Published : 21 Jul 2017 01:13 PM
Last Updated : 21 Jul 2017 01:13 PM

அறம் பழகு: வறுமையில் வாடும் இருவரின் படிப்புக்கு உதவலாமே!

சந்தியாவின் தந்தையும் ஷர்மிளாவின் தந்தையும் தனித்தனியே குடியால் அழிந்தனர். இன்று நிர்கதியாய் நிற்கும் இருவரும் படிக்க உதவலாமே!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலிருக்கும் சிறு கிராமம் அது. அந்தத் தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள். அவர்கள்தான் கார்த்திகாவும், ஷர்மிளாவும். தந்தைக்கு குடிநோய். குடிநோய் அவரை கூடா தொடர்புகளுக்கு கூட்டிச் சென்றது. பாலியல் நோயும் பற்றிக்கொண்டது. வீட்டில் தினமும் ரணகளம். அவரது மனைவி தீவிர மனச்சிதைவுக்குள்ளானார். வீட்டை விட்டு ஓடிவிட்டார் கணவர்.

குழந்தைகளின் படிப்பு பறிபோனது. இருவரும் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கினார்கள். கிடைத்த காசை வைத்து உணவு சமைத்தார்கள். அம்மாவுக்கு ஊட்டிவிட்டார்கள். தாய் கழிப்பறை செல்ல உதவினார்கள், குளிப்பாட்டினார்கள், உடைமாற்றிவிட்டார்கள். அப்போது எட்டும் ஐந்தும் வயதுமான பிஞ்சுகள் இதை எல்லாம் செய்தார்கள் என்பதை நம்ப முடிகிறதா? ஒரு குழந்தைக்கு தாய் செய்ய வேண்டியவை எல்லாவற்றையும் தாய்க்கு செய்தார்கள் இந்தப் பிஞ்சுகள்!

ஒருகட்டத்தில் இவர்களைக் கண்டு இரக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர் தேனியில் இருக்கும் இவர்களின் தாய்வழிப் பாட்டி வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு பாட்டிக்கே சோற்றுக்கு கஷ்டம். பாட்டியுடன் சேர்ந்து வயல் வேலைக்கு பிள்ளைகள் சென்றனர். அம்மாவுக்கு அரற்றல் அதிகமானது. இரும்புச் சங்கிலி போட்டு கட்டி வைத்தார்கள். கூடவே, கணவன் கொடுத்துவிட்டுப்போன நோயும் சேர்ந்து அவரைக் கொடுமைப்படுத்தியது.

இந்த சமயத்தில்தான் நல்லோர் சிலர் கண்ணில் பட்டார்கள் குழந்தைகள். அவர்கள் குழந்தையையும் அந்தத் தாயையும் ஓர் இல்லத்தில் சேர்த்தார்கள். டுடோரியல் பள்ளி மூலம் மூன்றாவது வகுப்பில் இருந்து நேரடியாக எட்டாவது படித்து தேறினார் கார்த்திகா. ஷர்மியும் அப்படியே. அம்மாவால் இல்லத்தில் இருக்க முடியவில்லை. வீட்டுக்கு ஓடிவிட்டார். படுத்த படுக்கையானார். வாரம் ஒருமுறை சென்று பார்த்து வந்தனர் பிள்ளைகள்.

பிள்ளைக்காக காத்திருந்த உயிர்!

இப்படியான சூழலில் படித்துதான் பத்தாம் வகுப்பில் கார்த்திகா 454 மதிப்பெண்கள் எடுத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் பழனிசாமி நேரில் அழைத்துப் பாராட்டினார். காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் பரிசளித்தார். செய்தித்தாள்கள் கொண்டாடின. மறுநாள் அதிகாலை மதிப்பெண் சான்றிதழையும் செய்தித்தாள்களையும் எடுத்துக்கொண்டு தாயை காணச் சென்றன குழந்தைகள்.

அவற்றைப் பார்த்தவர் என்ன புரிந்துக்கொண்டாரோ தெரியவில்லை, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தன் குழந்தை சாதித்துவிட்டாள் என்கிற செய்தியை கேட்பதற்காகவே காத்திருந்ததுபோல அவரது உயிர் அந்தத் தருணத்தில் பிரிந்தது. இடுகாட்டில் தாயின் சிதைக்கு கொள்ளி வைத்துவிட்டு திரும்பினார்கள் குழந்தைகள்.

காலங்கள் உருண்டோடின. தீவிர உழைப்பின் பலனாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்றார் ஷர்மிளா. தேனியில் உள்ள நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த அவர் தற்போது 12-ம் வகுப்பில் 973 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

*

கிட்டத்தட்ட இதே கதைதான் சந்தியாவுக்கும். ஒரே வித்தியாசம், அவரின் தாய் மனப் பிறழ்வோடு உயிருடன் இருக்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பில் 457 மதிப்பெண்கள் பெற்ற சந்தியா, 12-ம் வகுப்பில் 980 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

குடிபோதையால் தன்னையே இழந்த தந்தை, அவரால் பாதிக்கப்பட்ட தாய், விரக்தியுடன் வாழும் குழந்தைகள் என்று முன்பு தாங்கள் சந்தித்த இன்னல்களை இன்னமும் அனுபவித்து வரும் ஏராளமான குழந்தைகளின் நலன் காக்க இருவரும் விரும்பினர்.

இதற்காக ஷர்மிளா மற்றும் சந்தியா ஐஏஎஸ் படிக்க முடிவெடுத்தனர். அதற்காக பி.ஏ. அரசியல் விஞ்ஞானம் (Political Science) படிக்க எண்ணுகின்றனர். படித்துக்கொண்டே குடிமையியல் தேர்வுகளுக்காக பயிற்சி பெற எண்ணும் அவர்களுக்கோ சென்னையில் எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை.

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட அவர்கள் ஏதாவதோரு கல்லூரி வாசலில் கால் கடுக்கக் காத்திருக்கலாம். ஆனால் காலம் கடந்துவிட்டதாய்ச் சொல்கிறார்கள் கல்வியாளர்கள். தவித்து நிற்கிறார்கள் தமிழகத்தின் வித்துகள்!

'தி இந்து' சார்பில் முயற்சிகள்
  • சந்தியாவுக்கும், ஷர்மிளாவுக்கும் சென்னையின் முக்கியக் கல்லூரியில் இடம் கிடைக்க 'தி இந்து' சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  உறுதியான பின்னர் அதுகுறித்த தகவல்கள் பதிவேற்றப்படும்.

மாணவிகள் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பி.ஏ. அரசியல் விஞ்ஞானம் படிக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலான கல்லூரிகளில் இடம் நிரப்பப்பட்டு விட்டன. யாரேனும் முடிந்தால் அவர்களுக்கு சென்னை கல்லூரிகளில் இடம் வாங்கித் தரலாம். படிப்புக்கான செலவைப் பகிர்ந்து கொள்ளலாம்.

மாணவிகளுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 7401297413


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x