடிந்த கல்வியாண்டு வரை, ‘ஐடிஐ’ படித்து முடித்த, இளைஞர்களையும் தனி வாரியத்தின் தேர்வு எழுத அனுமதித்தால், மேலும் பல லட்சம் இளைஞர்களுக்குப் பயன் அளிப்பதாக இருக்கும். அரசு இதனைக் கனிவுடன் பரிசீலிக்கும் என்று நம்புவோம்.

அறிவிக்கப்பட்டபடி விரைவில் வாரியம் அமையட்டும். சான்றிதழ்கள் வழங்கட்டும். இந்தியாவின் ஒட்டு மொத்த, தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஐடிஐ’ இளைஞர்களின் வாழ்க்கையில் புது அத்தியாயம் தொடங்கட்டும்.

You May Like

More From This Category

experts-oinion-about-chennai-air-pollution

சென்னை காற்று தூய்மையானதா?

செய்தியாளர் பக்கம்

More From this Author