Published : 06 Mar 2019 01:15 PM
Last Updated : 06 Mar 2019 01:15 PM

மலக்குழி இறப்புக்குக் காரணமான ஒருவர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை: பெஸ்வாடா வில்சன் பேட்டி

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் துப்புரவுப் பணியாளர்களின் கால்களைப் பிரதமர் நரேந்திர மோடி கழுவியது, பாஜகவினரின் பாராட்டுகளைப் பெற்றாலும், எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் இடையே கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டும், அத்தகைய தொழிலில் ஒருவரை ஈடுபடுத்துவது குற்றம் என்றாலும், நாள்தோறும், கழிவுநீர் தொட்டியிலும், மலக்குழிகளிலும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

துப்புரவுப் பணியாளர்களின் கால்களை மோடி சுத்தப்படுத்திய மறுநாளே, டெல்லியிலும் மும்பையிலும் துப்புரவுத் தொழிலாளர் அமைப்புகளும் தலித் அமைப்புகளும் போராட்டம் நடத்தின. அப்போராட்டத்தில், மலம் அள்ளுவதற்குப் பயன்படுத்தும் வாளிகளை பெண்கள் எரித்தனர். கழிவுநீர் தொட்டிகளையும், சாக்கடைகளையும் சுத்தப்படுத்தும் பணியின்போது ஏற்படும் மரணங்கள், பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கப்படாதது, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அதில் முன்வைக்கப்பட்டன. 

மற்றொரு பக்கம், சமீபத்தில், டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 200 மலக்குழி இயந்திரங்களை வழங்கியுள்ளார். அப்போது, "டெல்லியைப் பொறுத்தவரை இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். மனித வாழ்வின் பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்வதற்கான நிகழ்வைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இயந்திரங்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மலக்குழிகளில் இறங்கும் வழக்கத்துக்கு மாற்றத்தைக் கொண்டுவரும்" என்றார்.

துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம், துப்புரவுத் தொழிலை நவீனமயமாக்கல் உள்ளிட்டவை குறித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் கையால் மலம் அள்ளுபவர்களின் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் சஃபாய் கரம்சாரி அந்தோலனின் நிறுவனரும், ரமோன் மகசேசே விருது பெற்றவருமான பெஸ்வாடா வில்சனிடம் 'இந்து தமிழ் திசை'க்காக பேசினோம்.

30 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வுக்காகப் போராடுகிறீர்கள். என்ன மாற்றம் நடந்திருப்பதாக நினைக்கிறீர்கள் ?

எதுவுமே இன்னும் மாறவில்லை. எல்லாமே அப்படியே தான் இருக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள், கையால் மலம் அள்ளுபவர்கள் அனைவரும், அவர்களை அதிலிருந்து விடுவித்து, மறுவாழ்வுக்காக காத்துக் கிடக்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு வேண்டும். சமீபத்தில், மலம் அள்ளுவதற்கு பயன்படுத்தும் வாளிகளைக் கொளுத்தி பெண்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அரசு அவர்களை அத்தகைய மோசமான நிலையில் தான் வைத்திருக்கிறது.

மலக்குழியில் இறப்பவர்களின் எண்ணிக்கை, அத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறித்த தரவுகள் எப்படி கணக்கிடப்படுகிறது? இதில், மாநில அரசுகளின் செயல்பாடு எப்படி உள்ளது?

நாடு முழுவதும் 56,000 பேர் இன்னும் கையால் மலம் அள்ளுவதாக இந்திய அரசு சொல்கிறது. அதன் அர்த்தம், தடை செய்யப்பட்ட உலர் கழிவறைகள் இன்னும் இந்தியாவில் உள்ளன என்பதையே காட்டுகிறது. ஓராண்டுக்கு முன்பு கையால் மலம் அள்ளுபவர்களே இல்லை என்று அரசு சொன்னது. இப்போது, அந்த 56,000 பேர் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் எல்லோருமே எப்போதுமே அதே தொழிலைத் தானே செய்கின்றனர். இந்தாண்டு புதிதாக அந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் இல்லையே. ஆனால், எங்கள் அமைப்பிடம் உள்ள ஆதாரத்தின்படி, 1 லட்சத்து 60,000 பேர் கையால் மலம் அள்ளுபவர்கள் உள்ளனர். ஆனால், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அது சரியான எண்ணிக்கை இல்லை, குறைவானவர்கள் தான் அதில் ஈடுபடுகின்றனர் என்று சொல்கிறது.

இது இப்படியிருக்க, கழிவுநீர் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணிகளில் இருப்பவர்கள், அந்தப் பணியில் ஈடுபடும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசுகள் வெளியிட மாட்டோம் என்கின்றன. அரசு வெளிப்படையாக இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களைக் கணக்கெடுக்க வேண்டும். இல்லையென்றால், அப்படி யாரும் அந்தத் தொழிலில் ஈடுபடவில்லை என்று தான் அரசு சொல்லும். உண்மையை மறைப்பதோ, அல்லது அப்படியொன்று இல்லவே இல்லை என்று சொல்வது தான், மிகப்பெரும் குற்றம். 2019-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 11 பேர் கழிவுநீர் தொட்டியைச் சுத்தப்படுத்தும்போது இறந்துள்ளனர். 2018-ம் ஆண்டில் 105 பேர் இறந்தனர். ஒவ்வொரு நாளும் கழிவுநீர் தொட்டியில் இறக்கும் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்கின்றன.

புள்ளிவிவரங்கள் தரும் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆனால், துப்புரவுத் தொழில் புனிதமானது என்றும், துப்புரவுப் பணியாளர்கள் சேவகர்கள் என்றும் புகழப்படும் நிலை இன்னொரு பக்கம். இந்த இரண்டுக்கும் இடையில் சட்டம் என்ன செய்கிறது?

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது என்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்று. அப்படியிருக்கும் போது அரசு என்ன செய்ய வேண்டும்? துப்புரவுத் தொழிலாளர்களை, கையால் மலம் அள்ளுபவர்களை அதிலிருந்து விடுவித்து அவர்களின் மறுவாழ்வுக்காக வழி ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்குப் பதிலாக, அந்தத் தொழிலைப் பாராட்டி அவர்கள் அதையே தொடர்வதற்கான வேலைகள் தான் இங்கு நடக்கின்றன. கருத்தியல் ரீதியாக பார்த்தோமேயானால், இந்தத் தொழிலை தலித் மக்கள் தான் மேற்கொள்கின்றனர், இது தொடரக் கூடாது. அவர்கள் அதிலிருந்து வெளியே வர வேண்டும். அவர்களின் வாழ்க்கைக்கு அரசு பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். அவர்கள் ஏன் கழிவுநீர் அல்லது சாக்கடைத் தொட்டிகளில் மூழ்கி இறக்க வேண்டும்?

ஒருநாட்டின் உச்சபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றம் சட்டம் இயற்றியிருக்கும்போது, பிரதமர் அதனை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாமல், அவர்களின் கால்களை பிரதமர் மோடி சுத்தப்படுத்துவது என்பது, "நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதனைத் தொடருங்கள்" என்று சொல்வது போன்று உள்ளது. இது சட்டத்திற்கு எதிரானது.

இந்திய அரசியலமைப்பின் மதிப்பை நாம் காக்க வேண்டும். நீங்கள் அதனை எதிர்த்து நடக்கக் கூடாது. ஆனால், மனிதத் தன்மையற்ற அந்தத் தொழிலைப் புகழ்கிறார்கள், இது நல்லதல்ல. பொதுச்சமூகம் இதனைக் கண்டிக்க வேண்டும். மாறாக, அத்தொழிலைப் புகழ்வதன் மூலம், நீங்கள் நல்ல தொழிலைச் செய்கிறீர்கள் என்று சொல்வதாகி விடும். "நீங்களே எப்போதும் மனிதக்கழிவுகளை எப்போதும் சுத்தப்படுத்துங்கள்" என்று சொல்வது போன்று உள்ளது. இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பிரதமரிடம் கேட்க வேண்டும்.

மலம் அள்ளும் அவலத்தை ஒழிப்பதில் களத்தில் என்ன சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, இதைத்தடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளோ, ஒப்பந்ததாரர்களோ தண்டிக்கப்படுவதில் என்ன மாதிரியான சிக்கல்கள் உள்ளன?

சமீபத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். இதற்கு யார் பொறுப்பு? அச்சம்பவத்தில், முறையாக எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. கடந்த நவம்பர் மாதத்திலும் வாரணாசியில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தனர். ஒரு பிரதமராக, ஏன் இந்த இறப்புகள் குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை? அவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சத்தைத் தூக்கி எறிந்துவிட்டு கை கழுவினால் போதுமா? வாரணாசியில் மீண்டும் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்தால், அவர் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்துவிடுவாரா?

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கான சட்டம் முறையாகச் செயல்படவில்லை. ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் என்று வந்தால் இந்தியாவில் சட்டம் எல்லாம் ஒன்றுமே கிடையாது. அதுதான், இந்த முறை இன்னும் தொடர்வதற்குக் காரணமாக உள்ளது. அந்தத் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள், அவர்களின் மரணங்களுக்குக் காரணமான ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. அவர்களைத் தண்டிக்க வேண்டும் என அதிகாரிகள் நினைத்தாலும், வழக்குப் பதிவு செய்வதாக வெறுமனே கண் துடைப்பு நாடகம் ஒன்றை மட்டுமே நடத்துவார்கள்.

ஆனால் துப்புரவான இந்தியாவுக்காக பல நூறு கோடிக்கும் விளம்பரங்களும், பிரச்சாரங்களையும் அரசு செய்கிறதே. தூய்மை இந்தியா திட்டத்தில் 12 கோடிக்கும் அதிகமாக புதிய கழிவறைகளை கட்டியுள்ளதாக மத்திய அரசு சொல்கிறது.  முற்றாக அரசை நிராகரித்துவிடமுடியுமா?

எல்லா மாநிலங்களிலும் மனிதக் கழிவுகளை அள்ளுபவர்களின் மரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின்படி, அதிகப்படியான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அதன் அர்த்தம், கழிவறைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தான். ஆனால், அதனை யார் சுத்தம் செய்வது? சுத்தப்படுத்துவதற்கான முறைமை சரியாக இல்லை. கழிவறைகள், கழிவுநீர் குழாயுடன் இணைக்கப்படவில்லை. அந்த திட்டத்தின் வெற்றி என, கழிவறைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைத் தான் மோடி அரசாங்கம் சொல்கிறது. ஆனால், அது எந்த வகையிலும் துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு வழிவகுக்கவில்லை. கழிவறைகளை கட்டிக்கொண்டே இருப்பது இதற்கு தீர்வல்ல.

காங்கிரஸ் ஆட்சியிலும் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்களும், அவர்களுடைய பிரச்சினைகளும் மிக அதிகமாக இருந்தது. ஆனால், முற்போக்குவாதிகள் வேண்டுமென்றே பாஜக மீது அவதூறு பரப்புவதாக பாஜக சொல்வதற்கு என்ன பதில்?

ஆமாம், இந்தியாவின் எந்தக் கட்சியும் அவர்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் கழிவறைகள் குறித்து மட்டுமே பேசுகின்றனர். அதனை சுத்தம் செய்பவர்கள் குறித்துப் பேசவில்லை. ஆனால், துப்புரவு தொழிலாளர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளதும், அவர்களின் மறுவாழ்வுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதும் பாஜக அரசில் நடைபெறுகிறது. மலம் அள்ளும் தொழிலாளிகளின் மறுவாழ்வுக்கு நிதி கொடுக்க அரசிடம் பணம் இருக்கிறது. ஆனாலும், பாஜக அரசு வந்த பின்னர் அதிகபட்சமாக அதற்கு 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. 2012-2013 மற்றும் 2013-2014 ஆகிய பட்ஜெட்டின் போது 570 கோடி வரை மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மறுவாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். மோடி அரசுக்கு முன்பாக இதற்கு 580 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு நிதி ஆதாரம் குறைந்துவிட்டது. அவர்களுக்கு நிதி வழங்குவதிலோ, மாற்றுத் தொழில்களில் ஈடுபடுத்துவதிலோ பாஜக அரசுக்கு எந்த ஆர்வமும் இல்லை. அவர்களுக்கு போட்டி வேட்பாளர்களை தோற்கடிப்பதில் தான் ஆர்வம்.

தொழில்நுட்ப மேம்பாடு மலம் அள்ளும் அவலத்தை நீக்க எந்த அளவு உதவும்?

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை விடுவிக்க தொழில்நுட்பம் முக்கியமான மாற்றாக உள்ளது. அனால், தொழில்நுட்பம் மட்டுமே அதனைச் செய்துவிடாது. இயந்திரமுறை, துப்புரவுப் பணியை நவீனப்படுத்துதல் உள்ளிட்டவை நடக்க வேண்டும். டெல்லி அரசு, 200 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மலக்குழி இயந்திரங்களை வாங்கிக் கொடுத்துள்ளது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை. வங்கியிலிருந்து கடன் பெற்று டெல்லி அரசு அதனைச் செய்துள்ளது. அதனை மோடி போன்று ஒரு புகைப்படம் எடுத்து பப்ளிசிட்டி செய்வதற்கான ஒன்றாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது. அந்த இயந்திரங்களை டெல்லி அரசே வாங்கவில்லை, அதற்கென நிதி கூட ஒதுக்கவில்லை. இதில், டெல்லி அரசின் பங்கு என்ன? அந்த இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியும் மீண்டும் தலித் மக்களுக்குத் தானே வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு மறுதொழில் ஏதும் கொடுக்கப்படவில்லை. ஏற்கெனவே அந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்குத் தான் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் அவர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும். இன்னும் அது அவர்களின் கடமையாகத் தான் உள்ளது.

பொது சமூகத்தின் அறவுணர்வுக்கும், மலம் அள்ளும் அவல ஒழிப்பும் எந்த திசையில் பயணிப்பது இப்பிரச்னைக்கு தீர்வு தரும்?

பொதுமக்களுக்கு மலக்குழியில் ஒருவர் சிக்கி இறக்கும்போது எந்தவிதமான அதிர்வோ, அல்லது எந்த உணர்வும் ஏற்படுவதில்லை.

ஏனென்றால், இந்திய சாதி முறையும், அதையொட்டி வரும் ஆதிக்கமும் தான் காரணம். அந்த சாதி, மக்களை இதுகுறித்து யோசிக்கவிடுவதில்லை. அதனால் அவர்களுக்கு எந்த குற்றவுணர்வும் ஏற்படாது. இந்த அசாதாரண மரணங்களை, தொழிலை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். இதுகுறித்து பொதுச் சமூகம் கேள்வி எழுப்ப வேண்டும்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x