Published : 30 Aug 2017 14:28 pm

Updated : 30 Aug 2017 14:36 pm

 

Published : 30 Aug 2017 02:28 PM
Last Updated : 30 Aug 2017 02:36 PM

யானைகளின் வருகை 24: நந்திகிராம் ஆகாத துணைநகர ரகசியம்

24

மதுக்கரை, வாளையாறு காடுகளில் இந்த கல்வி நிறுவனம், சிமெண்ட் ஃபாக்டரிகள் மட்டுமல்ல, இன்னமும் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் உருவாகியுள்ளன. திருப்பதி ஏழுமலையானின் பெயருடைய ஒரு பொறியியல் கல்லூரி, கேரளத்து மதகுரு பெயரிலான ஒரு கல்லூரி, ஈசன் பெயரில் இன்னொன்று, கண்ணனின் வடிவில் மற்றொன்று, மூன்றெழுத்தில் ஒன்று, லட்சுமி கடாட்சமாய் ஒன்று, வேத மருத்துவம் பெயராய் மற்றொன்று இப்படி அத்தனை கல்லூரிகளும் 30 முதல் 100 ஏக்கர் வரையிலான நிலங்களை தன் வசம் வைத்துள்ளன. அது மட்டுமல்லாது இவர்களின் நிலங்களுக்கு இடையில் ஓடையோ, பள்ளவாரியோ, குட்டையோ வேறு நீர்நிலைகளோ தென்பட்டால் அதையும் வேலி போட்டு ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள்.

இதே பகுதியில் இன்னொரு கொடுமை. இங்கு கடந்த நான்கைந்து ஆண்டுகள் மதுக்கரை முதல் வாளையாறு வரை புதிதாக போடப்படும் தங்க நாற்கர சாலைக்காக (சுமார் 15 கிலோ மீட்டர்) இதன் சுற்று வட்டாரத்தில் உள்ள விளைநிலங்களில் தொடர்ந்து லாரிகளில் லட்சக்கணக்கான லோடு மண் எடுக்கப்பட்டது. அதுவும் எப்படி? திருமலையாம்பாளையம், எட்டிமடை, புதுப்பதி, சின்னாம்பதி அய்யம்பதி, மதுக்கரை என வரும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் ஒரு ஏக்கருக்கு ஒரு அடி ஆழம் மண் எடுக்க ரூபாய் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது.


அதை முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், தற்போதைய எம்எல்ஏ ஒருவரும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து ஒரு லாரி லோடு ரூபாய் 2 முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்திருக்கிறார். அதன் மூலம் சாதாரண மனிதராக ஊருக்குள் வந்த அந்த மனிதர் பெரும் கோடீஸ்வரராகவே ஆகி விட்டார். ஒரு சாதாரண பஞ்சாயத்து தலைவர் சில கோடிகளை கொடுத்து எம்.எல்.ஏ சீட்டும் ஆளுங்கட்சியிடம் வாங்கி தொகுதியில் நின்று வென்றும் உள்ளார் என்றால் அவருக்கு இந்த மண் மூலம் கிடைத்த பெருவருவாயே என்பது இங்குள்ள மக்களிடம் பேச்சாக உள்ளது.

இந்த வகையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இஷ்டம் போல் தோண்டப்பட்டு படுபாதாளங்களாக காட்சியளிக்கின்றன. கனிமவளத்துறையின் விதிப்படி வருவாய்த்துறையின் கீழ் வரும் பட்டா நிலமாக இருந்தாலும் கூட மண் எடுக்க 3 அடி ஆழத்திற்கு மேல் தோண்டக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் இப்பகுதிகளில் 20 அடி முதல் 30 அடி ஆழம் வரை கூட மண் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படி பள்ளங்கள் தோண்டுவதில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீரோடைகள் கூட தப்பவில்லை.

இதற்கும் உள்ளூர் கிராம அதிகாரி முதல் வருவாய்த்துறை அலுவலர் வரை உடந்தை. அவர்களுக்கு உரிய மாமூல் போவதோடு, அமைச்சர் ஒருவரின் மிரட்டலும் இருப்பதால் இதைப் பற்றி அதிகாரிகள் யாரும் மூச்சு விடுவதில்லை. இதை உள்ளூரில் உள்ள மார்க்சிஸ்டுகள் கடுமையாக எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணி எல்லாம் நடத்தினர். மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் முதல்வர் வரை மனுக்கள் அனுப்பியும் உள்ளனர். அப்படி செய்தவர்களுக்கு மிரட்டல்கள் வந்தனவே ஒழிய மண் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை ஏதும் வரவில்லை. சிலரை லாரியை ஏற்றி கொல்லவும் முயற்சிகள் நடந்துள்ளது.

''இந்த எட்டிமடை, மதுக்கரை, குனியமுத்தூர் வழியாக செல்லும் என்.எச் 47 தேசிய நெடுஞ்சாலையை முப்பது நாற்பது வருடங்களுக்குள்ளாகத்தான் பாலக்காடு சாலை, கொச்சின் சாலை என்றெல்லாம் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்தப் பாதையை அந்தக் காலத்தில் யானைப்பாதை என்றுதான் சொல்லுவார்கள். எங்க அப்பா இந்த இடத்தை குறிப்பிடும் போது அந்த யானை ரோடு இருக்குல்ல; அங்கேதான்னு சொல்லுவார். அதே இடத்துலதான் இப்ப குவாரியும் இருக்கு. பெரிய பாலமும் அமைக்கப்பட்டிருக்கு. தேசிய நெடுஞ்சாலைக்கு நடுவே வைக்கப்பட்டிருக்கும் டிவைடர்களை தாண்டிக் கொண்டு யானைகள் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று கொண்டிருப்பதையும் காண முடிகிறது. இந்த யானை சாலையை கடக்கும் இடத்தில் சின்னதாக யானை புகைப்படம் போட்டு, 'யானைகள் நடமாடும் பகுதி'ன்னு எழுதப்பட்ட எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி துக்கிளியூண்டு போர்டு வைத்துவிட்டால் போதுமா? அதைக் காப்பாற்ற, அவை வலசை செல்லும் பாதைகளை காப்பாற்ற வேண்டாமா? அப்படி செய்யாமல் குவாரிகளும், அடுக்குமாடிக் கட்டிடங்களும் எழுப்பினால் யானைகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும்?'' என்கிறார் திடீர் கட்டுமானங்களை எதிர்த்து நின்ற சூழல் அக்கறை கொண்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

இந்த குவாரிக்கு மேற்கே உள்ளது அய்யாசாமி மலை. இந்த மலைக்கும் குவாரிக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் முந்தைய அத்தியாயங்களில் சொல்லப்பட்ட 1300 ஏக்கரில் உருவாகியுள்ள நவீன நகரம். இந்த நவீன நகரத்திற்கு இடையே குடிசை மாற்று வாரியம் கட்டிய ஆயிரக்கணக்கான அடுக்கு மாடி குடியிருப்புகளும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றன. இவையும் பயனாளிகளுக்கு கொடுக்க காத்திருக்கின்றன. இதில் துணை நகரத்திற்கான நிலங்களை ஒரு அரசியல் விஐபி அடிமாட்டு விலைக்கு வாங்கி கொடுத்த சங்கதியை ஏற்கெனவே சில அத்தியாயங்களுக்கு முன்பு சுருக்கமாக கண்டோம். அதில் விடுபட்ட சில விஷயங்களை அப்போது இந்த நில அளவைக்கு உடன் நின்ற அரசு அதிகாரி ஒருவர் இப்படி விவரித்தார்.

இந்த நிலங்கள் எல்லாமே வனப்பகுதியை ஒட்டிய நிலங்கள்தான். வாங்கி கட்டுமானம் மேற்கொண்டது வெளிநாட்டு நிறுவனம் என்றாலும் கூட அதன் முக்கிய பங்குதாரர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவர் இப்படி ஒரு துணை நகரை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு டெல்லியில் மூவ் செய்திருந்தார். அதை அப்போது தமிழக அமைச்சர் ஒருவர் பார்த்துத்தான் அதை இங்கே உருவாக்க திட்டங்கள் தீட்டி கொடுத்தார். அதற்கு 'டிட்கோ' எனப்படும் (tamilnadu industriel investment corporation - TIDCO) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அவர்களையும் ஒரு பங்குதாரா் ஆக்கவும் வழிவகுத்து தந்தார். அதில் 99 சதவீதம் நிறுவனத்தின் பங்கு 1 சதவீதம் மட்டும் அரசுத்துறையின் பங்கு என்பதுபோல காட்டினால்தான் இதில் பிரச்சினை வராமல் இருக்கும் என்பதும் அப்போதைய ஐஏஎஸ்களே வழிகாட்டி அவர்களும் பங்குதாரர்களாகிக் கொண்டார்கள்.

அந்த அடிப்படையிலேயே நிலங்கள் நிறுவனத்தின் பெயரால் விவசாயிகளிடம் வாங்கப்பட்டது. ஒரு ஏக்கர் ரூபாய் ஐம்பதாயிரம் என்றால் கூட விலைபோகாத யானைகள் நடமாடும் பகுதி பட்டாவை ரூபாய் ஒரு லட்சம் வாங்க எவர் முன்வந்தாலும் சந்தோஷம்தானே. அந்த அடிப்படையில் பெரும்பாலான விவசாயிகள் தம் நிலங்களை விற்றனர்.

அப்போதே இது காடு ஒட்டிய பிரதேசம். வனவிலங்குகளுக்கும், காடுகளுக்கும், நீர்நிலைகளுக்கும் உபத்திரவம் வரும் என சில அமைப்பினர் எதிர்த்தார்கள். அவர்களை சுலபமாக சரிக்கட்டவும் செய்தனர். அப்போது மேற்கு வங்காளம் நந்தி கிராமம் போல இங்கேயும் பிரச்சினை வரவேண்டியது. ஆனால் அங்குபோல் இங்கே நிலம் வாங்கித்தரும் வேலையை அரசு தரப்பு செய்யாததால் அந்த சூழல் உருவாகவில்லை. சர்சைகளும் எழவில்லை.

இப்படி ஆயிரம் ஏக்கரில் உருவான பல்லாயிரக் கணக்கான குடியிருப்புகள் இடையே ஓடும் ஓடைகள், குட்டைகள், குளங்கள் எல்லாமே தடுக்கப்பட்டன. இதனால் வழித்தடங்கள் இல்லாமல் யானைகள் மட்டுமல்ல; நீர்வழித்தடங்கள் அழிந்து நிலம் விற்காமல் தப்பித்த எஞ்சிய விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் அதிமுக, திமுக கட்சியின் முக்கிய புள்ளிகள் இணைந்தே செயல்படுவதால் இன்றைக்கு வரைக்கும் பிரச்சினைகள், கேள்வி கேட்க ஆளில்லாது, நீருபூத்த நெருப்பாகவே உள்ளது.

இந்த நிறுவனத்தின் துணை நகர குடியிருப்புகள் கோவைபுதூர், எம்ஜிஆர் நகர், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூர் என் நான்கு கிராமங்களின் ஓரங்களில் அடர் காட்டின் எல்லைபோல் சுற்றி U வடிவில் அமைந்திருக்கிறது. அதன் மேலும் கீழும் தனித்தனியாக வேறு பொறியியல் கல்லூரிகள், குறுநகர புதிய குடியிருப்புகள் வியாபிக்கின்றன. உதாரணமாக இந்த துணைநகரத்திற்கு கிழகோடிக்கு சற்று மேலே 300 ஏக்கரில் ஒரு பொறியல் கல்லூரி மலைக்குன்றுகளுக்குள் அடைந்து கிடக்கிறது. இதுவும் மிகப்பெரும் கட்டுமானப் பணிகளை செய்துள்ளது.

இதில் காலையில் வாயிற்கதவை திறந்தால் அடிக்கடி காட்டு யானைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை சத்தம்போட்டும், பட்டாசு வெடித்தும் விரட்டிவிட்டே கதவைத் திறக்க வேண்டியுள்ளது. இரவுப் பணியில் இருக்கும் செக்யூரிட்டிகள் ராத்திரி நேரத்தில் யானைகளைக் கண்டு தன் அறைக்குள் நுழைந்தால் வெளியே வரவே மாட்டார்கள். சீக்கிரமே வேறு இடத்திற்கு ஓடிப்போவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த கல்லூரிக்கு மாணவ- மாணவிகள் தங்கும் விடுதியும், கேன்டீனும் அருகருகே உள்ளது. கேன்டீனில் உள்ள உணவுப் பொருட்களின் மிச்ச சொச்ச புளிப்பு வாசத்திற்கும் இங்கே யானைகள் வந்து விடுவதாக சொல்கிறார்கள் மாணவ- மாணவிகள்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.inSign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x