Published : 08 Apr 2019 15:23 pm

Updated : 08 Apr 2019 16:30 pm

 

Published : 08 Apr 2019 03:23 PM
Last Updated : 08 Apr 2019 04:30 PM

70 வயதில் உற்சாகப் பிரச்சாரம்: கரூர் தொகுதியைக் கலக்கும் காங்கிரஸ் பேச்சாளர்

70

கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதிமணியை ஆதரித்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தினமும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் 70 வயதான பேச்சாளர் ராஜூ.

இந்தத் தேர்தலில் திமுகவுக்கு கருணாநிதியும் அதிமுகவுக்கு ஜெயலலிதாவும் பிரச்சாரம் செய்ய இல்லை என்பது பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டு கட்சிகளுமே சினிமா நட்சத்திரங்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் என தங்களுக்கான பிரச்சார உத்திகளில் சுவாரஸ்யங்களுக்காக முயன்று வருகின்றன.


ஆனால் கட்சிக்காக பிரச்சாரம் செய்வது எழுதிக் கொடுத்ததை வாசிப்பது அல்ல உணர்வுப்பூர்வமாக எழுச்சி உரை ஆற்றுவது. நான் 9-வதுதான் படித்திருக்கிறேன். ஆனால், எனது பேச்சை மெருகேற்ற நிறைய வாசிக்கிறேன் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பேச்சாளரான ராஜூ.

ராஜூவுக்கு வயது 70. கரூர் மாவட்டம் பொன்னம்பட்டியைச் சேர்ந்த சிறு விவசாயி. இவரது தந்தை, தாய் என அனைவரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். இதனாலேயே இளம் வயதிலிருந்து இவருக்கு காங்கிரஸ் கட்சி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

எத்தனை ஆண்டுகாளாகப் பேச்சாளராக இருக்கிறீர்கள்?

1984-ல் இந்திராகாந்தி அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் கரூரில் ஓர் இரங்கல்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. அதுதான் நான் முதன்முதலில் பேசிய கூட்டம். அந்தக் கூட்டத்தில் நான் பேசிய பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் என் மீது கவனம் ஏற்பட்டது. அதன் பின்னர் எப்போது என்ன கூட்டம் நடந்தாலும் எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்வேன். அப்படித்தான் இந்த முறையும் எங்கள் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன்.

கரூரில் ஜோதிமணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? நீங்கள் பிரச்சாரத்துக்குச் சென்று வந்ததன் அடிப்படையில் கூறுங்கள்?

ஒரு பெண் வேட்பாளரை காங்கிரஸ் களம் இறக்கியதில் எனக்கு முதலில் மகிழ்ச்சி. ஜோதிமணி மக்கள் நலன் விரும்பும் தலைவர். செல்லுமிடமெல்லாம் அவருக்கு ஆதரவு ஆர்ப்பரிக்கிறது.

குடும்பத்தினர் ஆதரவு எப்படி இருக்கிறது?

நான் ஒருபோதும் எனது பேச்சுக்காக பணம் கேட்பதில்லை. வாங்குவதுமில்லை. சில நேரங்களில் எனது சொந்தப் பணத்தில் பிரச்சாரத்துக்காகப் பயணம் செய்வேன். சில நேரங்களில் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவிப்பார்கள். ஆனால், எதுவும் எனக்குத் தடையாக இருந்ததில்லை. என்னைப் பிழைக்கத் தெரியாதவன் என்றுகூட சொல்லியிருக்கிறார்கள்.

உங்கள் வாசிப்புப் பழக்கம் பற்றி..

ஆம். நான் 9-வது தான் படித்திருக்கீறேன். ஆனால், எனக்கு வாசிப்புப் பழக்கம் உள்ளது. எனக்கான புத்தகங்களை அந்தக் காலத்திலிருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுப்பி வைப்பார். வாசிப்பு இருந்தால்தான் மேற்கோள்களுடன் பேச முடியும். ஒரு உவமை, சிறு கவிதை, ஒரு கதை என ஏதாவது சொல்லி பிரச்சாரம் செய்தால்தான் மக்கள் மனதில் வேட்பாளர் நிற்க முடியும். அதற்கு வாசிப்பு அவசியம். கட்சிக்காக பிரச்சாரம் செய்வது எழுதிக் கொடுத்ததை வாசிப்பது அல்ல உணர்வுப்பூர்வமாக எழுச்சி உரை ஆற்றுவது. அந்த உணர்வை கட்சி மீதான கொள்கைப் பிடிப்பும் எழுச்சியை வாசிப்பும் தரும்.

அதனால்தான் மேடைகளில்... "உலக வரலாற்றில் மிகச் சிறப்பான இடம் பெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் ஒப்பற்ற தலைவர், இமயம் முதல் குமரி வரை 100 கோடி மக்களின் இதயங்களில் வாழும் நேருவின் வாரிசு, இந்திய மக்களின் இதயங்களின் வாழும் ராஜீவின் மறு உருவம் ராகுல் காந்தி, இந்திராவின் மறுபிறவி பிரியங்கா காந்தியின் கைகளில் வலுசேர்க்க நமது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை கை சின்னத்தில் ஆதரியுங்கள்" என நான் பேசும்போது அது மக்கள் மனதில் பதிகிறது. வெறும் சின்னத்தையும் வேட்பாளர் பெயரையும் மட்டும் சொல்லிச் சென்றால் மக்கள் மனங்களில் எதுவுமே நிலைத்து நிற்காது.

நீங்கள் ஒரு மூத்த வாக்காளர்... இந்தத் தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்தத் தேர்தல் மக்கள் மாற்றம் விரும்பும் தேர்தலாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கும் தேர்தலாக இருக்கிறது. இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். மோடியை அகற்றி ராகுலை எழுச்சிமிகு தலைவராக அமர வைக்கும் தேர்தல்.

இவ்வாறு தனக்கே உரிய உற்சாகம் சிறிதும் குறையாமல் பேசினார் ராஜூ தாத்தா.

ஒருகாலத்தில் திமுகவில் அனல் பறக்கவைக்கும் பேச்சாளர்கள் இருந்தனர். அதிமுகவிலும் நாங்கள் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதுபோலவே காளிமுத்து போன்றோர் பிரச்சார பீரங்கிகளாக இருந்தனர். ஆனால், இன்று உதயநிதி ஸ்டாலின் பேச்சு பரவாயில்லையே, திண்டுக்கல் சீனிவாசன் காமெடி செய்வார் என்று மக்கள் தேர்தல் சுவாரஸ்யங்களுக்கு ஏங்கும் சூழல் வந்துவிட்டது. இந்த மாதிரியான சூழலில் ராஜூ தாத்தா போன்றோர் மேடைப் பேச்சுகளை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர் என்பது சுவாரஸ்யமானது.


கரூர்காங்கிரஸ் பேச்சாளர்ராஜூஜோதிமணிஈவிகேஎஸ் இளங்கோவன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x