Published : 10 Aug 2017 04:18 PM
Last Updated : 10 Aug 2017 04:18 PM

யானைகளின் வருகை 9: காட்டு யானை வயிற்றடியில் ஒரு மணிநேரம்; தப்பிப் பிழைத்த புதுப்பதி பாப்பணின் கதை

 

நட்டநடு மதிய நேரம். வானம் மப்பும் மந்தமுமாக இருந்தது. பாப்பண் கட்டைக் காலை ஊன்றி, ஊன்றி நடந்து கொண்டிருந்தார். கணக்குக்குத்தான் 51 வயசு. பார்த்தால் எழுபது வயசு கணிக்கலாம்.

அந்த அளவுக்கு நரையோடின தாடி. ஜடை, ஜடையாய் தொங்கும் தலைமுடி. அதை அழுக்கு நிற முண்டாசு போட்டுக் கட்டியிருந்தாலும் வெளியிலும் படிந்து நீட்டிக் கொண்டிருந்த முடி. அவர் மனதில் வேகமிருந்தாலும் நடையில் வேகமில்லை. அதற்கு இடைஞ்சலாய் வலது பக்கம் கட்டைக்கால். டொக், டொக் என்று பெரும் சத்தம் எழுப்பியதே ஒழிய, அவர் மனசுக்கு ஏற்ப நடையைக் கூட்ட முடியவில்லை.

கொஞ்ச காலம் முன்னாடி மூணு மைல்தூரத்துல இருந்த சிமெண்ட ஃபேக்டரி சுரங்கத்துல வெடி-வேட்டு வேட்டு வச்சபோது, தெரியாம திரியில கால்வச்சு வெடிச்ச வெடி. தூக்கியெறியப்பட்டு நினைவிழந்தார். விழித்துப் பார்த்தபோது ஆஸ்பத்திரியில் வலது கால் துண்டிக்கப்பட்ட நிலையில். ஆறேழு மாசம் ஆஸ்பத்திரிவாசம். அப்புறம் கால் போனதுக்கு ஒரு தொகை கொடுத்தாங்க. அதை மக்க மருமககிட்ட கொடுத்ததுதான். அதுக்கப்புறம் அது போன இடம் தெரியலை.

மனிதாபிமான அடிப்படையில் அதே சிமெண்ட் கம்பெனியில் வாட்ச் மேன் வேலை கிடைச்சுது. தன் வயிறு பெரிசு கட்டைக்காலை வச்சுட்டு போய்த்தானே ஆகோணும். அன்னைக்கு ஆப் நைட் ஷிப்ட். மணி ஒண்ணுக்கு மேல இருக்கும். மூணு மணிக்குள்ளே குவாரியில இருந்தாகணும். தான் இருக்கிற புதுப்பதிக்கும், குவாரிக்கும் மலைங்காட்டு வழியா சுருக்கிப்போனா மூணு மைல்தான். ஒரு மணி நேரத்துல போயிடலாம். சுத்துவழியில எட்டிமடை போய் பஸ்ல போனா அஞ்சு மணிநேரம் ஆகும். அதுதான் பொடிநடையா கொஞ்சம் வேகம் கூட்டி நடக்கலாம்னா காலு எசைஞ்சு கொடுக்க மாட்டேங்குது. வலது கட்டைக்கால் மட்டும் அந்த வனாந்தரத்தையே எழுப்புற மாதிரி பெரும் ஓசை கிளப்புது.

புதுப்பதியிலியிருந்து ஊட்டை விட்டு ஒரு மைல்தூரம்தான் வந்திருப்பார். ஒத்தையடிப் பாதை. அந்த மூங்கில் தூர் மறைவுல ஏதோ நிழலாட்டம். உத்து கண்ணுக்கு கைய வச்சுப்பார்த்தா, 'அடங்கொப்புரானே!' ன்னு ஆகிப்போச்சு. அங்கே பார்த்தா பெரியவன் (யானை) நிக்கிறான். காதை விடைச்சுட்டு. ஒரு சின்ன அசைவு காட்டாமல். தும்பிக்கையை சுருட்டி வாயில வச்சுட்டு. சின்னக்கண்ணு அசையாம அது பாக்கிற பார்வையே சரியில்லை. அப்படி அதை பார்த்ததும் நம்ம பாப்பணுக்கு திக்குனு ஆகிப்போச்சு.

'அட, இவன் நிக்கறதே கவனிக்காம வந்துட்டமே!'ன்னு பதறிப்போய் திரும்பி ஒரு எட்டு தான் வச்சிருப்பார்.

அவ்வளவுதான்.

ஒரு பிளிறல் சத்தம்தான் கேட்டுது. அதே வேகத்துல முதுகுக்கு பின்னாடி ஒரு தட்டு. கீழே விழுந்த பாப்பண் உடம்புல ஒரு பெரிய உரசு. அவ்வளவுதான் தெரியும் பாப்பணுக்கு. அப்புறம் பார்த்தா பேச்சு மூச்சு இல்லை. முழிச்சுப்பார்த்தா மானம் மாதிரி கண்ணுக்கு நேரா யானையோட பெருவயிறு. பக்கத்துல ஒரு சின்னக்குழி. அதுல இவரோட வலதுகால் கட்டை கழன்று போய் விழுந்து கிடக்கிறதும் தெரியுது.

அதே நேரத்துல இன்னொரு காலை உரசிட்டு தன்னோட காலை எடுத்து வச்சுது பெரிசு(யானை). ஆகா முடிஞ்சேன்னு நினைச்சுட்டார் பாப்பண். மல்லாக்கா அப்படியே கிடந்தார். அது ரெண்டு காலை அந்தப் பக்கம் வச்சதோட சரி. பின்னத்தங்கால் ரெண்டையும் அப்படியே வச்சது வச்சபடி நின்னுகிட்டு இருந்தது. கொஞ்சமாவது அது அசைஞ்சு கொடுக்க வேணுமே. மறுபடி கைய (தும்பிக்கையை) சுருட்டி வாய்க்குள்ளே செருகிடுச்சு.

அப்படியே அது அசையாம நிக்க, இவரும் பெரியவன் நகரட்டும்னு மூச்சை அடக்கிட்டே படுத்துக்கிடக்க, அங்கே யானைக்காச்சு; பாப்பணுக்கு ஆச்சுன்னு சும்மா ஒரு மணிநேரத்துக்கு குறையாது. சொர்ர்ன்னு ஒண்ணுக்கு ஊத்துது. அப்படியே நின்னுட்டு சாணியும் போடுது. அது மூஞ்சியெல்லாம் தெரிச்சு ஒரு மாதிரி வாசம் அடிக்குது. முழிச்சது முழிச்சபடி மூச்சடக்கி கிடந்த பாப்பண் செத்தமாதிரியேதான் இருந்தார். ஆனா முழி மட்டும் பிதுங்கியிருந்தது. அப்படியே அதன் வயித்தைப் பார்த்து கிடந்த பாப்பண் தன் இஷ்ட தெய்வம் கருப்பசாமி, முனியப்பசாமி எல்லாத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.

திடீர்னு 'பெரியவனுக்கு' என்ன தோன்றியதோ. படார்ன்னு பின்னத்தங்காலை தூக்கி அந்தப்பக்கம் வச்சுட்டு எடுத்தது பாருங்க ஓட்டம். எங்கே ஓடின பெரியவன் திரும்ப வந்துடுவானோன்னு பயம் ஒரு பக்கம் இருந்தாலும், பதறியடிச்சுட்டு கட்டைக் காலைக் கூட எடுக்காம அந்தப் பக்கமா போற ரயில்வே லைன் பக்கம் நகர்ந்து நகர்ந்தே வந்தார். இடுப்புல யானை உதைச்ச உதையில் தீயாய் எரியுது. அங்கே ரயில்வே கேட் கீப்பர்கிட்ட நகர்ந்து நகர்ந்து வந்த பாப்பண், 'அங்கே பெரிசு.. பெரிசு.. ஆனை, ஆனை!' ன்னு பிதற்றவும் அந்த ஆளும் வெல, வெலத்துப் போயிருக்கிறார்.

பட்டப்பகல்ல யானையாவது, இங்கேயாவதுன்னு போய் பாப்பண் சொன்ன இடத்துல பார்த்தா யானை சாணம், யானை மூத்திரம் எல்லாம் புதுசா கிடக்குது. அப்புறம்தான் ஊருக்குள்ளே சொல்லி விட சின்னாம்பதி, புதுப்பதி ஜனங்க எல்லாம் ஓடி வந்திருக்காங்க. 'காலில்லாத பாப்பணாவது; ஒரு மணிநேரம் யானையின் வயிற்றுக்கடியில் கிடந்து தப்பிப் பிழைப்பாதாவது!' என்று நம்ப முடியாமல் ஓடி வந்தவர்கள் அங்கே பாப்பண் இருந்த கோலத்தையும், அவர் கிடந்த இடத்தையும், அங்கிருந்து அவர் தவழ்ந்து தவழ்ந்து வந்த பாதையையும், யானையின் சாணம் மற்றும் மூத்திரத்தையும் பார்த்து நம்பினார்கள். பாப்பண் ஆஸ்பத்திரியில் 3 மாதம் சிகிச்சையில் இருந்த பின்புதான் மீண்டார்.

என்றாலும் ஒவ்வொரு நாளும் சிமெண்ட் கம்பெனி வேலைக்குப் போகும்போதும், அந்த இடத்தை பார்த்ததும், 'அப்பனே ஆண்டவனே. மொண்டிப்பிராணி நீ என்னை உட்டு வச்சியே. என்னை நீயே துணை நின்னு காப்பாத்துப்பா!' என்று வேண்டிக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படித்தான் அவர் பெரியவனை கும்பிட்டுக் கொண்டு ஒற்றையடிப் பாதையில் நின்றிருந்த போது சந்தித்தேன். அது 2000 ஆம் ஆண்டு.

'நான் முடிஞ்சேன்னுதான் அன்னைக்கு நினச்சேன். என் குலதெய்வம், என் ஊட்டுப் பெரியவங்க எல்லாத்தையும் நினைச்சுக்கிட்டேன். எங்க குலசாமிக்கு வருஷா வருஷம் கிடா வெட்டறேன். காணிக்கை தர்றேன்னு வேண்டிக்கிட்டேன். அதுதான் சாமி என்னைக் காப்பாத்துச்சு. அதுதான் இன்னைக்கு நடமாடிட்டு இருக்கேன். நான் யானை வயித்துக்கடியில் கிடந்தது ஒரு மணிநேரத்துக்கும் மேலதான் இருக்கும். அதை என்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா யாருமே அதை மட்டும் நம்ப மாட்டேங்கறாங்க. அவங்க ஒரு யானை வயித்துக்கடியில் கிடந்திருந்தா தெரியும் சேதி. நானாவது ஒரு மணிநேரம்னுதான் சொன்னேன். மத்தவங்களா இருந்தா ஒரு நாளே கிடந்தேன்னு சொல்லியிருப்பாங்க. அது ஒரு நாள்னு கூட சொல்ல முடியாது சாமி. ஒரு யுகம்னே சொல்லணும். அப்படி உயிரை கையில புடிச்சுட்டு கிடந்தாத்தான் தெரியும். அது ஒரு மணிநேரமா? ஒரு நாளா? ஒரு யுகமான்னு?' என்று வேடிக்கையுடனே தான் யானையிடம் சிக்கி மீண்ட அனுபவத்தை விவரித்தார்.

இவர் பணிபுரியும் சிமெண்ட் ஃபேக்டரி பிரிட்டீஷார் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. தற்போது காட்டு யானைகள் தொடர்ந்து செத்துக் கொண்டிருக்கும் வாளையாறு- மதுக்கரை ரயில்பாதைளின் இடையில்தான் அமைந்திருக்கிறது இவர் வசிக்கும் புதுப்பதி கிராமம். இதையொட்டியுள்ள புதுப்பதி, அய்யம்பதி, வாளையாறு என வரும் 20க்கும் மேற்பட்ட ஊர்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோலைகளுக்குள்தான் யானைகளை பார்க்க முடியுமாம். பாப்பண் அடிபட்டு தப்பித்த 2000 ஆம் ஆண்டு வாக்கில்தான் ஊருக்குள் வருவதாக தெரிவித்தனர்.

அதற்குக் காரணம், முன்பெல்லாம் ஒரு நாளைக்கு சிமெண்ட் ஃபேக்டரி குவாரியில் சிறிய வெடிகளை ஆங்காங்கே வைத்து கல் உடைப்பார்கள். அதையே கொஞ்ச காலமாக அதீத சக்தியுள்ள வெடியாக மாற்றிக் கொண்டார்களாம். அதாவது, 'ஒரு நாளைக்கு பத்து முதல் இருபது வேட்டு வரை வைத்து உடைக்கும் பாறைகளை போல பல மடங்கு ஒரே வெடியின் மூலம் உடைக்கிறார்கள். இதனால் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள ஊர்கள் நடுங்குகின்றன. அதில் பக்கத்தில் உள்ள புதுப்பதி, சின்னாம்பதி கிராமங்களில் வீடுகள் எல்லாம் வெடிப்பு விழுந்து இடியும் நிலைக்கு ஆளாகி விட்டன.

வேட்டு வைத்தால் கூட யானைகள் நகருவதில்லை
  • முன்பெல்லாம் கோடை காலத்தில் காட்டு யானைகள் தட்டுப்பட்டால் பட்டாசு வெடித்தோ, டமாரம் அடித்தோ விரட்டுவோம். ஒரு சிறிய கல் எடுத்து எறிந்தால் கூட போதும் யானைகள் மிரண்டு ஓடிவிடும். ஆட்களை ஏதும் செய்யாது. ஆனால் இப்போதெல்லாம் பட்டாசுகள் அல்ல; வேட்டு வைத்தால் கூட யானைகள் நகருவதில்லை. போதாக்குறைக்கு ஆட்களையே தாக்குகின்றன.

அந்த அளவுக்கு சிமெண்ட் ஃபேக்டரியின் அதிர்வேட்டுக்கும், வெடியினால் சிதறி விழும் பாறைகளில் அடிபட்டும் பழகி விட்டன. அவற்றின் காதுகள் செவிடும் ஆகி விட்டது. அதனால் சிறிய வெடிகளுக்கு பயப்படுவதில்லை மட்டுமல்ல; ஊருக்குள்ளும் வர ஆரம்பித்து விட்டன!'' என்பதே இந்த கிராம மக்களின் அப்போதைய குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த குற்றச்சாட்டை யானையால் பாதிக்கப்பட்ட பாப்பண் தப்பித் தவறிக்கூட சொல்லவில்லை.

மேலும் கவனியுங்கள்...

இந்த சம்பவம், இந்த குற்றச்சாட்டுகள் கிளம்பியதெல்லாம் இன்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது இந்த காட்டைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் கல்வி நிலையங்கள், ஆன்மீக மையங்கள், நவீன நகரங்கள், கோல்ப் மைதானம், அடுக்குமாடிக் குடியிருப்புகள், புதிய லேஅவுட்டுகள் எதுவும் உருவாகவில்லை.

ஒரு கால் இல்லாத ஆதிவாசி பாப்பணை பிழைத்துப்போ என்று விட்டுப்போன ஒரு யானையைப் பற்றி பார்த்தோம். அடுத்ததாக மனித உயிர்களையே குறிவைத்து நகர்ந்த ஒற்றைக் கொம்பனின் கதையைப் பார்ப்போம். இவன் உலா வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது தூமனூர் என்ற காட்டுத்தீவு கிராமத்தில்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x