Published : 02 Mar 2018 03:35 PM
Last Updated : 02 Mar 2018 03:35 PM

யானைகளின் வருகை 137: பீமன் வளர்த்த வானம்பாடி மகன்

கோயில் யானைகளையோ, தெருவில் சென்ற யானையையோ அப்பாவும், அம்மாவும் காட்டியதாக ஞாபகம். 'அதுதான்டா யானை. அது நம்மை மிதிச்சா நம்ம சட்னிதான்!' அதுதான் எனக்குள் ஏற்படுத்தப்பட்ட முதல் அச்சம். 'சத்தியமங்கலம் காட்டுல விறகு பொறுக்கப்போன உன் அத்தை ஒருத்தி யானை மிதிச்சுத்தான் செத்தா!' அப்பா அப்போது சொன்னது முதல் அச்சரம். 'அவ எதுக்கு யானைக் காட்டுக்குள்ளே விறகு பொறுக்கப் போனாள்னு வேண்டாம்?' அம்மாவின் எதிர் கேள்வி. இது ஆரம்ப கால காட்டு யானைக்கான வியாக்கியானம். எனக்கு இப்படி.

இந்த இடத்தில் நான் பெற்ற குழந்தைகளை எண்ணிப் பார்க்கிறேன்.

மூத்தவள் ரோகிணிக்கு அப்போது மூன்று வயதிருக்கும். கல்கி விடுமுறை மலரில் என் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதே புத்தகத்தில் அங்கங்கே கண்கவரும் வண்ணப்படங்கள். அதில் ஒரு படம் பெரிய கொம்புள்ள யானை. இன்னொரு படத்தில் மரமேறியபடி மொசுமொசு வெள்ளை முடியுடன் கருவிழிகளால் உறுத்துப்பார்க்கும் கருங்குரங்கு. அதை காட்டிக் காட்டி பெண்ணுக்கு கற்பனையில் விதவிதமாகக் கதை சொல்லுவேன். நான் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினால் போதும். அறைக்குள் இருக்கும் அந்தப் புத்தகத்தை தூக்கி வந்துவிடுவாள் மகள். அதில் யானை படம் உள்ள பக்கத்தையும், குரங்கு உள்ள பக்கத்தையும் திருப்பி திரும்பத் திரும்ப பழைய கதையையே சொல்லுமாறு சொல்லுவாள்.

அவளுக்கு அந்த வயதில் குரங்கு என்று சொல்ல வராது. 'மொனங்கு' என்றே சொல்லுவாள். வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கும். ஆதலால் இந்தப் புத்தகத்தை 'ஆனை புத்தகம்' என்றே மழலையில் சொல்லி புத்தகத்தை தூக்க முடியாது யானையையே தூக்கி வருவது போல் தூக்கி வருவாள்.

அந்த மாதிரியான குழந்தைப் பருவத்தில் நான் யானையை எப்படி கற்பிதம் செய்து கொண்டிருந்தேன் எனத் தெரியாது. அதை என் அப்பா அம்மா சொல்லவுமில்லை. நான் கேட்டுக் தெரிந்து கொள்ளவுமில்லை.

நான் முதன் முதலில் யானையைப் பார்த்த நினைவு சாம்பல் பூத்த கனவு போல் உள்ளது. எனது சொந்த ஊர் ஒண்டிப்புதூரில் திருச்சி சாலையில் ஒரு கோயில் மணி ஒலிக்க யானை சென்ற காட்சி பாகன் அதன் மீது அமர்ந்திருக்க, ஐந்தாவது வகுப்பு மாணவர்களான நாங்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்தோம்.

பாவாடை சட்டை சிறுமியாய் என் அக்கா. கூடவே அவள் தோழிகளும். யானை போட்ட சாணத்தை மிதித்தால் நன்றாக படிப்பு வரும் என்று யாரோ சொன்னார்கள். அதற்காக ஓடி, ஓடி யானை போட்ட சாணத்தை மிதித்துக் கொண்டிருந்தார்கள். என்னையும் என் அக்கா இழுத்துப் போய் யானை சாணத்தை மிதிக்க வைத்தது மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. பசுஞ்சாணத்தைப் போல இல்லாமல் வைக்கோல் மஞ்சியும், சோளத்தட்டும் அரைகுறையாய் அரைத்தது போல் பிஞ்சுக் கால்களை குத்தும் சாணம். இதே செயலை பள்ளி மாணவ-மாணவிகள் பல காலங்கள் செய்வதை கண்ணுற்றிருக்கிறேன். அவர்கள் பாஸாகி மட்டுமல்ல, பெயிலான காட்சிகளையும் கூட கண்டிருக்கிறேன். 'யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே!' பழமொழியை தமிழம்மா பாடத்தில் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம், 'யானை வரும் முன்னே; சாணமிதி நடக்கும் பின்னே!' என்று நானே கற்பிதம் கொள்ளும் அளவுக்கு இந்த நினைவுகள் எனக்குள் ஊறிப்போயின.

அதன் நீட்சி போல் எப்போதோ மருதமலை கோயிலில், பழநி மலையில் 10 காசு அதன் துதிக்கையில் கொடுக்கும் போது ஸ்பரிசித்த நியாபகம். தலையில் தும்பிக்கையை அது வைக்கும் போது பத்து கிலோ எடையை வைத்தது போல் கழுத்து ஒரு ஆட்டம் ஆடி நிற்கும். அப்புறம் காந்திபுரம் வஉசி மைதானத்தில் சர்க்கஸில், சிங்காநல்லூர் கூத்தாண்டை கோயில் திருவிழாவில், மாரியம்மன் கோயில் மிருகக்காட்சி சாலையில் என யானை அடிக்கடி பழகு பொருளானது. அப்போதெல்லாம் யானை ஒரு கொடூரமான விலங்கு என்ற நினைப்பே எங்களுக்கு இருந்ததில்லை. யானை ஒரு பிரமிப்பான மிருகம்; வித்தை காட்ட வல்லது; அறிவுக்கூர்மையானது என்பது மட்டும் நினைவில் நின்றது.

அதையெல்லாம் விட அந்தக்கால சினிமா. அந்தக் காலத்தில் அவ்வளவு சுலபமாய் சினிமாவிற்கு கூட்டிச்சென்று விட மாட்டார்கள். சிவாஜி கணேசன் படம் ஒப்பாரி வைக்கிற அளவு கண்ணீர் வருகிற படம் என்றால் மட்டும் அம்மாவும், அக்காவும் கூட்டிச் செல்வார்கள். எம்ஜிஆர் படம் என்றால் ரொம்ப சிரமம். ஏனென்றால் அதில் நடிகைகள் கவர்ச்சி(?!) உடையில் வருவார்களாம். புள்ளைங்க கெட்டுப் போகும் என்பாள் அம்மா.

அந்த சமயத்தில்தான் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்!' என்ற படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. மூன்றாம் வகுப்போ, நான்காம் வகுப்போ படித்த காலம். அப்போது ராதாராணி தியேட்டரில் தரை டிக்கெட் வெறும் நாலணாதான். அதற்கே காசு இருக்காது. தனியாகவும் அனுப்ப மாட்டார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கறிக்கடை முனியன் மகன் அந்த படத்தை பல முறை பார்த்து வந்து விட்டான். அதைப் பார்த்து வந்த அவன் அதோடு நிற்க மாட்டான். அதன் கதையை திரைப்படம் போலவே சொல்லுவான். அதைக் கேட்கக் கேட்க ஆசையாக இருக்கும்.

எப்படியாவது அந்த படத்திற்கு போயே தீர வேண்டும் என்று மனசு ஏங்கும். அதே சமயத்தில் பள்ளிக் கூடத்திலும் கூட சில பசங்க அந்த படத்தை பார்த்து வந்து கதையளந்ததாக நியாபகம். அந்த படத்திற்கு போகலாம் என்று அம்மா முடிவு எடுத்த நேரம். படத்தை எடுத்து விட்டு வேறு படம் போட்டு விட்டார்கள். ஆனாலும் அதன் கதை கேட்டுக்கேட்டு அதிலேயே ஒன்றிப்போனது மனசு. என்றாலும் அதில் ஒலிக்கும் பாடல் வரிகள் இன்னமும் என் நெஞ்சம் முழுக்க ரீங்காரமிடும். 'ஜாம் ஜாம் ஜாமென்று சந்தோஷமா. நீ தளிர் நடை போடடா ராஜ பீமா. தாயில்லா பிள்ளை போல காடு கிடக்கு. அதை தாலாட்ட வானிலே மேகம் இருக்கு... வாயில்லா ஊமையாய் இலைகள் இருக்கு. அதை ஆட விட்டு பேச வைக்க தென்றல் இருக்கு...!' இப்படியொரு பாடல்.

'ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேல அம்பாரி. ராஜாவோட கூட வந்தா ராணி பொண்ணு சிங்காரி. யானை, புலி, சிங்கம் பார்க்க காட்டுக்குள்ளே சவாரி..' என இன்னொரு பாடல்.

இந்தப் பாடல்களை அப்போது மைக்செட்டில் கேட்டுக் கேட்டு, பாட்டுப்புத்தகத்தில் படித்துப் படித்து அடிபிறழாமல் பாடிக் கொண்டு திரிந்திருக்கிறேன். யானைகளைப் பற்றி பேசும்போதும், எழுதும்போதும், அதனுடனான அனுபவத்தை அனுபவிக்கும் போதும் இந்தப் படம் என் நினைவில் வராமல் இராது. இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது இதற்காகவே அந்த படத்தை கூகுளில் தேடி 'யூ ட்யூப்' வழியே பார்க்கிறேன். அப்படியே கண்கள் பனித்து விடுகிறது. என்ன அழகு. என்ன நேர்த்தி.

1971-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். ஜெமினி கணேசன், மாஸ்டர் பிரபாகர், சிறுமியாக ஸ்ரீதேவி, கே.வி. மகாதேவன் இசை, கவிஞர் கண்ணதாசன் பாடல்கள். அந்தக்காலத்திலேயே யானைகள், சிறுத்தை, மலைப்பாம்பு, இணைசேரும் பாம்புகள், புலி என வைத்து திரைக்கதை அமைத்து என்னமாய் படம் பிடித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் இல்லை. அனிமேஷன் கிடையாது. சினிமா தொழில்நுட்பத்தில் இன்றைய கால நவீனத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட அன்றைக்கு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக காடுகளின் நிலை, பழங்குடிகளின் வாழ்க்கை (அந்தக் கால சினிமா லாஜிக்கை விட்டு விட்டு பார்த்தால்) எல்லாவற்றையும் விட சூழல், கானுயிர்களின்பால் அக்கறை கொண்ட இத்தகைய திரைப்படம் அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் கூட இல்லையோ என்று சந்தேகப்படும் அளவு படமாக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிசயப்படாமல் இருக்க முடியவில்லை.

ஏழெட்டு வயது கூட நிரம்பாத சிறுவன் தினகரன். அவன் வீட்டில் ஒரு பெரிய கொம்பன் யானை. அதனுடன் ஒரு பெண்ணும் ஆணும். அந்தப் பெண்தான் தினகரனின் தாய் வானம்பாடி. அவள் குழந்தையாய் இருக்கும்போது ஒரு ரயில் விபத்தில் தாய் தந்தையர் மற்றும் உறவினர்கள் இறந்து விடுகின்றனர். அந்த ரயிலில் அனாதையாய் அழுது கொண்டிருந்த குழந்தையான அம்மா வானம்பாடியை பீமன் என்ற யானையை வைத்திருக்கும் காட்டுவாசி ஒருவர் எடுத்துப் போய் வளர்க்கிறார்.

அவளை அந்த காட்டுவாசி தாத்தா வளர்த்தார் என்பதை விட பீமன் யானைதான் தாய் போல் இருந்து வளர்க்கிறது. வானம்பாடி பெரியவள் ஆனபோது காட்டுப்பகுதிக்கு பட்டணத்தில் இருந்து வந்த தினகரனின் தந்தை திருமணம் செய்து கொள்கிறார். அவளை பட்டணத்திற்கும் அழைத்து வந்து விடுகிறார். இவர்களுக்கு தினகரன் பிறக்கிறான். தினகரன் குழந்தையாய் இருந்த காலம் முதலே அவன் தாய் பாலூட்டி வளர்த்தாளோ இல்லையோ பீமன் யானையின் அருமை, பெருமையை சொல்லியே வளர்க்கிறாள். அவனுக்கு ஏழெட்டு வயது நிரம்புவதற்குள் வானம்பாடியும், அவள் கணவனும் இறந்து விட பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறான் தினகரன். வீட்டிற்கு அருகில் இருக்கும் தினகரனின் தோழி (சிறுமியாக ஸ்ரீதேவி) இவன் வீட்டிற்கு வந்து ஆணியில் மாட்டப்பட்டிருக்கும் கொம்பன் யானையையும், அதனுடன் இருக்கும் இவனின் பெற்றோரின் கதையையும் கேட்கிறான்.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x