Last Updated : 14 Mar, 2018 10:50 AM

 

Published : 14 Mar 2018 10:50 AM
Last Updated : 14 Mar 2018 10:50 AM

சேலத்தில் ஒரு ‘போதி சுவர்’

சே

லத்தின் முக்கிய இடங்களில் உள்ள சில சுவர்களில் தன்னம்பிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. புது புது தத்துவங்களோடு இன்று நேற்றல்ல 25 ஆண்டுகளாக அவை மிளிர்கின்றன. இந்த சுவர் வார இதழுக்கு (வாரம் தோறும் செவ்வாய்கிழமை) ‘எம்எம்எம்’ கார்னர் என்பது பெயர்.

இந்த எம்எம்எம் கார்னர் சுவர்களில் தன்னம்பிக்கை ஊட்டும் வாசகங்கள், தத்துவங்கள், மூதுரை கருத்துக்கள், ஞானிகளின் போதனை உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். சேலத்தின் முக்கியமான 32 இடங்களில் இந்தச் சுவர்கள் உள்ளன. இதில் இடம்பெறும் தன்னம்பிக்கை வாசகங்களை படிக்காதவர் பாக்கி இருக்க முடியாது.

இதை இடைவிடாமல் எழுதி வருபவர் பசுபதிநாதன். இவரது தந்தை அர்த்தணாரி, சுதந்திர போராட்ட வீரர். ராஜாஜியுடன் சேர்ந்து உப்பு சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு அலிகார் சிறையில் ஒன்றரை ஆண்டு சிறைவாசம் அனுபவித்தவர். இந்திரா காந்தியிடம் தாமரை பட்டம் பெற்றவர்.

நாட்டுக்காக உழைத்தவரின் வாரிசான நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 1993-ல் சேலத்தின் 11 இடங்களில் மருத மலை முருகன் (எம்எம்எம்) கார்னர் என்ற குறியீடுடன் தன்னம்பிக்கை வாசகங்களை எழுத ஆரம்பித்தார் பசுபதிநாதன். சாலையில் சென்றவர்கள், நின்று படிப்பதை பார்த்ததும், உற்சாகமான அவர் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். இதோ 25 ஆண்டுகளை கடந்து இன்னமும் எம்எம்எம் சுவர் உயர்ப்புடன் உள்ளது.

பசுபதிநாதன் நம்மிடம் கூறும்போது, “மக்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக இப்போது 32 சுவர்களில் எழுதி வருகிறேன். இதற்கு இன்னொரு பெயர் ‘போதி சுவர்’. இதை யாரும் அழிப்பதோ இதன்மீது போஸ்டர் ஒட்டுவதோ இல்லை. இதில் இருந்தே சுவருக்கு உள்ள வரவேற்பும் மரியாதையையும் அறியலாம்” என்கிறார் பெருமையுடன்.

இதுவரை 1316 தத்துவங்களை எழுதி இருக்கிறார். எவ்வித பிரதிபலனும் இல்லாமல், சொந்த செலவில் இவர் இதனை செய்வதுதான் கூடுதல் சிறப்பு. முகநூலில் எம்எம்எம் கார்னர் பகுதிக்கு 23 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர். ‘எம்எம்எம் கார்னர் கூட்டுக் குடும்பம்’ என்ற வாட்ஸ்-அப் குழுவும் உள்ளது. எழுதுவது சுவரில்தான் என்றாலும் பசுபதிநாதனும் ஒரு எழுத்தாளரே! தொடர்ந்து எழுத வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x