Last Updated : 09 Apr, 2019 12:25 PM

 

Published : 09 Apr 2019 12:25 PM
Last Updated : 09 Apr 2019 12:25 PM

‘‘உதயநிதி பிஞ்சு பச்சை மிளகாய்.. காரமாகத்தான் இருப்பார்’’- திண்டுக்கல் லியோனி பேட்டி

பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். சேலத்தில் பிரச்சாரத்தில் இருந்த அவரை தி இந்து தமிழ் திசைக்காக ஒரு பேட்டி என்று அழைத்தபோது அவர் பாணியிலேயே கலகலவென பேசினார். அவருடனான பேட்டியிலிருந்து..

2019 மக்களவைத் தேர்தல் திண்டுக்கல் லியோனி பார்வையில்..

திமுகவின் விசுவாசி நான். திராவிட சிந்தனையுடன் இந்தத் தேர்தலை பார்க்கும்போது இது சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையேயான போர், மதச்சார்பின்னமைக்கும் மதவெறிக்கும் இடையேயான போர் என்றே பார்க்கிறேன்.

இந்தத் தேர்தலில் பாஜக தூக்கி எறியப்படாவிட்டால் சிறுபான்மையின மக்களின் நிம்மதி நிரந்தரமாக தொலைந்துவிடும். புதிய பரிமாணத்தில் இந்தியா உருவாக புதிய ஆட்சி அவசியமாகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தைத் தந்துள்ள தேர்தல் இது.

தேர்தல் பிரச்சாரப் பயணங்களில் மக்கள் ஆதரவு யார் பக்கம் என உணர்கிறீர்கள்?

நிச்சயமாக மதச்சார்பற்ற திமுக கூட்டணிக்குத்தான் மக்கள் ஆதரவு இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரச்சாரத்தைத் தொடங்கினேன். அதன் பின்னர் அரக்கோணத்தில் ஜெகத் ரட்சகன், வேலூரில் கதிர் ஆனந்த், தருமபுரியில் செந்தில்குமார் என வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தேன். எல்லா ஊர்களிலும் ஒரு விஷயத்தைப் பொதுவாகப் பார்க்க முடிகிறது. மக்கள் மோடியை விவசாயிகளின் எதிர்ப்பாளராகவே பார்க்கின்றனர்.

சேலத்தில் முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் பேருந்து நிலையத்தில் அரை மணி நேரம் பிரச்சாரம் செய்தேன். முதல்வரை விமர்சித்துதான் பேசினேன். உள்ளூரிலேயே முதல்வர் மீது விமர்சனமா என்று ஒரு குரல்கூட ஒலிக்கவில்லை. முதல்வர் மீதும் அதிமுக மீதும் அப்படி ஒரு அதிருப்தியில் இருக்கிறார்கள் மக்கள்.

இதோ, 8 வழிச்சாலை திட்டம் ரத்து என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மக்கள் இதைத்தான் கொண்டாடுகிறார்களே தவிர அதிமுகவை அல்ல. எடப்பாடி சசிகலாவுக்கு துரோகம் செய்தார், டிடிவிக்கு துரோகம் செய்தார், ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைக்ககூடாது, அவருக்கு மணி மண்டபம் கட்டக் கூடாது என்றெல்லாம் சொன்னவர்கள்தான் பாமகவினர். அவர்கள் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிடுகிறார். இவரை எப்படி மக்கள் நம்புவார்கள்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி..

அது மக்கள் விரும்பாத கூட்டணி. அந்தக் கூட்டணியைப் பற்றி பேசினாலே மக்கள் முகம் சுழிக்கிறார்கள். தேசிய கட்சியான பாஜக வெறும் 5 இடங்களை வாங்கிக் கொண்டு சமரசம் செய்திருக்கிறது. இதுவே அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டதற்கான அடையாளம். அந்த 5-ல் ஒன்றாவது வெற்றி பெறுவார்களா என்பதே சந்தேகம்தான்.

அப்புறம் கூட்டணியில் இருக்கும் தேமுதிக. விஜயகாந்தை நினைத்து தமிழக மக்கள் பரிதாப்படுகிறார்கள். உடல்நலம் சரியில்லாதவரை வைத்துக் கொண்டு கூட்டணிக்கு பேரம் பேசி அரசியல் செய்வதையெல்லாம் மக்கள் அருவருப்பாகப் பார்க்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருந்தால் போதும் என்பதே மக்களின் ஆர்வமாக இருக்கிறது.

பாமகவைப் பற்றி சொல்லவே வேண்டாம். தருமபுரியில் அன்புமணி வெற்றி பெற மாட்டார். நானே முதல்வராவேன் என்றெல்லாம் அவர் சார்ந்த கட்சிக்கும் சமுதாயத்துக்கும் முன்னால் மாற்றம் முன்னேற்றம் என்று பேசிவிட்டு இன்று ஈபிஎஸ் சிறந்த முதல்வர் என்று பேசுகிறார். இது அவர் அவரது சமுதாயத்துக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். இந்த துரோகத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

பாஜக தேர்தல் அறிக்கையில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் எனக் கூறியுள்ளனரே?

இதை தேர்தல் நேரத்தில் எல்லாம் சொல்வார்கள். அவர்களுக்கு இந்துக்களின் உணர்வுகளைவிட இந்துகளின் வாக்குகளே முக்கியம். அயோத்தி பிரச்சினை சட்ட ரீதியாக அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு முடிவை 5 ஆண்டில் எடுக்க முடியவில்லை. இப்போது திரும்பவும் ராமர் கோயில் புராணத்துடன் வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரமும் அதன் மீதான விமர்சனங்கள் பற்றியும் உங்கள் கருத்து என்ன?

அட.. பிஞ்சு பச்சமிளகாய் காரமாகத்தான இருக்கும். அவர் இளைஞர், திராவிட பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் வாரிசு, முரசொலியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவரது பேச்சுக்கள் நறுக்.. நறுக் என இருக்கிறது. தன் சமுதாய மக்களுக்கு செய்த துரோகத்துக்கு அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசுகிறார். யாருக்கும் அஞ்சாமல் காரசாரமாகப் பேசுகிறார். நடிகர் என்பதால் கூடுதல் அபிமானம் ஏற்படுகிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவரை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்கிறார்கள்.

மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி பற்றி..

ஒரு ஜோக் சொல்லட்டுமா... ஒருத்தன் பல் வலியில டாக்டர்கிட்ட போனானாம். டாக்டரும் ரொம்ப நேரம் பல்ல பிடுங்குறேன்னு இழுக்க அந்த நோயாளி கதறியிருக்கிறான். ஐய்யோ, அம்மா, அப்பான்னு நெளிந்திருக்கிறான். ரொம்ப நேரத்துக்கு அப்புறம்தான் நாம எடுக்க முயற்சி பண்ணது பல் இல்ல நாக்குன்னு அந்த டாக்டருக்கு தெரிஞ்சிருக்கு. நம்ம மோடி டாக்டரும் பொருளாதார மேதை மாதிரி ரூ.500, ரூ.1000-த்தை செல்லாதுன்னு சொன்னாரு. அப்புறம் தான் தெரிஞ்சுது அது நம்ம இந்தியப் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைன்னு. மோடியின் ஆட்சி இதுதான்.

சரி மோடி, ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி உங்கள் தலைவர் ஸ்டாலின் பற்றி ஓரிரு வார்த்தைகளில் விமர்சியுங்களேன்...

மோடி... மக்களாட்சியில் ஒரு சர்வாதிகாரி

ஈபிஎஸ்... துரோகத்துக்கு இவருக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்கலாம்

ஓபிஎஸ்... எப்படி வேண்டுமானாலும் அரசியலில் மாறலாம் என நினைக்கும் பச்சோந்தி

டிடிவி.. தும்பைவிட்டு வாலைப் பிடிப்பவர்

ஸ்டாலின்... தமிழக மக்களின் தலைவர்

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x