Published : 22 Sep 2018 10:54 AM
Last Updated : 22 Sep 2018 10:54 AM

பெரியார் மட்டும் சீர்திருத்தவாதி அல்ல; நான் முதல்வராக வரக்கூடாதா?- தமிழிசை சிறப்புப் பேட்டி

தமிழக அரசியல்வாதிகளில் மிக எளிதில் அணுகக்கூடியவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எத்தனை முறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டாலும் அசராமல் தன் கருத்தை தெரிவிப்பார்.

நாளுக்குநாள் பாஜகவினர் மீதான சர்ச்சைகள் அதிகரித்துக் கொண்டிருக்க, ஒரு பரபரப்பான மதிய வேளையில் தமிழிசை சவுந்தரராஜனிடம் பல கேள்விகளைக் கேட்டோம். எல்லாவற்றுக்கும் தனக்கேயுரிய பானியில் பதிலளித்தார்.

அரசியலுக்கு அப்பால், பாஜகவால் தமிழ்நாட்டில் தினம் ஒரு சர்ச்சை. பெரியார் சிலை உடைப்பு, பெண் பத்திரிகையாளர்கள் மீது கீழ்த்தரமான விமர்சனம், காவல்துறை - நீதித்துறை அவமதிப்பு இவை அனைத்தும் எதேச்சையானதாகத் தெரியவில்லை. இவையெல்லாம் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுகிறதா?

ஆமாம், திட்டமிட்டுதான் நிகழ்த்தப்படுகின்றன. எங்களால் அல்ல, மற்றவர்களால். பாஜகவினர் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அங்கெல்லாம் பிரச்சினைகளை உருவாக்க ஆட்கள் வருகிறார்கள். தமிழிசையையோ, பாஜகவையோ கேள்வி கேட்டால் தாக்குவார்கள் என்ற பிம்பத்தை வேண்டுமென்றே உருவாக்குகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் கதிரைப் பார்த்தேன். அவர் வசிக்கும் இடம் பின்தங்கிய பகுதிதான். வெகுநேரம் இருந்து விசாரித்தேன். ஆனால், இயல்பாக நடப்பதைத் திரித்து, எங்களை சாமானியர்களிடமிருந்து பிரிக்கும் சூழ்ச்சியை திராவிடக் கட்சிகள் நிகழ்த்துகின்றன.

பெண்கள் குறித்து மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான கருத்துகளைப் பதிவு செய்யும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் பற்றி உங்களது தனிப்பட்ட மதிப்பீடு என்ன?

பாஜக தலைவராக இருந்துகொண்டு தனிப்பட்ட முறையில் பதில் சொல்ல விருப்பமில்லை. பெண்கள் பற்றி யார் கீழ்த்தரமான கருத்துகள் சொன்னாலும் அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. தலைவராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்திருக்கிறேன். பலர் பல கருத்தைச் சொல்லும்போது இவர்கள் பேசுவது மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. கட்சி ரீதியாக நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பொதுவெளியில் அவர் பேசுவதை சர்வாதிகாரி போன்று நான் கட்டுப்படுத்த முடியாதல்லவா? அப்படிச் செய்வது நல்லதும் கிடையாது.

25 ஆண்டுகள் ஆகப்போகிறது நீங்கள் அரசியலுக்கு வந்து. உங்கள் தந்தை காங்கிரஸ் மூத்த தலைவர். நீங்கள் காங்கிரஸை அழிப்பதே லட்சியம் என்கிற கட்சியில் இருக்கின்றீர்கள். உங்கள் தந்தையின் கனவுக்கும், உங்கள் கனவுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்?

என் தந்தை தலைவராக இருந்தது பழைய காங்கிரஸ். இப்போதுள்ள காங்கிரஸ் மக்களுக்கானது அல்ல. தேசியம் எனக்குப் பிடிக்கும் என்பதால், மாநிலக் கட்சிகளில் சேரக் கூடாது என்றிருந்தேன். தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் எனச் சொல்லி வளர்த்தது என் அப்பாதான். ஆனால், வெளிநாடுகளில் மருத்துவ வசதியைப் பார்த்த போது இந்தியாவில் அப்படி இல்லையே என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது எனக்கு காங்கிரஸ் மீது கோபம் வந்தது. எதிர்க்கட்சியே இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்த காலமெல்லாம் இருந்தது. நான் சிறுமியாக இருந்தபோது 1971-ல் ‘வறுமையை ஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி முழக்கமிடுகிறார். ஆனால், அப்போது 40 சதவீத மக்கள் ஒருவேளை உணவுதான் உண்டனர் என்பது புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதனால், காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை.

இப்போது மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்களால் உலக நாடுகளுக்கு முன் இந்தியா உயர்ந்து நிற்கிறது. அப்போது, இந்தியா பஞ்ச, பரதேசிகளின் நாடு. இந்த எண்ணத்தில் இருந்தபோதுதான் வாஜ்பாய் ஒரு கூட்டத்தில் கிராமப்புற வளர்ச்சியை முன்வைத்துப் பேசினார். அப்போதுதான், எல்லோருக்குமான வளர்ச்சியை பேச ஒரு கட்சி இருக்கிறது என அறிந்தேன். பாஜகவில் நான் மதத்தைப் பார்க்கவில்லை, மனிதத்துவத்தைத் தான் பார்க்கிறேன். தமிழகத்தில் தேசியம் தழைத்தோங்க வேண்டும். இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற என் கனவை பாஜக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், இந்தியா முழுவதும் பாஜக வெறுப்பு என்பது மிகப்பெரும் அளவில் வளர்ந்திருக்கிறது. கட்சி - போட்டி - ஜனநாயகம் என்பதைத்தாண்டி நிரந்தரமாக ஒரு பெரும் மக்கள் திரளிடம் வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது பாஜக. பாஜக வளர்ச்சிக்குப் பிறகு சமூக இயக்கத்தில் வெறுப்பு பரவியிருப்பதாக ஆய்வுகளே நடத்தப்படுகின்றன. வெறுப்பு மட்டும்தான் உங்கள் ஜனநாயகமா?

இந்த வெறுப்பு செயற்கையாக கொண்டு வரப்படுகின்ற வெறுப்பு. பாஜக இன்று 19 மாநிலங்களில் நேரிடையாகவும், 2 மாநிலங்களில் கூட்டணியிலும் ஆட்சி புரிகிறது. மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 4 மாநிலங்களில் தான் ஆட்சியில் இருந்தது. வெறுப்பு என்றால் மக்கள் எப்படி திருப்பித் திருப்பி வாக்களித்திருப்பார்கள்? இடதுசாரிகள் உள்ளிட்டோர் தான் இந்த வெறுப்பை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அடிக்கப்படுகிறார்கள். 8 வயது ஆசிஃபாவை பாலியல் பலாத்காரம் புரிந்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்துகிறது. இன்னொருபக்கம் பிரதமர் பெண் குழந்தைகளை மதிப்போம், செல்ஃபி வித் பேட்டி என்கிறார். ஆசிஃபா இந்தியாவின் மகள் இல்லையா? மோடியின் இந்தியாவில் ஆசிஃபாக்களுக்கு இடமில்லையா?

நிச்சயமாக, ஆசிஃபாக்களும் இந்தியாவின் மகள்கள்தான். ஆனால், கன்னியாஸ்திரிகள் பாதிரியார்கள் மீது பாலியல் புகார் அளிக்கிறார்களே, போராட்டம் நடத்துகிறார்களே. அவர்கள் இந்தியாவின் பெண்கள் கிடையாதா? ஆசிஃபாக்களை முன்னிறுத்தும் அளவுக்கு ஏன் கிறிஸ்தவப் பெண்களை முன்னிறுத்தவில்லை. அதனால்தான் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று சொல்கிறேன். இதற்காக தமிழ்நாட்டில் எங்கு விவாதம் நடந்தது? தலித்துகள் மீது வன்முறை என்கிறீர்கள். எங்கள் கட்சியிலேயே தலித்துகள் உள்ளனர். குடியரசுத் தலைவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்?

மாற்றுக்கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

முஸ்லிம் தலைவர், இந்து தலைவர் என்ற கண்ணோட்டமே பாஜகவுக்கு இல்லை. தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லை, சில தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருக்கின்றனர். எங்கள் கட்சியில் நக்வி, ஷாநவாஸ் உள்ளிட்டவர்கள் உள்ளனர். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் முஸ்லிம்தானே. இஸ்லாமியர்கள் என்றால் எதுவும் செய்யக்கூடாது என்ற எண்ணமில்லை. அரபு நாடுகளின் அதிபர்கள் பிரதமருடன் இணக்கமாக உள்ளனர். மாற்றுக் கட்சியை சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுடன் நான் பழகியதில்லை.

முஸ்லிம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை எனக் கூறுகிறீர்கள். இந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்கள் மீது வலதுசாரி அமைப்புகளால் நிறைய இடங்களில் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது. அந்த வலது அமைப்புகளை எப்படி பார்க்கின்றீர்கள்?

இஸ்லாமிய மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வாதத்தையே நான் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து இந்தப் பிரச்சினை உள்ளது. மோடி வந்த பிறகுதான் இவை நடைபெறுவது போன்று தோற்றம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறவில்லையா? மாட்டிறைச்சியால் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறுவது பூதாகரமாக்கப்படுகிறது.

மாட்டிறைச்சியால் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் உத்தரப் பிரதேசத்தில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். காஷ்மீரில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் கல்லெறி சம்பவத்தால் தமிழர் ஒருவர் இறந்தார். இதனை ஏன் பேச மறுக்கிறோம்? வலது அமைப்பைச் சேர்ந்த எல்லோருமா வன்முறையில் ஈடுபடுகிறார்கள்? யாரோ ஒருவர் பசு வதைக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் வலதுசாரி, பாஜக என முத்திரை குத்தப்படுகிறது.

இட ஒதுக்கீட்டால் பலன்பெற்றவர்களில் 90% பேர் இந்துக்கள். இட ஒதுக்கீட்டு விரிவாக்கத்துக்காக இன்றும் இந்தியா முழுவதும் போராடிக்கொண்டிருப்பவர்கள் இந்துக்கள். இந்த இந்துக்களுக்காக பாஜக செய்தது என்ன? அல்லது இவர்கள் பாஜகவின் இந்துக்கள் இல்லையா?

மறுபடியும் சொல்கிறேன். நாங்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பிரிக்கவில்லை. ஒட்டுமொத்த மக்களாகப் பார்க்கிறோம். கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் நடத்துவது ஒருவிதமாகவும், இந்துக்களை நடத்துவது ஒருவிதமாகவும் இருக்கிறது. இதற்கு, ஸ்டாலினும் வீரமணியும் பதில் சொல்லட்டும். ஏன் தமிழ்நாட்டில் ராம ரத யாத்திரை நடத்தக்கூடாதா?

செங்கோட்டையில் விநாயகர் சிலையை சேதப்படுத்துகிறார்கள். விநாயகரைத் தாக்கினால் எதிர்வினை அதிகமாகத்தான் இருக்கும். ஏன் இங்குள்ள கட்சிகள் தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இந்துக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்துக்களை ஒதுக்க இவர்கள் யார்? இந்துக்களின் வாக்குகள் மட்டும் இவர்களுக்கு வேண்டும்.

இந்துக்களைப் பாதுகாக்க நாங்கள்தான் இருக்கிறோம். இந்து மதத்துக்கு ஆபத்து என்கிறீர்கள். இந்து மதத்தைக் காப்போம் என்கிறீர்கள். ஆனால், இந்து மத மூடநம்பிக்கைகளால் பலர் ஏமாந்துபோகின்றனர். இந்து மதத்தை பலர் வியாபாரமாகப் பயன்படுத்துகின்றனர். இந்து மதப் பாதுகாப்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு, மத வணிக ஒழிப்புக்கு இடமில்லையா? அதற்காக நீங்கள் செய்தது என்ன?

என் மதம் சிறந்ததென நான் சொல்கிறேன். அதற்கு அர்த்தம், நான் மற்ற மதங்களைக் குறை கூறுகறேன் என்பதல்ல. தமிழகத்தில் போலி மதச்சார்பின்மையாளர்கள் அதிகம் உள்ளனர். இந்துக்களுக்கு மரியாதை கொடுக்காமல், அவர்களை நிந்திப்பதுதான் மதச்சார்பின்மை என நினைக்கின்றனர். இதை நாங்கள் எதிர்க்கிறோம். நாங்களே அவர்கள் பாதுகாப்பு பற்றிப் பேசவில்லையென்றால் வேறு யார் பேசுவார்? சசிகுமார் கொலையைக் கண்டிக்க மாட்டார்கள். யாரும் கேட்கவில்லையென்றால் யார்தான் கேட்பது? போலி மதச்சார்பின்மையை வெளிக்கொணர்ந்து உரக்கச் சொன்ன குரல் பாஜகவினுடையது.

வீரமணி உங்களை அன்பு மகள் என்கிறார். நீங்கள் ஸ்டாலினை விளிக்கும்போதுகூட அண்ணன் ஸ்டாலின் என்கிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியின் மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள்கூட மிகக்கீழ்த்தரமாக மேடைகளில் பேசுகிறார்கள். இதில் எது உண்மையான பாஜக? அல்லது தமிழிசையை பாஜக அடிதாங்கும் கேடயமாக பயன்படுத்துகிறதா?

கேடயத்தை நாங்கள் எதிரிகளை வீழ்த்தத்தான் பயன்படுத்துவோம், என்னை யாரும் கேடயமாகப் பயன்படுத்தவில்லை. கட்சி ரீதியாக எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. என் கட்சியில் உள்ள அனைவரும் மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர். ஸ்டாலின் அண்ணன் உட்பட மற்ற அனைவருக்கும் நான் மரியாதை கொடுக்கிறேன். மரியாதை கொடுத்து பழக்கப்பட்டவர்கள் எங்கள் கட்சியினர்.

பெரியார் பற்றி உங்களது மதிப்பீடு என்ன.?

பெரியார் வந்த பின்புதான் பெண்களுக்கு உரிமை கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ராமன், குகன் யார்? பெரியார் மட்டும் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவில்லை, அவரது கடவுள் மறுப்புக் கொள்கை எனக்குப் பிடிக்காது, ஒப்புதல் இல்லை. இந்து மதத்தில் அதை விடச் சீர்திருத்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறோம்.

பெரியாரிய கொள்கைகளில் நான் எந்தவித்திலும் உடன்பட்டதில்லை. ஆனால், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டால் நான் கண்டிக்கிறேன். விநாயகர் மீது கல்லெறிந்தால் தமிழக அரசியல் கட்சிகள் கண்டிப்பதில்லையே, ஏன்?

ஒருபக்கம் தமிழ்நாட்டில் ஆட்சிகலைந்துவிடும் என எல்லா எதிர்க்கட்சிகளும் சொல்கின்றன. பாஜகவோ 2021-ல் தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்கிறது. 2021 வரை தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கக்கூடாது என்பதுதான் பாஜகவின் திட்டமா?

ஆமாம். நியாயப்படி 2021-ல் தான் தேர்தல். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது அதிமுகவாக இருக்கட்டும், திமுகவாக இருக்கட்டும். கடந்த காலங்களில் ஆட்சியைக் கலைப்பதில் காங்கிரஸ் ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கிறது. திமுக ஆட்சியை அப்போது கலைத்தது காங்கிரஸ் தான்.

அமித் ஷா தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாகிவிட்டது என்கிறார். தமிழ்நாட்டில் அடிக்கப்படும் கொள்ளையில் மோடிக்கு பங்கு செல்கிறது என பகிரங்கமாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஊழலை பாஜக ஒப்புக்கொள்கிறது. ஆனால், அந்த ஊழலில், விதிமீறல்களில் தங்களுக்குப் பங்கில்லை எனவும் காட்டிக்கொள்ள விரும்புகிறது. அப்படித்தானே?

2ஜி வழக்கில் காங்கிரஸின் கொள்ளையில் திமுக எப்படி பங்கெடுத்தது என்பதை அனைவரும் அறிவோம். 2ஜி இன்னும் முடியவில்லை. மேல்முறையீடு வழக்கு இருக்கிறது. ஸ்டாலினுக்கு பங்கு கொடுத்து பழக்கம் போலிருக்கிறது. அதனால் தான் அப்படிச் சொல்கிறார். தமிழ்நாட்டில் தான் பங்கு வாங்க வேண்டும் என எங்களுக்கென்ன தலையெழுத்தா? எத்தனையோ மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறோம். எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டே இல்லை. அதனால், எங்கள் மீதுள்ள நற்பெயரை கெடுக்க ஊழல் குற்றச்சாட்டை சொல்லி வருகிறார் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சி பற்றி உங்கள் உண்மையான மதிப்பீடு என்ன?

அவர்கள் செய்யும் நல்லதைப் பாராட்டுகிறோம். ஆனால், ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் பல நல்ல வளர்ச்சித் திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததால் 10 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உதய் திட்டத்தில் சேர்ந்ததால், 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம். நிறைகளும் உள்ளன. குறைகளும் உள்ளன. குறைகள் களையப்பட வேண்டும்.

உங்களின் நம்பிக்கைக்குரிய பெண் அரசியல்வாதி யார், ஏன்?

என் நம்பிக்கைக்குரிய பெண் அரசியல்வாதி நான் தான். (சிரிக்கிறார்)

நீங்கள் முதல்வராக வர வேண்டும் என ட்விட்டரில் ஒருவர் சொன்னதை வழிமொழிவது போன்று ரீட்வீட் செய்திருந்தீர்களே...தமிழக அரசியலில் உங்கள் லட்சியம் என்ன?

ஏன் நான் முதல்வராக வரக்கூடாதா? தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. முதல்வர் வேட்பாளரை கட்சி முடிவு செய்யும்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x