Published : 22 Mar 2018 03:23 PM
Last Updated : 22 Mar 2018 03:23 PM

யானைகளின் வருகை 148: கானுயிர்த் தோழர்கள்

1999-ம் ஆண்டு குமுதம் வார இதழ் பணியில் பச்சைத் தேயிலை விலை வீழ்ச்சியால் நீலகிரியைப் போலவே வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக செய்தி புறப்பட்டது. ஒட்டுமொத்த தேயிலை எஸ்டேட் நிர்வாகிகள் இணைந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் கலந்து கொண்ட போது பத்திரிகை நண்பர்கள் சிலர் பக்கத்தில் உள்ள டாப் ஸ்லிப் சென்றுவிட்டு கோவைக்கு புறப்படலாம் என்று சொன்னார்கள். அதன் நிமித்தம் புறப்பட்டோம். போகிற வழியெங்கும் காட்டு யானைகள் கண்ணுக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே சென்றார்கள். டாப் ஸ்லிப் பகுதியின் அடிவார சோதனைச் சாவடியைத்தான் நாங்கள் சென்ற டாக்ஸி தாண்டியிருக்கும்.

முதலில் டாக்ஸி டிரைவர்தான் அந்த யானைக்கூட்டத்தைப் பார்த்தார். நாங்கள் சென்ற சாலையின் இடதுபக்கம் சுமார் 100 அடி தூரத்தில் 10க்கும் மேற்பட்ட யானைகள். இரண்டு குட்டிகளுடன். அவ்வளவு அழகாக பசும்புற்களை பிடுங்கி மண்ணை உதறி வாயில் போட்டுக் கொண்டிருந்தன. தாயாகப்பட்ட யானை இளம்தளிர்களாக பாரத்துப் பார்த்து தன் குட்டிக்கும் ஈந்தபடி இருந்தது. கறுப்பு என்றால் சாதாரண கறுப்பு நிறம் அல்ல. அண்டங்காக்காய் கரிய நிறத்தில் அந்த யானைகள். 'மெதுவா மெதுவா போங்க, நான் போட்டே எடுத்துக்கறேன்!' என்கிறார் வண்டியில் இருந்த மக்கள் குரல் போட்டோகிரபர் சுப்பு. அவருடன் வந்த மக்கள் குரல் நிருபர் குமரேசனோ, 'அய்யோ வண்டியை நிறுத்தாதீங்க. போயிட்டே இருங்க. அதுக வந்து காரை அட்டாக் பண்ணிடப் போகுது!' என பயத்துடன் பேசுகிறார். அவருடன் அவர் மனைவி, குழந்தைகளும் இருந்தனர். அவர்களும் பிரமிப்பு மாறாமல் காட்டு யானைகளை பார்த்துக் கொண்டு கொஞ்சம் பீதியுடனே பதட்டம் காட்ட ஆரம்பித்தனர்.

வண்டி டிரைவர்தான், 'அது கூட்டத்துடன் இருக்கும் யானை. அதில் கொம்புள்ள பெரிய யானையும் இல்லை. அது நம்ம கிட்டப் போகாத வரை ஒண்ணும் செய்யாது. அப்படியே பாருங்க!' என்று தைரியமூட்டினார். முதன்முதலாக கிடைத்த காட்டு யானைகள் தரிசனம். இரண்டு குட்டிகளில் ஒன்று தன் தாயின் மடியில் பால் அருந்துவதையும் காண முடிந்தது. எங்கே பாய்ந்து வந்து தாக்கி விடுமோ என்ற அச்சம் தவழ்ந்தாலும் அன்று வேண்டிய அளவு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுதான் புறப்பட்டோம்.

அதற்குப் பிறகு பலமுறை இதே டாப் ஸ்லிப், பரம்பிக்குளம் ஏரியாவிற்கு செய்தி சேகரிப்புக்காக வந்துள்ளேன். எப்பொழுதுமே காலை 8 மணிக்கு முன்பும், மாலை 5 மணிக்கு பின்பும் சாலையிலோ, சாலை ஓரங்களிலோ காட்டு யானைகள் நிற்கும் பகுதியாகத்தான் டாப் ஸ்லிப் இருந்து வந்திருக்கிறது. அதிலும் வேறெங்கும் தரிசிக்க முடியாத அளவு 90 சதவீதம் கூட்டத்து யானைகளையே இங்கு கண்டிருக்கிறேன். பிறகென்ன? யானைக் காடுகளுடேயான ஓட்டம்தான் நிறைய.

1999-ம் ஆண்டு டாப் ஸ்லிப்பில் காட்டு யானைகளை முதலில் தரிசித்த பின்புதான் கானுயிர் ஆர்வலர்களில் ஒருவரும், விவசாயிகள், தொழிலாளர்கள் சங்கத் தலைவருமான எம்.எஸ்.செல்வராஜ் அறிமுகம் ஆனார். அவர்தான் எனக்கு அந்தக் காலத்திலேயே செக்சன் -17 என்கிற ஜென்மி நிலங்களைப் பற்றிய வரலாற்றையே தந்தவர்.

அது மட்டுமல்ல, காடு என்பது என்ன, அதில் எந்த விகிதாச்சாரத்தில் எந்தெந்த விலங்குகள் இருக்க வேண்டும். அவற்றுக்கு உணவுகளின் விகிதாச்சாரம் எப்படியிருக்க வேண்டும் என்பதையெல்லாம் எனக்கு பாலபாடம் எடுத்தவர். அந்தக் காலகட்டத்திலேயே கூடலூர் காடுகளை மட்டுமல்ல, பந்தலூர், சேரம்பாடி, சுல்தான் பத்தேரி வரை என்னை அழைத்துச் சென்று அத்தனை காடுகளையும் அணு அணுவாக தரிசிக்க வைத்தார்.

செக்சன் -17 நிலங்களில் 1970க்கு முன்பே காடாகியிருக்க வேண்டிய சுமார் 1 லட்சம் ஏக்கர் காடுகள் எப்படியெல்லாம் பகாசூர கம்பெனிகளிடம் சிக்கி படாதபாடு படுகின்றன என்பதை பற்றியெல்லாம் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார். அது எந்த மாதிரியான வழக்குகளையெல்லாம் கடந்து வந்திருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார். அப்போதே இந்த நிலங்களில் வசிக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு அவரவர் நிலங்களுக்கு பட்டாவைக் கொடுத்துவிட்டு, மற்றவற்றை காடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கோர்ட்டில் பல்வேறு வழக்குகளையும் தொடர்ந்திருந்தார்.

இங்கே பகாசூர கம்பெனிகளால் நடந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பிரம்மாண்ட நில ஆக்கிரமிப்பை அகற்ற முற்படாமல் பத்து சென்ட், இருபது சென்ட் நிலம் முதல் 1 ஏக்கர், 2 ஏக்கர் நிலம் வரை உள்ளவர்களின் நிலங்களை எடுக்கவே அதிகாரிகள் முனைவதையும், அப்படிச் செய்யும்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகள், தொழிலாளர்கள் கொந்தளித்துப் போராடுவதையும், அவர்களின் போராட்டத்தைக் கேடயமாக வைத்தே பெரிய, பெரிய எஸ்டேட்டுகள் தங்கள் ஆக்கிரமிப்புகளை பாதுகாத்துக் கொள்வதையும், அதில் அரசியல்வாதிகள், வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வசூலெடுத்து குளிர்காய்வதையும் அப்போதே விண்டு விண்டு வைத்தவர்.

அப்போதே இவர் சுட்டிக்காட்டியபடி தமிழக அரசு செக்சன்-17 நிலங்களை ஒழுங்குபடுத்தியிருந்தால் முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 90 சதவீதம் கானுயிர்களுக்கான காடுகளாக மாறியிருக்கும். இன்று வரை அது சரிசெய்யப்படாமல் தொடர்கிறது. அந்த முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களைப் பற்றியும் நாம் இவர் மூலமே ஏற்கெனவே பல அத்தியாயங்களில் கண்டோம்.

ஏறத்தாழ காடுகள் குறித்த அறிவு இவர் மூலமாகவே எனக்கு செயல்முறை விளக்கமான புரிதலை ஏற்படுத்தியது என்றால் காடுகளில் வசிக்கும் மான், காட்டு நாய், செந்நாய், குள்ள நரி, கருங்குரங்கு, ஆரம்பித்து காட்டு யானைகள் வரையிலான அறிவு ஏற்கெனவே நாம் பல பேட்டிகளில் கண்ட இபான் அமைப்பின் நைஜில் ஓட்டர் மூலமாகவே ஏற்பட்டது. இவர் மூலமாகத்தான் தரவுகளைத் திரட்டி மக்னா இறக்கும் தருவாயில் இருப்பதாகவும், அதைக் காப்பாற்ற அயர்லாந்து டாக்டரை வரவழைக்க வேண்டும் என்ற மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதற்கு உத்தரவும் பெற்றிருந்தார் சென்னையைச் சேர்ந்த வக்கீல் யானை ராஜேந்திரன். அவருடன் மக்னாவின் அன்றைய நிலையை காண செல்லும் போதுதான் எனக்கு நைஜில் ஓட்டர் அறிமுகமும் ஆனார்.

அதன் தொடர்ச்சியாகவே கோவை சீனியர் வழக்கறிஞர் சி.ஞானபாரதி கோவை குண்டு வெடிப்பு வழக்கு செய்திகள் மூலம் அறிமுகமாகிறார்.

அவர் வழக்கறிஞர் என்பதையும் தாண்டி ஜெயகாந்தன் காலத்திலேயே இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டவர். செம்மலர் இலக்கிய இதழ் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கம் ஸ்தாபித்தவர்களில் ஒருவர். இடதுசாரித் தலைவர் சிந்தனிடம் நெருக்கமானவர் என்பதெல்லாம் அறிந்து அவருடன் நெருக்கமாகிறேன். அவருக்கு எழுத்தையும் தாண்டி, வக்கீல் தொழிலையும் தாண்டி இயற்கையின் பால், கானுயிர்களின் பால் இணக்கமும், இஷ்டமும் கொண்டவர் என்பதை அறிகிறேன். அதில் அவருடனே பயணிக்கிறேன்.

தூவைப்பதி, தூமனூர், சேம்புக்கரை, ஆனைகட்டி, டாப் ஸ்லிப், பரம்பிக்குளம், மஞ்சூர், அப்பர் பவானி, அவலாஞ்ச், சிறுவாணி, கோவை குற்றாலம், சின்னாறு காடுகள் என யானைகள் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும், தன் குழுவுடன் காரில் புறப்பட்டு விடுவார். அவர், அவருடைய ஜூனியர்கள் பாண்டிராஜன், வேலுச்சாமி, ஸ்டாலின், செல்வராஜ், சசிக்குமார் என உள்ள குழுவினர் ஒவ்வொரு விடுமுறை தினங்களிலும் காடுகளை நோக்கியே பயணிப்பர். சில சமயங்களில் சீனியரின் குடும்பமே புறப்பட்டு வரும். அந்த குழுவில் நானும் இருப்பேன்.

அப்படி கிடைத்த அனுபவங்கள் கணக்கிலடங்காது. அதில் ஒரு சிலவற்றைத்தான் முன்னரே சொல்லியிருக்கிறேன். முதுமலை, மசினக்குடி செல்லும்போது (அந்தப் பயணத்தில் நான் செல்லவில்லை) ஒரு முறை நைஜிலை சந்திக்கும்படி சொல்லியனுப்பினேன். அவர் தன் குழுவுடன் சென்று நைஜிலை சந்தித்து, அவர் காட்டைச் சுற்றிக் காண்பித்த விதம், அதில் யானைகளை காட்டிய விதம் எல்லாம் சொல்லிச் சொல்லி புளகாங்கிதப்பட்டதெல்லாம் தனி அனுபவம்.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x