Last Updated : 04 Apr, 2019 05:40 PM

 

Published : 04 Apr 2019 05:40 PM
Last Updated : 04 Apr 2019 05:40 PM

30 பேருக்கு ஒரு ஆள் நியமனம்; கடைசி 3 நாட்களில் பணப் பட்டுவாடாவுக்கு தயாராகும் ஆளுங்கட்சி: மதுரை மநீம வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் எம்.அழகர். வழக்கறிஞரான இவர் 1999 முதல் கமல் நற்பணி மன்ற மதுரை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார்.

'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில், மதுரையில் மக்கள் நீதி மய்யத்திற்கான வரவேற்பு, கமல் அரசியல் என பல்வேறு கேள்விகள் எழுப்ப அவற்றிற்குப் பதில் அளித்ததோடு மதுரையில் ஆளுங்கட்சி பணப் பட்டுவாடாவுக்குத் தயாராகி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் அழகர்.

மதுரையில் சற்றுமுன் கமல்ஹாசன் உங்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். மக்களிடம் வரவேற்பு எப்படி இருந்தது?

நல்ல கூட்டம் இருந்தது. கமல்ஹாசனின் பேச்சை மக்கள் ரசித்தனர். விசிலடித்து, கைதட்டி ஆர்ப்பரித்தனர். பெண்கள் பெருமளவில் வந்திருந்தனர். மதுரை மக்களிடம் மக்கள் நீதி மய்யத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என அறிந்துகொண்டோம்.

கமல் நடிகர் என்பதால்கூட கூட்டம் வந்திருக்கலாம் அல்லவா?

எங்கள் தலைவர் கமல்ஹாசனை மக்கள் அரசியல்வாதியாக அங்கீகரித்து மாதங்கள் பல நகர்ந்துவிட்டன. நடிகர், காதல் மன்னன் என்ற அடையாளத்தை எல்லாம் தாண்டி அவர் தலைவராக நிற்கிறார்.

மதுரையில் அதிமுக சார்பில் அரசியல் பின்புலம் கொண்ட ராஜ்சத்யன், திமுக கூட்டணி சார்பில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் களமிறங்கியுள்ளனர். தேர்தல் களம் உங்களுக்கு எவ்வளவு சவால் மிகுந்ததாக உள்ளது?

எங்கள் கட்சி அறிமுகக் கட்சிதான். ஆனால் எங்கள் தலைவர் சிறு குழந்தைக்குக்கூட பரிச்சயமானவர். நாங்கள் எங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம். நாங்கள் நேர்மையானவர்கள். மக்களை நம்பி தேர்தலில் இறங்கியுள்ளோம். மக்கள் நீதி மய்யத்துக்கு நிச்சயமாக அமோக ஆதரவு இருக்கும்.

மக்களிடம் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது உங்களை மாற்று அரசியல் சக்தியாக நிறுவிக் கொள்ள எதை முன்வைத்து பிரச்சாரம் செய்கிறீர்கள்?

பிரதானமாக லஞ்ச ஒழிப்பு. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை செய்திருக்கின்றன. தமிழகம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைத்து வாக்கு சேகரிக்கிறேன்.

இதோ இப்போதுகூட எப்படியாவது வெற்றி பெற்றவிட வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சி பணப் பட்டுவாடாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 30 பேருக்கு பணப் பட்டுவாடா செய்ய ஒரு நபர் என தொகுதி முழுவதும் பட்டியலும் பணம் விநியோகம் செய்ய ஆட்களும் தயார் நிலையில் உள்ளனர். கடைசி 3 நாட்களில் பணப் பட்டுவாடா செய்யப்படவுள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

அப்படியென்றால் நீங்கள் ஏன் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யவில்லை?

முதல் நாள் விநியோகம் தொடங்கட்டும். ஆதாரத்துடன் நிச்சயமாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம். பணப் பட்டுவாடாவைத் தடுப்போம்.

கமல் பேச்சு, ட்வீட் புரியவில்லை என்று சமூக வலைதளங்களில் வந்த கிண்டல் குறைந்த மாதிரி இருக்கிறதே?

மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து 14 மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் தலைவர் மக்கள் விரும்பும் எளிய பேச்சாளராகிவிட்டார். அவரின் பிரச்சாரம் தெளிவாக இருப்பதால்தான் அவர் எங்கு சென்றாலும் கூட்டம் வருகிறதே தவிர அவர் நடிகர் என்பதால் அல்ல.

இந்தத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடாதது ஏன்?

அவர் போட்டியிட வேண்டாம் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருந்தது. அவரது இலக்கு சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதற்காகக் காத்திருக்கிறார்.

பிரச்சாரங்களில் சூசகமாக சொல்வதுபோல் நேரடியாக முதல்வர் சீட் தானா?

அதிலென்ன தவறிருக்கிறது. தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தமிழக முதல்வராகத்தானே ஆக வேண்டும். நிச்சயம் அவர் முதல்வராவார்.

உங்கள் சின்னத்தின் மீதான உங்களது உணர்வுபூர்வ நெருக்கம் எத்தகையது?

இருளை விலக்குவது வெளிச்சம். இருண்ட தமிழகத்தை எழுச்சி தமிழகமாக்க ஒளி வீச கிடைத்திருக்கிறது டார்ச் லைட் சின்னம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x