Last Updated : 05 Jun, 2019 12:16 PM

 

Published : 05 Jun 2019 12:16 PM
Last Updated : 05 Jun 2019 12:16 PM

தெருவில் எச்சில் துப்பாம இருப்போமே..!’’ - இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

சாலையில், உங்களுக்கு முன்னே பைக்கில் சென்றுகொண்டிருப்பவர், தடக்கென்று லேசாகக் குனிந்து, பொளிச்சென்று எச்சிலைத் துப்புவார். பான்பராக் எச்சில்... கவனித்திருக்கிறீர்களா? ஒரு பேப்பரை, மக்காத காகிதத்தை சர்வ அலட்சியமாக சாலையில் வீசுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்போதெல்லாம் என்ன தோன்றும் உங்களுக்கு?

’நாமளும் நல்லாருக்கணும்; நம்மளைச் சுத்தி இருக்கறவங்களும் நல்லாருக்கணும்’ என்று சொல்லிக்கொண்டிருந்த காலம் உண்டு. இப்போது... ’நாம மட்டும் நல்லாருந்தாப் போதும். சுத்தி இருக்கறவங்களைப் பத்தியெல்லாம் பாத்துட்டிருக்கமுடியாது’ என்கிற மனோபாவம் வந்துவிட்டது. வெகுமுக்கியமாக, சுற்றுச்சூழல் குறித்தும் அதன் தூய்மை குறித்தும் எந்தக் கவலையுமில்லாமல்தான் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

’நாம நல்லாருந்தாப் போதும்’ என்பதெல்லாம் இருக்கட்டும். ‘சுற்றுச்சூழல் நல்லா இருந்தாத்தான் நாம நல்லாருப்போம்’ என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வீடு இருக்கும் பகுதி, அந்தப் பகுதி மொத்தமும் இருக்கிற தெரு, தெருவையெல்லாம் தாண்டி விஸ்தரித்திருக்கிற ஊர், ஊரையும் கடந்து செல்கிற பைபாஸ் சாலைகள், அந்த பைபாஸ் சாலைகளின் ஓரங்களில் காற்றிலாடிக்கொண்டிருக்கிற குப்பைகள், பாலிதீன் பைகள், திங்கட்கிழமைகளில் கொட்டிக்கிடக்கிற கறி மற்றும் கோழியின் கழிவுகள், அந்த நாற்றங்களும் அழுகிய வாசனைகளும் காற்றில் கலந்து நான்கு நாட்களுக்கு அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம் முகத்தில் அறையும். பிறகு, அடுத்த இரண்டுநாளில், மீண்டும் கறிக்கடைகள், கோழிக்கடைகள்.

அசைவ சிக்கல் என்றில்லை. மார்க்கெட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில், அழுகிய தக்காளி மற்றும் முட்டைகோஸ் வாசனைகளை நிரந்தரமாக உணரலாம். செயற்கை உரமூட்டப்பட்ட காய்கறிகளின் வீரியம் இந்த அழுகலில், இன்னும் அதிகமாகிப் பரவும் என்கிறார்கள் வேளாண் ஆய்வாளர்கள்.

பாக்கெட் பால் கவர்கள் பல இடங்களில் கிடக்கின்றன. சிகரெட் அட்டைகளும் புகையிலைக் கவர்களும் பத்தடிக்கு நாலு மண்ணில் புரண்டிருப்பதைப் பார்க்கலாம். போதாக்குறைக்கு, எதுகுறித்த கவலையோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல், வெகு அலட்சியமாக சாலையில் துப்பிக்கொண்டே இருக்கும் மனிதர்களின் தடங்களை எச்சில் கறைகள் காட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. ‘இதெல்லாம் ஒரு தப்பா?’ என்று கேட்பவர்களுக்கு, அந்நியன்கள்தான் ‘கருடபுராண’ தண்டனையை விளக்கவேண்டும்.

மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்று அலுத்துக் கொள்கிறோம். இன்னொரு பக்கம், நிற்கின்ற மரங்களில் நிழல்தான் இருக்கிறது. ஈரப்பதமே இல்லை என்று வருந்துகிறோம். மழையின் அளவு குறைந்துகொண்டே வர, வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்க, சுற்றுச்சூழல், நம் குப்பைகளால் இன்னும் இன்னும் கோமா ஸ்டேஜுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் உணரவே இல்லை.

 

இந்த பூமியை அன்னைக்கு நிகராகச் சொல்லுகிறோம். அன்னை பூமி, தாய் மண் என்றெல்லாம் வாய்வார்த்தையாகச் சொல்லுகிறோம். ஆனால் சுற்றிலும் பரந்துபட்டு இருக்கிற பூமியையும் இயற்கையையும் நாம் எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறோம். பூமியைக் கழிவுகளாலும் திடக்கழிவுகளாலும் தந்து லேயர்லேயராக நிரப்பிக்கொண்டே இருக்கிறோம்.

நகரங்களை விஸ்தரிப்பதாகச் சொல்லி, அருகருகே இருந்த ஏரிகுளங்களை வீடுகளாக்கிவிட்டோம். சாலைகளைப் பெருக்குகிறோம் என்று சொல்லி, கிராமங்களின் விளைநிலங்களை தார்ச்சாலைகளாக்கிவிட்டோம். இன்றைக்கு காடுகளின் அளவு சுருங்கிச்சுருங்கி, கான்கிரீட் காடுகளின் நீள அகலங்களை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறோம்.

தெருவுக்கு நாலு குப்பைத்தொட்டிகள். ஆனால் குப்பைத்தொட்டியின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பத்தடியிலிருந்தே குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெகிழிப் பை என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பைகளை அவசரம் அவசரமாக ஒழிக்கப் புறப்பட்ட சந்தோஷத்தில் இருந்தால், இப்போது அங்கேயும் இங்கேயுமாக பிளாஸ்டிக் பைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

வாகனப்புகையாலும் நிகோடின் புகையாலும் அழுக்கு நகரங்களாகவும் இழுக்கு பூமியாகவும் மாறிவிட்ட சுற்றுச் சூழலை நாம் பொருட்டாகவே பார்ப்பதில்லை. இதில் பட்டாசுப் புகையையும் சேர்த்துக்கொண்டுவிடுகிறோம்.

நாம் வாங்குகிற ஒருகிலோ பொருளில், 10 கிராம் அளவுக்கு மக்காத குப்பை இருக்கிறது. இந்த 10 கிராம், மண்ணில் மக்கிப் போக பல நூறு ஆண்டுகள் ஆகும் என வருத்தத்துடன் சொல்லுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கடந்த வருடங்களில், எலெக்ட்ரானிக் குப்பைகளும் அதிகரித்துவிட்டன. யூஸ் அண்ட் த்ரோ மனோநிலைகள், அந்தப் பொருட்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். தூக்கியெறிந்துவிட்டு புதுசு வாங்கிக்கொள்கிறோம். இந்த எலெக்ட்ரானிக் குப்பைகள், சுற்றுச் சூழலை பாதிப்பது குறித்து ஆழமாக யோசித்துப் பார்த்தால், இயற்கையை அழிக்கும் அதன் பயங்கர வீரியம் கண்டு விக்கித்துப்போவோம்.

மக்கும் குப்பை பற்றி கவலைப்படவேண்டாம். மக்காத குப்பையைப் பற்றி கொஞ்சம் கவனம் தேவை.

நடுரோட்டில், பொளிச்பொளிச்சென எச்சில் துப்புவதை நிறுத்துவதில் இருந்தே, சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தொடங்குவோம்!

- இன்று (5.6.19) உலக சுற்றுச்சூழல் தினம்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x