Last Updated : 31 Mar, 2018 09:43 AM

 

Published : 31 Mar 2018 09:43 AM
Last Updated : 31 Mar 2018 09:43 AM

ஓவிநாமும்.. கவுரி மாஸ்டரும்..!: ஆபத்தில் கைகொடுக்கும் தற்காப்பு கலை

ளம் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியமாகிறது. கராத்தே, குங்பூ தற்காப்பு கலைகள் இதற்கு உதவினாலும் இரண்டும் கலந்த ‘ஓவிநாம்’ (Vovinam) தற்காப்புக் கலைதான் இப்போது லேட்டஸ்ட். இதை ஏழை மாணவ மாணவிகளுக்கு பைசா கட்டணமின்றி இலவசமாக கற்றுத்தருகிறார் 18 வயதான கல்லூரி மாணவி கவுரி.

இவரது தந்தை கணேசன் சிலம்பம் விளையாட்டில் சிறந்தவர். சீனாவில் பிறந்த ‘வூசூ’ மற்றும் வியட்நாமில் உருவான ‘ஓவிநாம்’ தற்காப்புக் கலைகளை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர். சுமார் ஆயிரம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகக் கற்றும் கொடுத்தவர். பலரும் பதக்கங்கள் வெல்ல காரணமானவர். விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டின் கீழ் சிலருக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடமும் பெற்றுக் கொடுத்தவர். இப்போது அவர் இல்லை. உடல் நலக்குறைவு காரணமாக 2015-ல் காலமானார்.

அவருக்குப் பிறகு தமிழ்நாடு ஓவி நாம் சங்கத்தின் பொதுச் செயலாளராக கணேசனின் மனைவி சீதாலட்சுமி பொறுப்பேற்றார். இத்தம்பதியின் ஓரே மகள்தான் கவுரி. 3-வயதில் இருந்தே தந்தையுடன் இணைந்து ஓவிநாமை கற்றுத் தேர்ந்தவர். பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி என 25 பதக்கங்களை வென்றவர். கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவிநாம் போட்டியில் 2 தங்கம் இவருக்கு கிடைத்தது.

தந்தை மறைவுக்குப் பிறகு தாய் சீதாலட்சுமியுடன் பணியைத் தொடர்ந்தார். கற்ற கலை வீணாகக் கூடாது என நினைத்தவர், தந்தையைப் போலவே ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஓவி நாம் கலையை இலவசமாக கற்று தரத் தொடங்கினார். தந்தை இல்லாத நிலை யில் குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியபோதும் கூட இலவசமாக சொல்லித் தருவதை நிறுத்தவில்லை.

கவுரி நம்மிடம் கூறும்போது, “தற்காப்புக் கலைகளில் சிறந்த கலை ஓவிநாம். கராத்தே, குங்பூ ஆகிய கலைகளில் ‘சிஸ்சர் லாக் சிஸ்டம்’ இல்லை. ஓவிநாம் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்ட ஒரு பெண் ஒரே நேரத்தில் 3 பேர் தாக்க வந்தால் கூட தன்னை திறம்பட தற்காத்துக் கொள்ள முடியும். ஓவிநாம் கலையில் கால், இடுப்பு, கழுத்து என 3 இடங்களை ‘சிஸ்சர் லாக்’ செய்து கீழே விழுச்செய்ய முடியும்.

ஓவிநாம் போட்டியில், தற்காப்புக் கலையை நிகழ்த்திக் காட்டுவது, சண்டையிடுவது என இரு பிரிவுகள் உள்ளன. இவ்விரண்டு பிரிவிலும் இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். எதிர்காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவியரை தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து பதக்கங்களை வெல்வதே லட்சியம்” என்கிறார் இந்த ஓவிநாம் மாஸ்டர்.

இதுவரை இவர் 50 பேருக்கு ஓவிநாம் கலையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர்களில் சப்-ஜூனியர் பிரிவில் 5 பேர் 6 தங்கம், 3 வெள்ளி, ஜூனியர் பிரிவில் 1 தங்கத்தை வென்று கொடுத்துள்ளனர் இவரது மாணவர்கள். பல போட்டிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார். தொடருட்டும் பணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x