Published : 31 Mar 2018 09:41 AM
Last Updated : 31 Mar 2018 09:41 AM

மொட்டுகள் உருவாக்கிய மூலிகை தோட்டம்..!: அரசுப் பள்ளியின் அர்த்தமுள்ள பணி

தி

ருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் அரிச்சந்திரபுரம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி மூலிகை வாசத்தில் மூழ்கிக் கிடக்கிறது. மாணவர்களால் உருவாக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் அந்த பள்ளிக்கு ஒரு புதிய கவுரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாளிகளில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு ஊற்றுவதும் பாத்திகளை சரி செய்வதும் அன்றாடம் அவர்கள் பள்ளிக்கு வந்ததும் செய்யும் முதல் பணி. பின்னர் அடுத்தடுத்து வரும் மாணவர்களும் தண்ணீர் ஊற்றுகின்றனர். இப்படி, பார்த்து பார்த்து பராமரித்த பிஞ்சுக்கரங்களின் உழைப்பால், கடந்த 9 மாதங்களில் 100 மூலிகைச் செடிகளுடன் செழித்து வளர்ந்து நிற்கிறது மூலிகைத் தோட்டம்.

சிறு குறிஞ்சான், சர்க்கரைக் கொல்லி, வெட்டி வேர், வல்லாரை, திருநீற்றுப் பச்சிலை, ஆடுதொடா, கருந்துளசி, ஆமணக்கு, அகத்தி, அத்தி உட்பட நமக்கே தெரியாத 100 வகை யான மூலிகை செடிகளை வளர்த்ததுடன் அதைப் பற்றி தெரிந்தும் வைத்துள்ளனர். ஆமாம். எந்தச் செடிகள் எந்த நோய்க்கு மருந்தாகும். அதன் மருத்துவக் குணம் என்ன, இதன் அறிவியல் பெயர் என்ன என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கிறது.

இந்த மூலிகைத் தோட்டம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் அப்பகுதி பொது மக்களும் நேரில் வந்து பார்வையிட்டு ஆச்சர்யப்படுகின்றனர். அத்துடன் வல்லாரை, துளசி, சங்கிலை போன்ற மூலிகைகளையும் வீட்டுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இதுதவிர பள்ளியின் சத்துணவில் மூலிகைத் தோட்டத்தில் கிடைக்கும் பசலை, பொன்னாங்கன்னி போன்ற ஏதாவது ஒரு கீரை வகை இடம்பெற்றிருக்கும்.

மூலிகை தோட்டம் இத்தனை சிறப்புடன் அமைந்ததற்கு அப்பள்ளி தலைமையாசிரியர், 8 ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு அளித்த ஊக்கமே முக்கிய காரணம்.

இதுகுறித்து தலைமையாசிரியர் தி.கனகசபை கூறும்போது, “மாணவர்கள் மூலம் பெற்றோர்களும் பொதுமக்களும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து வருகின்றனர். இதன்மூலம் அழிவின் விளிம்பபில் இருக்கும் மூலிகைகளை காப்பாற்றுவதோடு, பாரம்பரிய மருத்துவக் குணம் உள்ள செடிகள் பற்றிய தகவல் சென்றடைகிறது. பொது மக்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் பள்ளி அடித்தளமிட்டுள்ளது எங்களுக்கு பெரு மை” என்கிறார்.

ஆசிரியர் முரளி கூறும்போது, “எங்களது பள்ளியில் 192 பேர் படிக்கின்றனர். மாணவர்கள் மத்தியில் பாரம்பரிய உணவுமுறை மற்றும் மருத்துவத்துக்கு பயன்படும் மூலிகைச் செடிகள் குறித்த அறிவை மேம்படுத்துவதற்காக இந்த மூலிகைத் தோட்டத்தை அமைக்க முடிவு செய்தோம். இதில் மாணவர்களை பங்கெடுக்க வைத்தோம். அதன் விளை வாக மலை பகுதிகளில் விளை யக் கூடிய மிளகு, சந்தனம், சித்தரத்தை, பூனை மீசை, நிலவேம்பு, மலை வேம்பு போன்ற மூலிகைச் செடிகளையும் வளர்த்தெடுத்துள்ளனர்” என ஆச்சரியப்படுகிறார்.

வேளாண்மை மீதான ஈர்ப்பு குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் படிக்கும்போதே மூலிகை தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்துவது, விவசாயத்தின மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாத்து கொண்டு செல்லவும் உதவும்.

அந்த பணியைத்தான் அரிச்சந்திரபும் பள்ளி செய்து வருகிறது. கல்வி வேறு, அனுபவம் வேறு என்ற சூழலில் அனுபவக் கல்வியை போதிக்கும் இந்த பள்ளியின் முயற்சியை மனதார பாராட் டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x