Last Updated : 27 Mar, 2018 10:27 AM

 

Published : 27 Mar 2018 10:27 AM
Last Updated : 27 Mar 2018 10:27 AM

முத்து அக்காவும்.. முப்பது நாய்களும்..!

“த

னி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என பாரதி பாடி வைத்தான். யாரும் பசியுடன் இருந்துவிடக் கூடாது என்ற கரிசனத்தின் ரெளத்திர வெளிபாடு அது. மனிதர்களுக்கு மட்டும்தான் பசி இருக்குமா. வாயில்லா ஜீவராசிகளுக்கு இருக்காதா என்று யாரும் திருச்சி முத்து அக்காவைப் பார்த்து கேட்டுவிட முடியாது. ஏனெனில் அன்றாடம் 50 நாய்களின் பசியை போக்கி அடைக்கலம் கொடுக்கிறவர் அவர்.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனிக்குப் பின்னால் இருக்கும் பூந்தோட்டம் தெருவில்தான் வசிக்கிறார் முத்து அக்கா. தனது வீட்டில் பராமரித்து வரும் 30 நாய் கள் உட்பட தெருவில் திரியும் 50-க்கும் அதிகமான நாய்களுக்கு தினமும் உணவளித்து அரவணைக்கிறார்.

உடல் நலக் குறைவு உட்பட சூழல் கூட உணவளிப்பதை நிறுத்தியதில்லை. முத்து அக்கா நம்மிடம் கூறும்போது, “என் சிறு வயது முதலே வீட்டில் நாய் வளர்த்தோம். இயல்பாகவே நாய்கள் மீது ப்ரியம். வளர்ப்பு நாய் இறந்துவிட்டது. ஒருநாள் சாலையில் அடிபட்டு நடக்க முடியாமல் கிடந்த பெட்டை நாய்க்குட்டியை எடுத்து வந்து பராமரிக்க ஆரம்பிக்க, இப்போது குட்டிகள் உட்பட மொத்தம் 30 நாய்கள். அவைகளுக்கென வீட்டின் 2-வது மாடி முழுவதையும் ஒதுக்கிவிட் டேன்.

இரவு நேரத்தில் எங்கள் தெருவுக்கு திருட்டு பயம் இல்லை. தெருவாசிகள் அத்தனை பேரும் நாய்களுக்கு அறிமுகம் என்பதால், அவர்களும் அவைகளுடன் விளையாடுவார்கள். யாரும் நாய்களை தொல்லையாக நினைத்ததில்லை. என் பிள்ளைகளைப் போலத்தான் நான் நினைத்து வளர்க்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

நாய் வளர்ப்பு என்பது சாதாரண காரியம் அல்ல. அவைகளை பராமரிப்பதுதான் முக்கியம். 30 நாய்களுக்கும் தவறாமல் தடுப்பூசி போட்டுவிடுகிறார் முத்து அக்கா. அவைகளிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனையோடு, வீட்டிலேயே சில மருந்துகளையும் இருப்பு வைத்திருக்கிறார். தேவையை கருதி அவைகளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சையும் செய்து விடுகிறார். காலை, இரவு நேரத்தில் பிஸ்கட், மதிய நேரத்தில் மட்டும் தனித் தனி தட்டில் இறைச்சி ரசம் கலந்த சோறு. கல்லீரல், கொழுப்பு உள்ளிட்ட இறைச்சி ஆகியவைதான் நாய்களின் உணவு மெனு. வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமல்ல அந்த நேரத்தில் வரும் தெரு நாய்களுக்கும் உணவளிப்பதால், சமபந்தி போஜனம்தான். உணவு தயாரிப்பதற்காக தினமும் 12 கிலோ அரிசி தேவைப்படுகிறது. தெரு மக்கள், உறவுக்காரர்கள் கொடுத்து உதவுகிறார்கள்.

இதுபோக சுற்றுவட்டார ஏரியாக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு நேரடியாக எடுத்துச் சென்று உணவளிக்கிறார். அதா வது டோர் டெலிவரியும் உண்டு. இந்தப் பணியில் முத்து அக்காவுக்கு உறவினர்கள் பாஸ்கரனும் கீர்த்தனாவும் உதவியாக இருக்கிறார்கள்.

குடும்பத்துக்கு என பெரிய வருமானம் இல்லை. வாடகை வண்டி ஓட்டும் மருமகனின் சொற்ப வருமானத்தில்தான் நாய்களுக்கான செலவையும் பார்க்கிறார் முத்து அக்கா. “என் காலத்துக்குப் பிறகும் நாய்களைப் பராமரிக்க வேண்டும்” என்று மகள் - மருமகனிடம் சொல்லி வைத்திருக்கிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது நாய்கள் மீது முத்து அக்கா காட்டும் பாசத்தில் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x