Published : 11 Aug 2017 04:29 PM
Last Updated : 11 Aug 2017 04:29 PM

யானைகளின் வருகை 10: தூமனூரில் உயிர்களைக் குடித்த ஒற்றைக் கொம்பன்

ஆனைகட்டி, தூவைப்பதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த இரண்டு குட்டி யானைகளை மீட்டுச் சென்ற காட்டு யானைக் கூட்டத்தைப் பற்றி ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்தோமே. அந்த தூவைப்பதிக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூமனூர், சேம்புக்கரை மலை கிராமங்களின் கதை இது.

இந்தக் கிராமங்களுக்கு இப்பொழுதும் பஸ் வசதி கிடையாது. ஜீப்புகள் செல்ல சாலையும் இல்லை. கோவையிலிருந்து ஆனைகட்டி சாலையில் இடைப்படும் மாங்கரை வனத்துறை சோதனைச் சாவடியில் இறங்கவேண்டும். அவர்களிடம் நாம் தூமனூர், சேம்புக்கரை செல்வதற்கான உரிய காரணத்தை சொல்லி, மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வந்திருப்பதாகச் சொன்னால் நம்மிடம் ஒரு சாவியை தருவார்கள். அல்லது நம்மிடம் ஒரு சாவியை கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.

இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் சென்றால் இடது பக்கம் ஒரு இரும்புக் குழாயினால் ஆன தடுப்பு வைக்கப்பட்டிருக்கும். இதற்கு ஒரு பூட்டும் போடப்பட்டிருக்கும். அதை திறந்து பூட்டிவிட்டு ஜீப்பில் சென்றால் அடர்ந்த காட்டிற்குள் சுமார் 30 வீடுகள் அடங்கிய சேம்புக்கரை என்ற ஊர் இருக்கிறது. அதை தாண்டி 3 கிலோமீட்டர் பள்ளம், மேடு என்று ஏறி, குலுங்கி, குலுங்கி சென்றால் எட்டுவது தூமனூர்.

இதில் சுமார் எண்பது பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சேம்புக்கரைக்கும் சேர்த்து இங்கே ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு வரவேண்டிய ஆசிரியர்களும் தினமும் பேருந்தில் வந்து இந்த தூமனூர் செக்போஸ்ட்டில் இறங்கி ஜீப்பில் வந்து செல்கிறார்கள்.

அதற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட வாடகைத் தொகையை ஜீப்காரர்களுக்கு தருகிறார்கள். இங்கே உள்ளவர்களே இரண்டு ஜீப் சொந்தமாக இதற்காக வைத்து இயக்கி வருகிறார்கள். பகுதி நேர ரேசன் கடை சில மாதங்களுக்கு முன்புதான் வந்தது. அதற்கு முன்பு வரை ஆனைகட்டி அருகே உள்ள ஆலமரமேடு ஸ்டாப்பிற்கு வந்தே வாங்கி அரிசி பருப்பு வாங்கி செல்ல வேண்டும்.

இதற்காக ஒரு கிலோ அரிசிக்கு ரூ.1 வீதம் 30 கிலோ அரிசிக்கு ஜீப் வாடகை கொடுத்து வந்துள்ளார்கள் இங்குள்ள மக்கள். இந்த ஜீப் போக்குவரத்து கூட சில வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டதுதான். அதற்கு முன்பு வரை எல்லாமே தலைச்சுமைதான். நடைபயணம்தான்.

தொடர் சோகக் கதைகள்
  • 1999 ஆம் ஆண்டு வாக்கில் இது தொடர் சோகக் கதைகளே நடக்க ஆரம்பித்தது. அப்படி தொடர் சோகங்களில் ஒன்றாக இந்த ஊரைச் சேர்ந்த கருப்பாத்தாளுக்கும், செல்வனுக்கும் அன்றைய தின இரவு வந்து சேர்ந்தது.

ஆலமரமேடு பக்கம், ஆர்ஷ வித்யகுருகுலம் (தயானந்த சரஸ்வதி ஸ்தாபித்தது) உள்ளது. இங்கிருந்து மலைகளில் தெற்கு நோக்கி நடந்தால் பல மலை முகடுகள், பள்ளத்தாக்குகள் கடக்கும் போது நான்கைந்து மூலைகளிலாவது காட்டுயானைகள், கரடிகள் எதிர்ப்பட்டுவிடும்.

அதன் வாசம் பட்டாலே பழங்குடி மக்களுக்கு தெரிந்துவிடும். உடனே பெரியவன் நிக்கிறான்; ஆண்டவன் நிக்கிறான் என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வேறு திசையில் வழிமாறிச் செல்வார்கள். மாலை ஐந்து மணிக்கு மேலும், காலை 7 மணிக்கு முன்பும் வீட்டிலிருந்து வெளியிலோ, வெளியூரிலிருந்து உள்ளூருக்கோ வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் ஆலமரமேடு கிராமத்தில் மற்ற உறவுக்காரர் வீடுகள், தெருக்கள், சமூக கூடங்களில் தூங்கி எழுந்துவிட்டு விடியற்காலையே ஊருக்குப் போவார்கள்.

அதேபோல் ரேசன் பொருட்கள் கடையில் வந்திருந்தால் முந்தின நாளே இந்த ஊருக்குச் செல்லுபவர்களிடம் கடைக்காரர்கள் சொல்லி விடுவார்கள். அதைக் கேட்டு அடுத்தநாள் அத்தனை பேரும் நடந்தே இங்கே வந்து அரிசி, சக்கரை, மண்ணெண்ணெய் வாங்கிச் செல்வார்கள். அதுவும் ஒருநாள் தங்கி வாங்கிக் கொண்டு அடுத்த நாள்தான் செல்வர். ஆலமரமேட்டிலிருந்து தெற்கு நோக்கி நடந்து சென்றால் ஆறு கிலோமீட்டரில் எட்டுவது தூமனூர்.

அடுத்த மூன்று கிலோமீட்டரில் சேம்புக்கரை. அதுவே மாங்கரை செக்போஸ்ட்டிலிருந்து மேற்கு நோக்கி காடுகளில் சென்றால் 4 கிலோமீட்டரில் சேம்புக்கரை. அடுத்ததாக 3 கிலோமீட்டரில் தூமனூர். இப்படியாக மலைக் குன்றுகளான அடுக்குகளுக்கு நடுவே கிடக்கிறது இந்த கிராமங்கள். இந்த இரண்டு கிராமங்களை தாண்டி சென்றால் வருவது மூலகங்கல். அது மூலகங்கல் என்பதை விட காட்டு யானைகள் தங்கல் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு அந்த ஊரின் மூலையில் 20 யானைகள், 30 யானைகள் கூட்டம் கூட்டமாக காணப்படும்.அதைத் தாண்டினால் கேரளா வந்துவிடும். அந்த மூலகங்கலிலும் சில ஆதிவாசி குடும்பங்களே வசிக்கின்றன. இப்படிப்பட்ட ஊரில் காலங்காலமாய் உளுந்து, பயிறு மற்றும் ராகி, சாமை உள்ளிட்ட தானிய வகைகளையே பயிரிட்டு வருகிறார்கள் பழங்குடிகள். அதிலும் பெரும்பாலும் அவரை, துவரை, மொச்சையே இங்கே விளைவிக்கிறார்கள். ஏனென்றால் இதை மட்டும்தான் யானைகள் விரும்பி சாப்பிடுவதில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

இதுதவிர பூச்சக்காய், நெல்லிக்காய், மூலிகைப் பொருட்கள் சேகரிப்பதையே தொழிலாக வைத்திருந்திருக்கிறார்கள் இங்குள்ள இருளர் இன பழங்குடிகள். அப்படிப்பட்ட இந்த கிராமங்களில் அவ்வளவு சுலபமாய் காட்டு யானைகள் அடித்து மனிதர்கள் இறந்ததான கதைகள் இருந்ததில்லை.

ஆனால் அது 1999 ஆம் ஆண்டு வாக்கில் இது தொடர் சோகக் கதைகளே நடக்க ஆரம்பித்தது. அப்படி தொடர் சோகங்களில் ஒன்றாக இந்த ஊரைச் சேர்ந்த கருப்பாத்தாளுக்கும், செல்வனுக்கும் அன்றைய தின இரவு வந்து சேர்ந்தது.

அவரைக்கும், துவரைக்கும், மொச்சைக்கும் விலையில்லை. இந்த பருவமழைக்கு ராகி, சாமை என தானியப் பயிர்கள் விளைவித்தாலாவது வயிற்றுக்கு அரைக்கஞ்சி குடிக்கலாம் என தங்கள் செட்டில்மெண்ட் நிலத்தில் ஆசைப்பட்டு விதைத்து விட்டார்கள். அதில் தானியங்கள் பூட்டை விட்டு குலுங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் நான்கைந்து இரவுகள் காவல் காத்தால் போதும். எப்படியும் கதிர் அறுத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நடுநிசி நேரத்திலும் பரண் அமைத்து காவல் காத்து வந்தனர் கணவன் மனைவி இருவரும்.

காற்றின் சலசலப்பு, தெற்கிருந்து வடக்குநோக்கி வீசும் தென்றல். அதில் தெற்கு முகமாக கருங்குன்று போல் அசைந்து வந்த உருவம் அவர்களுக்குத் தெரியவில்லை. எதிர்திசையில் வீசிய காற்றால் அதன் சூரை வாசமும் உணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கிட்டத்தில் பார்த்ததும்தான் அதிர்ந்து விட்டனர். இருட்டிலும் மினுங்கியது அதன் தாடையில் வெளித் தள்ளியிருந்த ஒற்றைக் கொம்பு. கொஞ்ச நாட்களாக சேம்புக்கரை, தூமனூர் கிராமங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அதே ஒற்றைக் கொம்பன் யானை. ஜிவ்வென்று பயம் மூளைக்கு தாவ, 'ஓடு' என்று மனம் எச்சரிக்க ஓட்டம் பிடித்தனர் இருவரும்.

ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். அதில் கருப்பாத்தாளை குறிவைத்த ஒற்றைக் கொம்பன் அவளை வாரிச் சுருட்டியது. திமிறித் தெரித்த அவளின் முதுகில் துதிக்கையால் ஓர் அடி. அவ்வளவுதான் அவளின் மரண ஓலம் அந்தக் காடெங்கும் எதிரொலித்தது. அதை பீதியுடன் தூரத்தே நின்று பார்த்தான் கணவன் செல்வன். அவனால் என்ன செய்ய முடியும். மூச்சு விட்டால் அது இவனையும் தும்பிக்கையால் பதம் பார்த்துவிடும். எனவே ஓடினான்.

ஊரைக்கூட்டினான். கருப்பாத்தாளை அடித்த இடத்தை விட்டு மணிக்கணக்கில் அகலாத அந்த ஒற்றைக் கொம்பனை, 'ஊ..ஊ..!' என ஊளையிட்டும், மத்தளங்கள் கொட்டியுமே அந்த இடத்தைவிட்டு விரட்ட முடிந்தது. அதன் பிறகு விடியற்காலை பொழுதில் மட்டுமே கருப்பாத்தாளின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வர முடிந்தது. தலை, தலையாய், நெஞ்சு, நெஞ்சாய் போட்டுக் கொண்டு அழுத செல்வன் கதறலாக கூறிய வார்த்தைகள் இவை:

ஆள் கொல்லி யானை
  • 'இங்கே யானைக தொந்தரவு காலங்காலமா இருக்கிறது உண்மைதாங்க. ஆனா இந்த அளவுக்கு எங்க உயிரோடு அது விளையாடினதில்லை. போன வாரம்தான் மூலகங்கல் கேரளா பகுதியில் ஒரு பையனை இதே ஒத்தைக் கொம்பன் அடிச்சுக் கொன்னுது. அதேபோல ஆனைகட்டியிலயும் ஒருத்தனை கொன்னிருக்கு. அப்பவே நாங்க இது ஆள்கொல்லி யானை. புடிச்சுட்டுப் போய் கூண்டுல அடையுங்கன்னு ஊரே சொல்லுச்சு கேக்கலியே. இப்ப என் பொண்டாட்டிய நான் பறிகொடுத்துட்டு நிற்கிறனே. கொஞ்சம் அசந்திருந்தால் என் உசிரையும் எடுத்திருக்குமே ஒத்தைக் கொம்பன்!'

இதைப்பற்றி அப்போது பேசிய ஊர்க்காரர்கள் தெரிவித்தது:

'எப்பவும் வெடி போட்டா யானைக ஓடிப்போயிடும். ஆனா இங்கே வெடிகுண்டு வச்சிருக்கியா? துப்பாக்கி வச்சிருக்கியா? வீரப்பனுக்கு சோறு கொண்டு போறியா? அவன் கூட்டாளியான்னு தினம் தப்பினாலும் தப்புது. இந்த அதிரடிப்படைக்காரங்க வர்றதும், எங்களை மிரட்டறது மட்டும் நிக்கிறதில்லை. அவங்க காட்டுக்குள்ளே எங்கே போறாங்க. மானை அடிக்கிறாங்களா? முயலடிக்கிறாங்களா? எதை சாப்பிடறாங்கன்னே புரியறதில்லை. எல்லோரும் துப்பாக்கி வச்சிருக்காங்க. அதை ஏதாச்சு ஒண்ணுக்கு சுடும்போதும், கொட்டகை அடிச்சு தீ மூட்டி அவங்க தங்கும்போதும் அங்குள்ள யானைகள் எல்லாம் எங்கே போகும். எங்க மாதிரி மலைவாசிக ஊருக்குள்ளேதானே வரும். சாதாரண ஆனைகள் வந்தாலே தாக்குப்பிடிக்க முடியாது. இப்ப வர்றது கேரளாவில நாலஞ்சு பேரை அடிச்ச ஒற்றைக் கொம்பன். சும்மாயிருக்குமா?'

கருப்பாத்தாளின் சோக முடிவு இப்படி. இதைத்தொடர்ந்து இதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் எல்லாம் யானைகள் மிதித்து ஆள் சாவு செய்திகள் படிப்படியாக வளர ஆரம்பித்தது. அதில் உச்சபட்சமாக நின்றது தூவைப்பதியில் பிச்சை மணி என்பவரை யானை மிதித்து கொன்ற சம்பவம்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x