Published : 12 Aug 2017 02:53 PM
Last Updated : 12 Aug 2017 02:53 PM

யானைகளின் வருகை 11: ஆரநாட்டுக்காட்டு கஜமுகனை கும்பிடப் போன பிச்சைமணியை கொன்ற கஜமூர்க்கன் 

 

பிச்சைமணி காட்டு வேலை, செங்கல்சூளை வேலை என்று கிடைத்த வேலைக்கு போகும் கூலித் தொழிலாளிதான். அதையெல்லாம் தாண்டி கஜமுகன் என்றால் ரொம்ப இஷ்டம். வேலையை விட்டு வந்தால் எந்த நேரம் ஆனாலும் கை,கால் கழுவி, வெள்ளை வெளேர் வேட்டி கட்டி தன் ஆரநாட்டுக்காட்டு வீட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கும் பால் கம்பெனி விநாயகர் மேடைக்குச் சென்று விடுவார். அங்குள்ள தும்பிக்கை, பூஜை செய்து மூணுசுத்து சுத்தி தோப்புக் கரணம் போடாமல் திரும்ப மாட்டார்.

அன்றைக்கும் அப்படித்தான். வேலையை விட்டு வரும்போது மணி மாலை ஆறு ஆகிவிட்டது. அவசர, அவசரமாய் கை,கால், முகம் கழுவி துளுதுளுவென்று வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து, ஊதுபத்தி கற்பூரம் என பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு அருகில் போவதற்குள் பொழுது குட்டு, குட்டாய் இருந்த மலைகளுக்குள் அமிழ்ந்து விட்டது. அங்கே அவர் விநாயகர் சிலையைத்தான் கும்பிடப்போனார். ஆனால் குறுக்கிட்டதோ ஆஜானுபாகுவான ஓர் ஆண் யானை. கருமுசுன்னு அந்த உருவத்தை பார்த்து வெலவெலத்துப் போன பிச்சை மணி தன் கையில் இருந்த பூஜைப் பொருட்களை அங்கேயே விட்டெரிந்துவிட்டு ஓட்டம் பிடிக்க திரும்பக்கூட இல்லை.

துதிக்கையால் சுருட்டிப் பிடித்து ஒரே தூக்கு. காலில் போட்டு ஒரே மிதி. சின்ன வீல் சத்தம் கூட பிச்சைமணியிடம் வெளிப்படுவதற்குள் உயிர் பறந்துவிட்டது. என்றாலும் அந்த மூர்க்க யானை விடவில்லை. அந்த பிராந்தியமே கிடுகிடுக்கிற மாதிரி ஒரு ஓங்காரப் பிளிறலை வெளிப்படுத்தியது, கீழே நசுங்கிக் கிடந்த பிச்சைமணியை அப்படி இப்படி புரட்டியது. தூக்கி வீசி பந்தாடியது. யானையின் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் கூடி, சத்தம் போட்டதோடு, பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட, நீண்ட நேரம் கழித்தே பிச்சைமணியின் உடலை விட்டு விட்டு அருகில் உள்ள பால் கம்பெனி காட்டுக்குள் ஓடி மறைந்தது.

காட்டு யானைகள் மிதித்து மனிதன் மரணிப்பது என்பதும், மனிதர்களால் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு 'டஸ்க்கர்' எனப்படும் ஆண் யானைகள் இறப்பதும் காலங்காலமாக நடைபெற்று வரும் ஒன்று.

 

குட்டி யானைகள், பெண் யானைகள் கோயில்களுக்கு கொடுக்கவும், காப்பகங்கள், முகாம்களில் யானைகள் எண்ணிக்கையை கூடுதல் ஆக்கவும், அந்தக் காலத்தில் அரசர்கள் தங்களின் யானைப்படையின் பலத்தை அதிகப்படுத்தவும் யானைகள் மிகுதியாக வேட்டையாடப்பட்டும், லாயங்கள் ஏற்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டும் வந்தன. அந்த வகையில் மனித விலங்கு மோதலில் மனித- யானை முதலிடம் வகித்துள்ளது.

தவிர இந்த தொடரின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சத்தியமங்கலம், அட்டப்பாடி, ஆனைமலை, விராலிமலை, வெள்ளியங்கிரி மலைக் காடுகளில் விறகு வெட்ட, புளியங்காய் பொறுக்கப் போன, தேன் எடுக்கப் போன, மூலிகைச் செடிகள் பறிக்கப் போன ஆண், பெண்கள் யானையால் மிதிபட்டு இறந்த சம்பவங்கள் ஏராளம். குறிப்பாக யானைகளின் வாசஸ்தலம் என்று சொல்லப்படும் கோவை மாவட்டத்தில் டாப் ஸ்லிப், நீலகிரியின் முதுமலை வனப்பிரதேசத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகம்.

அதையொட்டியுள்ள கிராமங்களின் எஸ்டேட்டுகள், விளைநிலங்களில் காட்டு யானைகள் நுழைவதும், மனிதர்களின் உடமைகளை சேதப்படுத்துவதும் கூட அன்றாட சம்பவங்களாகவே உள்ளது. ஆனால் இந்த எல்லைக் கோடுகளை விட்டு ஊருக்குள் நுழைய ஆரம்பித்து, அங்குள்ள மனிதர்களையும் யானைகள் அச்சுறுத்த ஆரம்பித்தது 2000 ஆம் ஆண்டு வாக்கில்தான்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை அதில் முதலிடம் வகிக்கிறது ஆனைகட்டியை ஒட்டியுள்ள சுற்றுப்பகுதி மலை கிராமங்கள். நாம் இந்த தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் பார்த்தோமே. தண்ணீர் தொட்டியில் விழுந்த இரண்டு குட்டிகளை காப்பாற்றும் முயற்சியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் ஈடுபட்ட சம்பவம். அதே தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்டத்தை சுற்றியுள்ள கிராமங்கள்தான் இவை. 17 வருடங்களுக்கு முன்பு நான் செய்தியாக பதிவு செய்திருந்தவற்றுள் சில சம்பவங்கள்தான் தூமனூர் கருப்பாத்தாள், ஆரநாட்டுக்காடு பிச்சைமணி ஆகியோரின் மரணங்கள்.

ஆனைகட்டி கோவையிலிருந்து கேரளாவின் மன்னார்காடு செல்லும் சாலையில் 28வது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குக்கிராமம் இல்லாமல் சற்றே பெரிய கிராமமாக உள்ள ஊர்தான் இது. இது கேரள மாநில எல்லையாகவும் விளங்குகிறது. இதை தாண்டி மேற்கே கேரள பகுதிக்குள் செல்லும்போது மலைகளும், மலை சார்ந்த குன்றுகளுமாக 40 கிலோமீட்டர் தொலைவுக்கு சிதறிக்கிடக்கும் 198 மலைவாசி கிராமங்கள்தான் அட்டப்பாடி பிரதேசம் எனப்படுகிறது.

இதற்கு நேர் எதிரே- அதாவது கிழக்கில் சுமார் 2 கிலோமீட்டர் சென்று வலதுபுறம் திரும்பினால் மேலும் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் வருவதுதான் இந்த தூவைப்பதி கிராமம்.இதை தாண்டி 4 மைல் தொலைவில் உள்ளதுதான் ஏற்கனவே நாம் கண்ட அடர் கானகத் தீவுகளாக விளங்கும் தூமனூர் சேம்புக்கரை. இந்த தூவைப்பதியை சுற்றியிருக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள்தான் பெரும்பான்மையாய் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு செட்டில்மென்ட் என்ற அடிப்படையில் வனம் ஒட்டிய நிலப்பகுதிகளும் இருக்கிறது.

இந்த தூவைப்பதி கிராமத்திற்கு செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது பால் கம்பெனி. 20 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ஏக்கரில் மாட்டுப் பண்ணையும், அதையொட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு கறவை மாடுகளும் எருமைகளும் வழங்கி பால் உற்பத்தியை மேம்படுத்த தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டதுதான் ஆரநாட்டுக்காடு அருகே உள்ள இந்த பால் கம்பெனி. பால் குளிரூட்டல், பால்கோவா, பால்பர்பி உள்ளிட்ட பால் பொருட்கள் செய்யவும், அதில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மலைமக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும், இங்குள்ள வேளாண்குடிகளின் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தவும்தான் இந்த கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த இடத்தைப் பொறுத்தவரை யானைகள் மேயும், இடமாகவும், நன்றாக தீவனம் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறும் இடமாகவுமே விளங்கியிருக்கிறது. இந்த இடத்தில் பெரிய பால் பண்ணையும், பால் கம்பெனியும் ஆரம்பிக்கச் சொல்லி அரசுக்கு எந்த அதிகாரி தடம் காட்டினாரோ. அதில் கட்டுமானங்கள் எழும்பி, கம்பெனியும் செயல்பாட்டுக்கு வந்து திட்டம் மக்களைச் சென்றடைவதில் நடைமுறை சிக்கல் இருந்ததால் இழுத்துப் பூட்டப்பட்டது.

தவறான அரசின் திட்டங்களாலும், அதிகாரிகளின் குளறுபடியான செயல்பாடுகளாலும் இது இயங்காமல் இன்றளவும் பாழடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த இடத்தை கபளீகரம் பண்ண தற்போது அரசியல் தலைகளுக்கும், தொழில் அதிபர்கள் சிலருக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பால் பண்ணை ஆரம்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நேரத்தில்தான் பிச்சைமணிக்கான துயரம் நடந்தது.

இந்த பால் பண்ணை அருகே உள்ள விநாயகர் கோயில் பகுதியில் காடுபோல் மண்டிக்கிடக்கும் முள்வேலி புதர்களில் சுமார் 27 காட்டு யானைகள் அப்போது தொடர்ந்து தங்கியது. அவற்றில் இரண்டு யானைகள் குட்டியையும் ஈன்றது. அவை மாலை 5 மணியானால் சாலைக்கு வந்து விடுவதும், வழியில் எதிர்ப்படுவோரை துரத்துவதும், மக்கள் பீதியில் ஓடுவதும், தொடர்ந்து நடந்தது. எனவே இந்த சுற்றுவட்டாரத்தில் குடியிருந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாலை ஆறு மணிக்கு வீடுகளுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டால் அடுத்தநாள் விடியற்காலை ஏழு மணிக்கு மேல்தான் கதவை அச்சத்துடனே திறப்பதை வழக்கமாகக் கொண்டனர். என்றாலும் காட்டு யானை தாக்குதலுக்கு மனிதர்கள் இரையாவது தப்பவில்லை.

வெங்கடாசல கவுண்டர் என்பவர் இங்கே யானை மிதிபட்டு இறந்தார். அதன்பிறகு இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குழிக்கூர் என்ற கிராமத்தில் ஒரு இளைஞரை யானை துதிக்கையால் தூக்கி வீசியது. அவர் இடுப்பு உடைந்த நிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்துதான் பிச்சைமணி விநாயகர் கும்பிடப்போனார். யானை மிதித்து பலியானார்.

அதில் அந்த குடும்பமே உறைந்து போய்விட்டது. இந்த செய்திகள் அடுத்தடுத்து வரவே குறிப்பிட்ட ஊர்களில் சென்று நேரில் விசாரித்த போது நம் கண்முன்னால் எங்கே யானை வந்து விடுமோ, மிதித்து விடுமோ என்ற எண்ணம் மேலோங்கி நின்றதைத் தவிர்க்க இயலவில்லை. பிச்சை மணியின் மனைவி பேச்சியம்மாளை கண்கொண்டு பார்க்க சகிக்கவில்லை..

''வேலைக்கு போய்ட்டு வந்தவர். கை, கால் கழுவிட்டு, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை உடுத்திட்டு கற்பூரம் ஊதுபத்தியும் எடுத்துட்டு வழக்கம் போல கோயிலுக்கு போனார். அதுக்கப்புறம், 'அக்கா உங்கூட்டுக்காரரை யானை மிதிச்சிடுச்சு'னு ஒரு பையன் வந்து சொன்னான். நாங்க பதறியடிச்சுட்டு ஓடினோம். இருட்டுல ஊர்க்காரங்க எல்லாம் தீப்பந்தம் கொளுத்திட்டு வந்துட்டாங்க. பாரஸ்ட்டுக்காரங்க, போலீஸ் எல்லாம் வந்து யானைகளை அந்த இடத்துலயிருந்து கலைச்சு விரட்டவே மூணு மணி நேரமாயிடுச்சு. அப்புறம் பார்த்தா, அவரேதான். கால் நசுங்கி, மூஞ்சியெல்லாம் ஒரே ரத்தம்!'' எனச் சொல்லி விம்மினார்.

பிச்சைமணி, வெங்கடாசல கவுண்டர் ஆகியோருக்கு முன்பே மூன்று வருடங்களில் இங்குள்ள கிராமங்களில் எட்டு யானை மிதிச்சாவுகள் நடந்துள்ளதாக சொன்னார்கள் மக்கள்.

யானைகள் வருவது சகஜம்!
  • ''இங்கே யானைகள் வருவது என்பது சகஜம்தான். ஆனால் எப்போது வந்தாலும் பத்துப் பதினைஞ்சு நாள் தங்கும். அங்கங்கே போய் கிடைச்சதை சாப்பிடும். ஒற்றை யானையின்னாத்தான் உஷாரா இருக்கணும். ஆனா இதுக கூட்டத்து யானைக. கண்டுக்காது. ஆளைக்கண்டா கூட பேசாம போயிடும். நம்ம ஏதாவது தொந்தரவு செஞ்சாத்தான் துரத்தும். அது நமக்கும் தொந்தரவு ஆயிடும். ஆனா இப்ப வந்திருக்கிற யானைக புதுசு. வடக்கேயிருந்து (நீலகிரி மலை) வந்திருக்கு. ஆக்ரோஷமும் அதிகம் இருக்கு. குட்டிகளை வேற ஈன்றிருக்குதுங்களா ஆளுகளை கண்டாலே போச்சு. துரத்தல்தான். மிதிப்புதான்?!''

என திகில் ததும்பவே பேசினார் தூவைப்பதியை சேர்ந்த தொட்டியன் என்ற பழங்குடி இளைஞர்.

இங்கே மக்களின் தொடர் பீதியை தொடர்ந்து வனத்துறையினர் தம் பங்குக்கு இந்த யானைகளை ஊருக்குள்ளிருந்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தார்கள். அதற்காக டாப்ஸ்லிப் யானை முகாமில் பயிற்சி பெற்ற யானைப் பாகன்களை வரவழைத்து வெடிகளை வீச வைத்தனர். (கவனிக்கவும் அப்போது கூட கும்கிகள் வரவழைக்கப்படவில்லை), வெடி வீசப்பட்ட நேரத்திற்கு மட்டும் காட்டுக்குள் சிதறியோடின யானைக்கூட்டம் இரண்டொரு நாள் கழித்து பழைய இடத்திற்கே வந்துவிட்டன.

இங்கே யானைக வர்ற போற வழியெல்லாம் அடைச்சுட்டாங்க சாமி. ஒரு பக்கம் ஒரு சாமியார் ஆசிரமம் போட்டிருக்கார். இன்னொருபக்கம் பறவைகள் ஆராய்ச்சி மையம்னு ஒண்ணு இப்போதான் ஆகியிருக்கு. இந்த ரெண்டுமே நூற்றுக்கணக்கான ஏக்கர்ல இருக்கு. இப்ப போதாக்குறைக்கு உயிரியில் பூங்கா அமைக்கிறேன்னு சொல்லி கோயமுத்தூர் முதலாளிகள் 180 ஏக்கர் நிலத்தை வளைச்சு கம்பி வேலி போடறாங்க. அதுல கரண்ட் வக்கிறாங்க. அதனாலதான் யானைக தடுமாறி இப்படி ஆளைக் கொல்லுது. மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் பக்கம் (இங்கிருந்து 40 கிலோமீட்டர்) போக வேண்டிய யானைக இதுக. அங்கெல்லாம் வழி அடைச்சுட்டதால இந்த பக்கம் வந்துடுச்சு போல!'' என்றார் இங்குள்ள ஆதிவாசி சங்க தலைவர் முருகவேல்.

''இப்ப பிச்சைமணிய அடிச்ச யானை கூட வேணும்னே அவனை அடிக்கலை. தண்ணி தேடி தனியா வந்த யானை அது. அங்கிருந்த மின்சார வேலியில ஷாக் அடி வாங்கியிருக்கு. அந்த யானை அப்படி அடி வாங்கிய நேரம். பிச்சைமணியும் வந்திருக்கான். அவன் போறாத நேரம். வெள்ளை வேட்டி -வெள்ளை சட்டை யானைக்கு ஆகாது. கரண்ட் ஷாக்கில் அடிபட்ட ஆத்திரமும் சேர ஒரே தூக்கு. ஒரே மிதி ஆள் காலியாயிட்டான்!'' என்று குறிப்பிட்டார் அவர்.

ஆனைகட்டி என்றாலே யானைகள் வாழும் பகுதி. இங்கே யானைகள் கட்டி போராடித்த காலமும் உண்டு. இந்த ஆனைகட்டியை சுற்றியுள்ள கிராமத்து பாதைகள் எல்லாம் யானைகளின் வழித்தடமாக பூகோள வரைபடத்திலேயே குறிக்கப்பட்டுள்ளன. 1950 ஆம் ஆண்டு வாக்கில் கோயமுத்தூரிலிருந்து அட்டப்பாடி சென்று நிலபுலன்களை வாங்கினவர்கள் பூமியை திருத்தி சோளம், கம்பு, ராகி, வாழை, தென்னைன்னு பயிர் வச்சாங்க. பவானி, சிறுவாணி நதி இங்கே போறதால பூமியும் வளங்கொழிச்சது.

ஆனால் 15 ஆண்டுகளாக (இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப்படி) இங்கே நிலம் வாங்குகிறவர்கள் ஆசிரமம் அமைக்க, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க, விடுதிகள் அமைக்க என பெரிய கட்டிடங்கள் எழுப்பவே வருகின்றனர். மனிதன் பாதையையும், ஜாகையையும் மாற்றியதன் விளைவே இந்த யானை மிதிச்சாவுகளும், பீதிகளும். இது இப்போது மலை கிராமங்கள் அளவில் இருக்கிறது. இதுவே கூடிய விரைவில் நகரங்களுக்கும் பாயும்!'' என்பதை தெளிவுபடவே அப்போதே சொன்னார்கள் இப்பகுதிவாசிகள்.

ஆனால் அதை அப்போது கோவை மாவட்ட வனஅலுவலராக இருந்த அதிகாரி சுத்தமாக மறுத்தார். 'யானை வழித்தடங்கள் மறிக்கப்படவேயில்லை. முந்தைய வருடம் கூட இதே 27 யானைகள் இதே இடத்திற்கு வந்து சென்றன. பிச்சைமணி என்பவர் இந்த ஆண்டு யானை மிதித்து இறந்ததால் விஷயத்தை மீடியா வரைக்கும் கொண்டு போய் பரபரப்பாக்கி விட்டார்கள்!' என்றே சமாளித்தார்.

17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த செய்தியை சேகரித்த போது அந்த அதிகாரி எப்படி சமாளித்தாரோ, அதே சமாளிப்பைத்தான் இப்போதும் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன அப்போது இந்த இடத்தில் இருந்த அதிகாரி இப்போது மிக உயர் அதிகாரியாக ஆகி விட்டார். இப்போது இளைய புதிய அதிகாரி வந்து அமர்ந்து அதே வித்தையில் சமாளிக்கிறார்.

இதில் மிகவும் அதிர்ச்சியான செய்தி. இதே ஆனைகட்டி சுற்றுவட்டாரத்தில் 1997 தொடங்கி 2000 ஆம் ஆண்டிற்குள் 10 பேர் யானை மிதித்து செத்துள்ளார்கள் என்பதுதான். அந்த காலகட்டத்தில் இப்படி இறந்தவர் குடும்பத்துக்கு ஈமச்சடங்குக்கு ரூ. 5 ஆயிரமும், நஷ்ட ஈடாக பிறகு ரூ. 20 ஆயிரமும் அளிக்க அரசு உத்தரவு உள்ளது.

அதைக்கூட வனத்துறையினர் கொடுக்கவில்லை என்பதே இங்குள்ள மலை மக்களின் குற்றச்சாட்டாக இருந்தது. அதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஆட்சியர் பரிந்துரைப்படி பிச்சைமணியின் மனைவிக்கு ரூ. 25 ஆயிரம் அளித்து விட்டோம். மற்றவர்களுக்கு உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை. இதற்கு இறப்பு சான்றிதழ், போலீஸ் முதல் தகவல் அறிக்கை, வாரிசு சான்றிதழ் எல்லாம் வேண்டும். அதை பெரும்பாலும் யாரும் சரியாக கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் ஒருத்தரின் வாரிசு தொகைக்கு பலபேர் வந்து சண்டையிடுகிறார்கள். அதை சரிப்படுத்த முடிவதில்லை!'' என்று கையை விரித்தனர். என்ன கொடுமை இது.

எல்லாம் சரி. இந்த யானை மிதி சம்பவங்களுக்கு முன்பு இதுபோல் எதுவுமே நடக்கவில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நடந்தது. அது கோவையில் அல்ல; நீலகிரியில்... மக்னா வடிவில்... அந்த யானை 17 பேரை கொன்றது என்பது மட்டுமல்ல, அது பிடிபட்டது, கராலில் அடைக்கப்பட்டது, உள்நாட்டு சிகிச்சை மட்டுமல்ல; வெளிநாட்டு சிகிச்சையும் அது பெற்றது, உலக அளவில் அது பேசப்பட்டது எல்லாமே சுவாரஸ்யம் மிக்க அனுபவங்கள். அதற்கு முன்னதாக 16 வருடங்களுக்கு முன்பே காட்டு யானை விரட்டப் போய் அதனிடம் அகப்பட்ட வனத்துறையினரின் த்ரில் அனுபவத்தை கொஞ்சம் பார்ப்போம்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x